எங்கேனும் எப்போதேனும் இவை உங்களுக்கும் நிகழ்திருக்கலாம்...சட்டென்று தோன்றி மறைந்திருக்கலாம்...
இவைகளை கவிதைகள் என்று சொல்வதைவிட
மனதின் வார்த்தைகள் என்றே சொல்ல விரும்புகிறேன்..
இந்த "மனம் பேசும் வார்த்தைகள்" பிடித்திருந்தால் சொல்லுங்கள்
தொடருகிறேன்.
----------------------------------------------------------------------
அழகிய பூனைக்குட்டி
ரசிக்கமுடியவில்லை
சாலையோரம் உயிரற்று
ஈக்கள் மொய்க்கும்போது.
-----------------------------------------------------------------------
ஓடிச்சென்று நனைந்துவிட
நினைப்பதற்குள் நின்றுவிட்டது
மழை..
மண்வாசத்தில் நனைகிறது
உயிர்.
-----------------------------------------------------
மனக்கருவினுள்
பலவருடமாய் சுமந்து
திரியும் இறந்தகுழந்தை
சொல்லாத காதல்!
-----------------------------------------------------
மழையில் நனைய
விரும்பும் போதெல்லாம்
நினைத்துக்கொள்வேன்
என்னிடம் நீ
பேசிய வார்த்தைகளை..
------------------------------------------------
உன் பதில் கேட்கவே
காத்திருக்கிறேன்
கல்லறையில் பூவாக.
-------------------------------------------
உறவுகளுக்காக விட்டுக்
கொடுத்தல் நிகழும்
மனங்களை எதனோடு
ஒப்பிடலாம்?
கோவிலைத் தவிர!
---------------------------------------------
பிறர்க்காக கன்னம்நனைக்கும்
கண்ணீர்த்துளிக்குள்
ஒளிந்திருக்கின்றன
சில சமுத்திரங்கள்.
----------------------------------------------