Sunday, April 04, 2010

தனிமையின் இசை




அய்யனாரின் தனிமையின் இசை கவிதை தொகுப்பின் மீதான என் பார்வையை,அனுபவத்தை இங்கே பதிவு செய்வதில் மகிழ்கிறேன்.

அய்யனாரின் கவிதைகளை இங்கொன்றும் அங்கொன்றுமாக இணையத்தில் படித்ததுண்டு. வம்சி வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் அக்கவிதைகளை மொத்தமாக படிக்கும்போது ஏற்படும் நிறைவு இணையக்த்தில் படிக்கும் போது கிடைத்தாக ஞாபகமில்லை.

நெகிழ்வு,அலைவு,பிறழ்வு,மய்யம் என்ற நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் பல்வேறு உணர்வுகளை வாசகனுக்குள் தெளித்துச்செல்கின்றன.

அய்யனாரின் கவிதைகளின் பலமாக கவிதைமொழியை சொல்ல முடியும்.மொழி இவருக்கு கூப்பிடும் தூரத்தில் இருப்பதாகவே ஒவ்வொரு கவிதைவரிகளும் பறைசாற்றுகின்றன. அதனால்தான் எதைப்பற்றியும் அல்லது பற்றாமலும் கவிதைகளை தந்திருக்க முடிகிறது இவரால்.

நெகிழ்வு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அழகியலை முன்வைக்கும்போதும் செறிவான சொற்களும் அடர்த்தியான வரிகளும் கவிதைகளுக்கு வலு சேர்க்கின்றன. கவிதைக்குள் நுழையும் முன்னரே அதன் தலைப்புகள் வாசகனின் மனதோடு நெருக்கமாகிவிடுகின்றன. உதாரணமாக மழையின் ஈரக்கைகள்,ஆற்றின் உட்பரப்பு,உட்குளம்,மழைக்கால கிளர்வுகள் போன்ற தலைப்புகளை மேற்கோள் காட்டமுடியும்.
ஆற்றின் உட்பரப்பு கவிதையை முதலில் மெளனமாக வாசித்துப் பார்த்தேன். பின் சத்தமிட்டு வாசித்துப்பார்த்தேன். மெளனத்திற்கும் சப்தத்திற்கும் இடையே வெவ்வேறு அனுபவமாக விரிந்தது இக்கவிதை. ஒரு ஆற்றை பற்றி விவரித்துக்கொண்டே செல்கிறார் கவிஞர். ஆற்றில் குளிக்க வந்த நடுவயதுக்காரி நீரின் குளுமையில் சிலிர்த்து தவற விடும் ரவிக்கை,ஆற்றில் மிதந்து சென்ற பிணம்,தன் பிம்பத்தை உற்றுநோக்கும் செம்மறி ஆட்டுக்குட்டி இப்படியாக நீள்கின்ற வரிகள் கடைசியில் “காட்சிகளை விழுங்கியபடி சலனமற்று விழித்திருக்கும் ஆற்றின் உட்பரப்பு” என்று முடிக்கிறார் கவிஞர். இந்த கடைசி வரியை சலனமற்று விழித்திருக்கும் நம் ஆழ்மனதின் தனிமையாக உருவகப்படுத்துக்கொள்ள முடிகிறது.

அலைவு தலைப்பின் கீழுள்ள கவிதைகள் புலம்பெயர்ந்த வலியை,ஏக்கத்தை,நிறைவேறா கனவுகளை,பிரிவுத்துயரை,தனிமையை பாடுபொருளாக கொண்டவை. எதுவுமற்று இருத்தல் என்றொரு கவிதை இதிலுண்டு. அக்கவிதையின் சாயலையே பிற கவிதைகளிலும் வெவ்வேறு ரூபத்தில் காண முடிகிறது. தனிமையின் குரூரத்தையும் அதன் மூலம் பிறக்கும் ஞானத்தையும் பல கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் அய்யனார்.

