Thursday, April 04, 2013

கவிதைகள் ஐந்து

1.தனியனின் உலகம்

திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே
வருகையில் அவன் அழுததை
யாரும் கவனிக்கவில்லை.
கொஞ்சமாய் அவனுக்கு அந்த
புதுமுக நடிகையை பிடித்திருந்தது.
அவளுடன் பேசவும் தோன்றியிருக்கலாம்.
எதிரே இருந்த பெட்டிக்கடையில்
தொங்குகின்ற வாரயிதழின் அட்டையில்
சிரித்துக்கொண்டிருப்பவளை கண்டான்.
கண்கள் உருட்டி தலைசாய்த்து
அவள் தோன்றும் காட்சி மீண்டும் மீண்டும்
மனதின் ஒருபக்கத்திலிருந்து மறுபக்கம் வரை
ஓடிக்கொண்டே இருந்தது.
பிடித்த பாடலொன்றை முணுமுணுத்தபடி
அறை நோக்கி நடக்க துவங்கினான்.
கடந்து செல்லும் வாகனங்கள்
அனைத்திலிருந்தும் அவள் எட்டிப்பார்ப்பதாய்
எண்ணிக்கொண்டு பேரானந்தத்துடன்
அறைக்குள் நுழைந்து உடை மாற்றினான்.
அவள் யாரைப்போலுமில்லை என்பது
ஆசுவாசம் தந்தது.
அவளுக்கு ஒரு முத்தம் கொடுத்துப்பார்த்தான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை.
மீண்டும் ஒரு முத்தம்.
விடியலில் அறையெங்கும் சிதறிக்கிடக்கும்
முத்தத்தின் மேல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான்
அந்த நாற்பத்தி ஏழு வயது தனியன்.


2.அப்புக்குட்டன் துபாய்க்கு போகிறான்

தேரிக்காட்டில் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்
பதின்ம வயது சிறுவர்கள்.
பட்டத்திலொன்று அறுந்து காற்றின் வேகத்தில்
மிக வேகமாய் திசைதப்பியது.
அறுந்த பட்டத்தை பிடிக்க நான்கு கால்கள்
ஓடிய கணத்தில் மேலும் இரண்டு கால்கள்
அந்த ஓட்டத்தை முந்திச்சென்றன.
ஆம் அப்புக்குட்டனின் அறிமுகம்
இப்படித்தான் ஆரம்பம்.
பனை மரத்தில் சிக்கிய பட்டத்தை கிழிந்துவிடாமல்
மெதுவாய் எடுத்து வெற்றிச்சிரிப்புடன்
இறங்க துவங்கியபொழுதுதான் முதன்முதலாய்
அந்த விமானத்தை பார்த்தான் அப்புக்குட்டன்.
அன்றிலிருந்து மூன்று நாட்களாய்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
அலைந்தவனை அவனது
நாய்க்குட்டிகள் பயத்துடன் பார்த்தன.
தன் பத்தொன்பதாவது வயதின்
இரவொன்றில்
நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல்
பயணித்தவர்களில் இவனும் ஒருவன்.
மீனம்பாக்கத்தில் இரண்டு நாட்கள்
சட்டை கிழிந்த பைத்தியக்காரனுடனும்
மஞ்சள் கறை பற்களுடன் சிரிக்கும்
பிச்சைக்காரனுடனும் சுற்றிக்கொண்டு
தலைமீது கடக்கும் உலோக பறவைகளை
ரசித்து லயித்து திரிந்தான்.
கிழவியின் பாம்படம் முதல் கிழவரின்
வெள்ளி அரைக்கொடி வரை விற்ற பணத்தில்
துபாய்க்கு போகும் டிக்கெட்டை இவன்
கைகளில் திணித்தார்கள்.
மந்திரித்து விட்டவனாய் மின்சார ரயிலில்
சுற்றியவன் கடவுச்சீட்டை
தொலைத்ததும்
திறந்த வாயும் விரிந்த கண்ணுமாய்
புலம்பித்திரிந்ததும் அப்புக்குட்டனின்
கறுப்புச் சரித்திரத்தின் தரித்திரபக்கங்கள்
என்பதால் இத்துடன் அப்புக்குட்டனின்
விமானக்கனவு முற்றுப்பெறுகிறது


