Monday, November 28, 2005

என் நினைவோடையில் நீந்துகின்ற மீன்கள்...

இது நான் கடந்து வந்த பாதையில் சந்தித்த மறக்க முடியாத சில இதயங்களைப் பற்றிய பதிவுகள்..


1.தொபரா டீச்சர்:-

என் விரல் பிடித்து அ,ஆ எழுத சொல்லித் தந்த என் முதல் வகுப்பு
ஆசிரியை இவர்.

தோளில் புத்தகப்பையுடன்,எண்ணெய் தேய்த்து வகிடெடுத்து சீவிய தலையுடன்
பள்ளிச் சென்று வந்த பசுமையான காலம் அது.

பள்ளிச் செல்ல மறுத்து அடம்பிடிக்கும் குழந்தைகள் பார்த்திருப்பீர்கள்.
பள்ளிச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தை கண்டதுண்டா?

நான் அடம்பிடித்திருக்கிறேன்...

எங்கள் கிராமத்தில் முதல் முதலில் துவக்கப்பட்ட ஆங்கிலப் பள்ளி அது.

அதில்தான் என்னைச் சேர்த்தார்கள்...

அது ஒரு பெரிய பங்களா. அதை பள்ளியாக மாற்றி இருந்தார்கள்.

(இன்று அதை மாற்றி ஒரு கணிப்பொறி மையம் வந்துவிட்டது...அந்த இடத்தை
கடக்கும் போதெல்லாம் மனம் கனமாகி விழியோரம் வழிந்துவிடும்)

எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது.

எங்கள் வகுப்புக்கு பலர் ஆசிரியர்களாக வந்துச் சென்றனர்...ஆனால் இந்தச் சிறிய
இதயத்தின் மிகப்பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர் தொபரா டீச்சர் மட்டும்தான்.

அம்மா நியாபகம் வந்து அழுகின்ற குழந்தைகளை அன்போடு அணைத்து,கண்ணீர் துடைத்து நேசத்துடன் பாடம் நடத்துகின்ற ஒரு ஜீவன் சிறுவகுப்பு ஆசிரியர்கள்
மட்டும்தானே?

எத்தனையோ குழந்தைகள் பள்ளி என்று மறந்து "அம்மா" என்று அழைப்பதெல்லாம் அந்த அன்பான ஜீவன்களைப் பார்த்துதான்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்...
தெய்வமே செய்கின்ற தொழில்தானோ ஆசிரிப்பணி?


எங்கள் தொபரா டீச்சர் அன்பானவர்.
அவரைப் போலவே அவரது கையெழுத்தும் மிகவும் அழகாய் இருக்கும்.

மற்றவர்களை விட அவர் என்னிடம் மிகவும் பாசமாக இருந்ததாக பட்டதுஅந்த புரியாத வயதில்.

என்னால் என்றுமே மறக்க முடியாத நிகழ்வு ஒன்று நடந்தது.

டீச்சர் உங்களுக்கு நினைவிருக்கிறதா?

எளிதில் கோபப்படாத நீங்கள் ஒருநாள் என்னைத் திட்டிவிட்டீர்கள்.

பனித்துளி விழுந்தால் பூக்கள் தாங்கிக்கொள்ளும். ஆனால் இந்தச் சின்னப்பூவின் மேல் பாறை அல்லவா விழுந்தது...

உடைந்து போன நான் வகுப்பு நடக்கும்போதே வீட்டிற்கு ஓடிவிடுகிறேன்.

எல்லோரிடமும் நீங்கள் என்னைத் திட்டியதைச் சொல்லி அழுகிறேன்.
அதன் பின் என் வீட்டினர் என்னை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்துவந்து விட்டுச் சென்றனர்...

அப்போது மதியவேளை....கொண்டுவந்த சாப்பாடு பாத்திரம் திறந்துவரிசையாய் எல்லோருடனும் அமர்ந்து சாப்பிட ஆரம்பிக்கிறேன்...
அங்கே நீங்கள் வந்தீர்கள்....

