Friday, January 09, 2009

வாசித்து நேசித்த புத்தகங்கள்

வாங்கவேண்டிய புத்தகங்கள் இழை என்றுதான் ஆரம்பிக்கலாம்
என்றெண்ணியிருந்தேன். எனக்கு பிடித்தவை பிறருக்கு பிடிக்காமல்
போகலாம். அதனால் இங்கே நான் சமீப காலங்களில் வாசித்து,மனதில்
நின்ற புத்தகங்களை பட்டியலிடுகிறேன். புத்தக திருவிழா நடக்கும் சென்னையில்
10% தள்ளுபடியில் வாங்கிக்கொள்ள வசதியான தருணமிது.

சிறுகதை தொகுப்புகள்:

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்
[நர்மதாவில் கிடைக்கலாம்]

மண்வாசமும்,வட்டார வழக்கும் குறையாத படைப்புகளால் மனதை அள்ளுவதில் சிறந்த
படைப்பாளியான கண்மணி குணசேகரனின் சிறுகதை தொகுப்பு. குலைவு,குருதிச் சுவடு தொகுப்பிலுள்ள சிறந்த
கதைகள்

மண்பூதம் - வாமு.கோமு[உயிர்மை பதிப்பகம்]

காமத்தின் மூலம் சமுதாய அவலங்களை நெற்றி பொட்டில் அடிப்பது போல் கதை எழுதுவதில் தேர்ந்தவர்
வா.மு.கோமு. இவருடைய 'அழுவாச்சி வருதுங் சாமி' சிறுகதை தொகுப்பை படித்தபின் இவருடைய மற்ற
படைப்புகள் அனைத்தையும் தேடிப்பிடித்து படித்தேன். மண்பூதம் தொகுப்பில் "பச்சை மனிதன்" கதை
மாந்ரீக யதார்த்தத்தை முன்வைக்கிறது.மற்ற கதைகளும் நன்று.

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

மிகச்சிறந்த தொகுப்பு இது என்பதை தவிர வேறென்ன சொல்ல? குறிப்பாக 'மரப்பாச்சி' சிறுகதை. மரப்பாச்சி
பொம்மைக்கும் ஒரு சிறுமிக்கும் இடையேயான உறவை,பந்தத்தை அதி அற்புதமாக எழுத்துப்படுத்தியிருக்கிறார்.
இந்தக் கதை படித்த பின் இருநாட்கள் வேறெதிலும் மனம் லயிக்க வில்லை. மனம் கனத்தும் போனது.

புனைவின் நிழலில் - மனோஜ்[உயிர்மை]

மனித மனத்தின் கற்பனைக்கு எல்லையே இல்லை.அது பயணிக்கும் இடங்களில் நம் பூத உடலால் பயணிக்க
இயலாது.புனைவின் உச்சம் தொட்ட மிகச்சில படைப்புகளில் இதுவும் ஒன்று. மனோஜ்ஜின் கதைகள் நம்மை
நாம் காணாத உலகிற்கு இட்டுச்செல்கின்றன."கச்சை" என்றொரு கதை. படித்துப்பாருங்கள். படிக்கும்போது

உடல்சில்லிட்டுப்போனது.[My all time fave book listல் இதுவும் ஒன்று]

சைக்கிள் முனி - இரா.முருகன்[கிழக்கு பதிப்பகம்]

இரா.முருகனால் எதையும் எழுதிவிட முடியும்.
அறிவியல் புனைக்கதையாகட்டும்,நகைச்சுவையாகட்டும் தனக்கு கைவந்த சொல்லாடல்களால் பிரமிக்க
வைக்கிறார். நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கிறது.

பிராந்து - நாஞ்சில் நாடன்

நாஞ்சில் நாடனின் அவருக்கே உரிதான அங்கதத்துடன் சிறுகதைகள் எழுதுவதில் வல்லவர். இந்த தொகுப்பிலும்
அதனை உணரலாம்.

பதினெட்டாம் நூற்றாண்டு மழை - எஸ்.ராமகிருஷ்ணன்[உயிர்மை]

நேற்று வாங்கி இன்று வாசித்து முடித்த புத்தகம் இது. ஏற்கனவே ஒரு சில கதைகளை உயிர்மையிலும் எஸ்.ராவின்
வலைப்பதிவிலும் படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் என்னைக் கவர்ந்தது இந்த ஊரிலும் பறவைகள்

இருக்கின்றன,இல்மொழி,மஞ்சள் கொக்கு,வீட்டு ஆணி. எஸ்.ராவிற்கே உரிய இயல்பான மொழிநடையில்
மனதை அள்ளுகின்றன கதைகள் அனைத்தும்.