பிறழ்வு தலைப்பின் கீழ் மொத்தம் இருபது கவிதைகள் இருக்கின்றன. இந்தக் கவிதைகளில் பெரும்பாலானவை பிறழ்ந்த மனநிலையை அல்லது சூழலை வெகு கனமான சொற்களால் விவரிப்பவை. இதில் ஆகச்சிறந்த கவிதையாக குற்றவுணர்விலிருந்து விடுபடல் கவிதையை சொல்லலாம். “ஒரு பெண்ணை முத்தமிடுமுன் சற்று யோசியுங்கள் பின்னெப்போதாவது அவை மீளவே முடியாத பின்னிரவுக் குற்றவுணர்வுகளின் ஊற்றுக்கண்ணாகி விடலாம்” என்று தொடங்குகின்ற கவிதை தவறொன்றை செய்துவிட்டு பின் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் மனதை பற்றி அற்புதமாக விவரித்துச் செல்கிறது. இக்கவிதையின் கடைசி வரிகள் இப்படி முடிகிறது
குற்றவுணர்வுகளற்ற இருப்பு மெதுவாய் நகரும் மேகங்களுக்குள்ளும் வேப்பமரக் கிளைகளிடையேயும் எவருக்கும் தெரியாமல் ஒளிந்துகொண்டுள்ளது

மய்யம் தலைப்பின் கீழுள்ள கவிதைகளில் பல மிகை எதார்த்த வகைமையை சார்த்தவை. இத்தொகுப்பில் என்னை அதிகம் ஈர்க்காத பகுதி எனில் அது இந்த மய்யம் பகுதிதான். கப்பல்காரி,உடலைப் புசித்தல் போன்ற கவிதைகள் தொகுப்பின் கனத்தை குறைக்கக்கூடிய கவிதைகள். அவற்றை தவிர்த்திருக்கலாம்.
மொத்தத்தில் அய்யனாரின் கவிதையுலகம் காதல்,கட்டுப்பாடற்ற காமம்,பெண்கள்,கலாச்சாரத்தை உடைத்தெறிதல்,போலிகளின் முகத்தில் எச்சில் உமிழ்தல்,மாய எதார்த்த உலகின் வசீகர கனவுகள்,எள்ளல்,சுயவிசாரணை என்று விரிந்திருக்கிறது. உரைநடை தன்மையிலான ஒன்றிரண்டு கவிதைகளை கழித்துவிட்டு பார்த்தால் “தனிமையின் இசை” நவீன கவிதை உலகில் முக்கியமான புதுவரவு. ஆழ்ந்த இலக்கிய வாசிப்பும்,வாழ்வனுபவமும், மொழிமீதான தீராத வேட்கையுமே அய்யனாரின் பலம். இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார் என்பதை உறுதியாக சொல்லலாம்.

சொற்கப்பல் விமர்சன தளத்தில் வாய்ப்பளித்த பொன்.வாசுதேவன் அவர்களுக்கு எப்போதும் என் நட்பும்,நன்றியும்.

-நிலாரசிகன்.

பின்குறிப்பு: சொற்கப்பல் விமர்சன கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை.நண்பர் ச.முத்துவேல் இக்கட்டுரையை வாசித்தார்.அவருக்கும் நன்றி.

9 comments:

said...

நேர்பட விமர்சித்திருக்கிறீர்கள்... :)

said...

நன்றி நா.போ.

said...

நல்ல விமர்சனம் நிலா.
ஒன்றிரண்டு கவிதைகளை கொடுத்திருக்கலாம்.
(நம்ம 'இன்னபிறவும்' உங்கள் கண்களில் பட்டதா?)

said...

:)

said...

"தனிமையின் இசை" படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது இந்த விமர்சனம்.

said...

nantru......!

said...

பகிர்வுக்கு நன்றி கவிஞரே.

said...

வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை. வாசிக்கத் தூண்டும்படியான பகிர்வு!

said...

//இனி வரும் தொகுப்புகளில் அய்யனார் தனக்கான தனிமொழியை அடைந்துவிடுவார்//

படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது விமர்சனம்.