செதுக்குகின்ற சிற்பத்திற்கு வலிக்கும் என்று உளிக்கு தெரியாதா என்ன!

அன்றுதான் முதல் முதலில் உங்கள்கண்கள் கலங்கியதை கண்டேன்....(இந்த நிமிடமும்..இதை எழுதுகின்றஇந்த நொடியிலும் என் விழியோரம் நீர்த்துளிகள்...)

என்னை அன்போடு அணைத்துக்கொண்டீர்கள்...எனக்கு அந்த நேசத்தின்அணைப்பை வார்த்தைகளில் எழுத தெரியவில்லை டீச்சர்.

அதுநாள் வரை எனக்கு அறிவூட்டியவர்கள் அன்று எனக்குஉணவூட்டி உயிர்மலரச்செய்தீர்கள்.

நாட்கள் நதியாய் நகரத் தொடங்கியதில் நான் உயர்நிலைப்பள்ளிக்குமாறினேன்....

புது நண்பர்கள்...புது பள்ளி....என்று வந்த மாற்றத்தில் உங்களை நான்மறந்து போனேன்....

அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்...

என் தோழன் ஒருவன் வந்து என் கையில் ஒரு திருமண பத்திரிக்கைதிணித்துச் சென்றான்...

பிரித்துப் பார்த்தேன்....உங்கள் திருமண அழைப்பிதழ் அது....

ஏறக்குறைய ஏழுவருடங்களாக என் நினைவில் இருந்தே மறைந்து விட்ட உங்கள் பெயரை அன்று அந்த பத்திரிக்கையில் பார்த்தேன்.

என்னை மறக்காமல் நீங்கள் பத்திரிக்கை அனுப்பி இருந்தது கண்டு சில நிமிடங்கள் என்னால் பேச முடியவில்லை டீச்சர்.

அன்று விழுந்த உங்கள் அன்பு நினைவுவிதை விருட்சமாக வளர்ந்து இன்னும் பூக்கள் சிந்திக்கொண்டிருக்கிறது என் இதயத்தில்.

உங்களை சந்தித்து பதினாறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது....நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள் என்றுகூட எனக்குத் தெரியாது.

எனக்கு ஒரே ஒரு ஆசை இருக்கிறது டீச்சர்.

என்றாவது உங்களை சந்திக்க நேர்ந்தால்...

எனக்கு தமிழை அறிமுகப்படுத்திய உங்களிடம் என் கவிதைகளை எல்லாம்படித்துக் காண்பிக்க வேண்டும்..

படித்து முடித்த பின் மலருகின்ற உங்கள் விழிகளில் என் உயிர்கரைய வேண்டும்.

என்றாவது இதைப் படித்து என் பெயர் கண்டு எனை நினைவுகூர்ந்து நீங்கள் கண்டுபிடித்தால் அதுபோதும் எனக்கு.

கொஞ்சம் அழுவேண்டும் இப்போது நான்...இது கவலைக்கண்ணீரோ ஆனந்தக் கண்ணீரோ அல்ல.

ஒரு பெயர்தெரியாத பாசத்தின் வெளிப்பாடு...

பழைய பாசநினைவில் மூழ்கியபடி...
நிலாரசிகன்.

4 comments:

Anonymous said...

really this Kavidhai is highlight.....by reading this i really want to see that teacher.

i have read only few of ur kavidhai but within those few.....u have showed lot of internal feeling which cannot express in simple words but u did it.....

hats of to u.....!!!!!!!!!!!

Anonymous said...

Dr. Nila rasiganey,

arumayana varigal-il oru arumayana kavithai.

en kangal kalangivittana...

with luv,

Mahalingam Natarajan
natrajnm@yahoo.co.uk

said...

ரொம்ப நல்லா இருக்கு கொஞ்சம் கண் கலங்க வைக்குதே உங்க பதிவு!

said...

கண்கலங்கீருச்சு நிலா.