பெய்தலும்,ஓய்தலும் - வண்ணதாசன்[சந்தியா பதிப்பகம்]

நினைத்தவுடன் நெஞ்சுக்குள் மழை பொழிய வேண்டுமா? வண்ணதாசன் வாசியுங்கள். [இதற்கு மேல் என்ன
சொல்ல இந்த நெல்லை மைந்தனை பற்றி?]

அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி[வம்சி புக்ஸ்]

பாஸ்கர் சக்தி "மெட்டிஒலி" வசனகர்த்தா. வெகு இயல்பான கதைகள்,காட்சிப்படுத்துதலால் தனித்து
நிற்கிறார். எழுதுகின்ற வரிகளை விட எழுதாத வரிகளின் வீரியம் இவர் கதைகளில் உணரலாம்.
வாசித்தபின்னர் மனதுள் எழுகின்ற கேள்விகளும்,விடைகளும் சிறந்த கதைசொல்லி இவர்
என்பதை உணர்த்துகிறது.

விசும்பு-ஜெயமோகன்[உயிர்மை?]

அறிவியல் புனைக்கதைகள் நிறைந்த தொகுப்பு.கரைபுரண்டோடும் ஜெயமோகனின் எழுத்துக்கள்
சில சிறுகதைகளை நெடுங்கதைகளாக்கி இருக்கின்றது. அவரது புனைவாற்றல் புலப்படுகிறது.

வெய்யில் உலர்த்திய வீடு - எஸ்.செந்தில்குமார்[உயிர்மை]

நவீன சிறுகதையுலகில் தனக்கென ஓர் இடம் பெற்றிருப்பவர் எஸ்.செந்தில்குமார். பல சிறுகதைகளில்
தனித்து நிற்கிறார். பேனா பற்றிய கதை மிகச்சிறந்த புனைவு.

புலிப்பானி ஜோதிடர் - காலபைரவன் - [சந்தியா பதிப்பகம்]

விளிம்பு நிலை மக்களை பற்றிய இவரது பார்வையும் பரிவும் மகிழ்வூட்டுகின்றன. பாவண்ணன் சிறந்த
தொகுப்பாக ஒரு கட்டுரையில் இதனை சொல்லியிருந்தார் அதற்கேற்றார்போல் கதைகளும் அருமை.

இன்று பன்னிரண்டு சிறுகதை தொகுப்புகளை பட்டியலிட்டிருக்கிறேன். இவை அண்மையில்(கடந்த இரு வருடங்களுக்குள்)
நான் வாசித்தவை.

சிறுகதை மன்னர்களாக திகழ்ந்த தி.ஜா,கு.அழகிரிசாமி,ஜெயகாந்தன்,லா.ச.ரா இன்னும் பல ஜாம்பவான்களின் கதைகளை
படிக்க விரும்பினால் "முத்துக்கள் பத்து" என்கிற தலைப்பில் அவர்கள் எழுதிய சிறந்த பத்து கதைகளை "அம்ருதா" பதிப்பகம்
வெளியிட்டிருக்கிறது வாங்கி படித்து/பாதுகாத்து மகிழுங்கள்.

இதேபோல் புதுக்கவிதை,நவீனகவிதை,நாவல்,கட்டுரை ஆகிய களங்களின் நான் வாசித்து நேசித்தவை
தொடர்ந்து எழுதுகிறேன்.

தனிமையின் துணையாக,உடன்வரும் நிழலாக,தோள்சாயும் நட்பாக எப்போதுமிருக்கும் புத்தக நண்பர்களை உங்களோடு

பகிர்ந்துகொண்டதில் மகிழ்ந்து,
-நிலாரசிகன்.

4 comments:

said...

சமீப காலமாக வார இதழ்கள மட்டுமே வாசித்து வந்த எனக்கு வலைக்குள் வந்த பிறகு நிறைய தேடி வாசிக்கும் ஆர்வம் வந்துள்ளது. இந்தப் பதிவு எனக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். மிக்க நன்றி. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

said...

ம்ம்ம்....நீங்கள் புத்தகத்தை அறிமுகப் படுத்தியதே அழகிய நதி போல அழகாக நடை போடுகிறது...
அன்புடன் அருணா

said...

நல்ல தேர்வுகள்!!
மேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி "சித்திரக்கூடு'

said...

நல்ல தேர்வுகள்!!
மேலும் ஒன்று : லக்ஷ்மி மணிவண்ணனின் சிறுகதை தொகுதி "சித்திரக்கூடு'