3.முகநூல் காதல் அல்லது கருமம்

எதையோ அவனது கண்கள்
மிக வேகமாய் தேடுகின்றன.
குழந்தையொன்றின் புகைப்படத்தை கடந்து
அன்று வெளியான திரைப்படத்திற்கான
விமர்சனத்தை விரைவாக வாசித்து
நகர்கின்றன.
சிறுபெட்டியில் முகமன் சொல்லும்
சினேகிதனை மறுதலித்து மேலிருந்து
கீழ்நோக்கி நகருமவன் எதைத் தேடுகிறோம்
என்பதை அறியாதவனாய் இருக்கிறான்.
பின்னிரவு வரை தேடி ஒன்றும் கிடைக்காத
விரக்தியில் மீண்டும் மேலிருந்து துவங்குகிறான்.
ஒரு புன்னகையுடன் எட்டாயிரம் மைலுக்கு
அப்பால் அவனது பதற்றத்தை உணர்ந்துகொள்ளுமவள்
வேறு ஒருவனின் காதல் குறித்த
நிலைத்தகவலுக்கு விருப்பம் தெரிவிக்கிறாள்.
முகமற்றவளை முகநூலில் அதீதமாய்
நேசித்தவன் உடைந்தழுகிறான்.
இரவு தன் கணித்திரையின் கண்களால்
அவனை உற்று நோக்குகிறது.
யாருமற்ற அந்த அறையில் அவனது
கைகள் எதையோ
மிக வேகமாய் தேடத் துவங்குகின்றன.


4.ஒரு நகரவாசியின் ஞாயிற்றுக்கிழமை மதியப்பொழுது

திடீரென்று கதவு தட்டப்படும்
ஓசை கேட்டவுடன் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
உச்சிவெய்யிலிலும் தேநீர் தயாரித்தும்
முறுக்கு அல்லது சிப்ஸ் கொஞ்சமும்
எடுத்துவைக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆதாம் கால செய்தி முதல்
அடுத்த தெரு பசு, கன்று ஈனியது வரையிலான
உரையாடல்களை புன்னகையுடன் கவனிக்கவும் வேண்டும்.
மதிய தூக்கத்திற்கான கொட்டாவியை
கெட்ட ஆவிகளென துரத்திவிடல் நன்று.
திருட்டுத்தனமாக கடிகாரத்தை இரண்டு
நிமிடங்களுக்கு ஒருமுறை பார்க்கவும்
பயின்றிருத்தல் அவசியம்.
நான்கு அல்லது ஐந்து மணியைக் கடந்தும்
வெளியேறவில்லையெனில்
உங்களது இருசக்கர வாகனத்தை
எடுத்துக்கொண்டு கடற்கரை அல்லது
பூங்காவிற்கு சென்று விடல் உத்தமம்.
காய்ந்த ரோஜாவொன்றை கையில்வைத்துக்கொண்டு
புதிய காதலையோ அல்லது
தொலைந்து போன இருபத்தி ஏழாவது
காதலையோ தேடி அலையலாம்.
எதுவும் அமையாத துக்கத்தில்
இரவு ஏழு மணிக்கு வீடு திரும்புகையில்
வாசற்படியில் செருப்புகள் கிடப்பின்
அதிலொன்றை எடுத்து
தலையில் அடித்துக் கொண்டு
ஒன்றும் நடந்துவிடாத பாவனையில்
உங்களது விருந்தினருக்கு ஒரு
ஏக்கப் புன்னகையை பரிசளிக்கவும்
தெரிந்திருந்தால் உங்களுக்கு
நகரவாசி என்று பெயர்.


5.அங்காடிக் கண்கள்

கண்ணாடிக்கதவை திறந்தவுடன் உடல்தொடும்
குளிர்காற்றை ஒரு கணம் கண்கள் மூடி
ரசித்து உள்ளே ஓடுகிறது குழந்தை.
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்
ஒவ்வொன்றையும் எடுத்துவிடும் வேகத்துடன்
கை நீட்டுகிறது.
குழந்தைக்கு பின் ஓடும் இளம் தாய்
அழகான கரும்பச்சை நிற சுடிதார் அணிந்திருக்கிறாள்.
அவள் உடையிலிருக்கும் சின்னஞ்சிறு
பூக்கள் குழந்தையையும் அந்த பெரிய
அங்காடியின் பொருட்களையும் ஆச்சர்யத்துடன்
பார்த்துக்கொண்டு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன.
நான்
குழந்தையின் கண்கள் வழியே
பொருட்களையும்
பொருட்களின் கண்கள் வழியே
பூக்களையும்
பூக்களின் கண்கள் வழியே
அந்தப் பெரும் அங்காடியையும்
பார்த்துக்கொண்டிருந்தேன்.
இளம் தாயின் கண்கள்
யாரும் இல்லா மூலையொன்றில்
படபடத்த கணம்
என் டிஜிட்டல் கண்களில் மிக
அழகாய் நிரந்தர பதிவானாள்.
 



  -நிலாரசிகன்.

3 comments:

said...

உங்கள் சமீபத்திய (அதாவது கடந்த ஒரு வருடத்திய) கவிதைகள் என்னை மிகவும் கவர்கின்றன ... தரமும் தளமும் அருமையாகக் கூடிக் கொண்டே போகின்றன ...

said...

ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்கிறது... அருமை...

தொடர வாழ்த்துக்கள்...

said...

nallaayiruku nila
vaazhthukal...