Monday, February 25, 2008

குட்டிக் கவிதைகள் - பாகம் 2


1.பறந்து கொண்டே புணர்கின்ற
வண்ணத்துப் பூச்சிகளைக் கண்டு
வெட்கி சிவக்கிறது கிழக்கு.

2.கண்ணீரைத் துடைக்கின்ற விரல்கள்
அறிவதில்லை காயத்தின்
ஆழங்களை.

3.அறியாத காரணத்துடன்
சத்தமிட்டு அழுகிறது குழந்தை
இழவு வீட்டில்.

4.குளத்தில் தவறி விழுந்தது
தூண்டில்.
சிரித்துக்கொண்டன மீன்கள்.

5.அடைமழையிலும் அழியவில்லை
குறவன் கல்லறை மேல்
காக்கை எச்சம்.

6.கையசைக்கும் கற்பூரம்
ஆராதனை தட்டில்
வேசியின் சில்லரை

7.சட்டையெல்லாம் சேறு
அழுக்கு அப்பா என்று
சிரிக்கிறது குழந்தை.

8.கவிதையற்ற இரவெல்லாம்
சத்தமிட்டு அழுகிறது
மெளன நிலா.

படம் உதவி : இலக்குவண்

9 comments:

said...

oH!oH! nice nice.

எல்லா கவிதைகளிற்கும் ஓவியம் மனத்திரையில் வந்து கண் சிமிட்டிப்போனது. அழகிய கவிதை ஓவியங்கள்.பாராட்டுக்கள்.

said...

//குளத்தில் தவறி விழுந்தது
தூண்டில்.
சிரித்துக்கொண்டன மீன்கள்.//

நல்ல நகைச்சுவை சிந்தனை! அந்த மீன்களுள் ஒருத்தியாக
என்னை பொருத்திக்கொண்டு நானும் சிறித்துக்கொண்டேன்!

said...

கவிதையின் கண் கொண்டு
வாழ்க்கையைப் பார்க்கும்
கலைஞனே,
உன் ஒவ்வொரு வரியிலும்
மின்னுகிறது அழகு!

said...

நன்றிகள் பல நளாயினி,தமிழ்,நித்யா

said...

"கையசைக்கும் கற்பூரம்
ஆராதனை தட்டில்
வேசியின் சில்லரை"


மனத்தால் கெட்டவர்களை விட
உடலால் கெட்டவளை மட்டும்
பார்த்த சந்தோஷம் போலும்

said...

//மனத்தால் கெட்டவர்களை விட
உடலால் கெட்டவளை மட்டும்
பார்த்த சந்தோஷம் போலும்//

உங்கள் எண்ணவோட்டம் வேறு.

நான் சொல்ல வந்தது.

கோவில் வருகின்ற ஒரு வேசி
அர்ச்சகரின் கையிலிருக்கும் ஆராதனை தட்டை பார்க்கிறாள்,அங்கே தன்னைப் பிரதிபலிக்கும் கற்பூரத்தை பார்க்கிறாள். அது அவளையே பார்ப்பது போல் இருக்கிறது(தன்னை அழித்து மற்றவருக்கு இன்பம் தருவது) உடனே அதற்கு காணிக்கை தந்து நகர்கிறாள். இந்த மூன்று வரிக்குள் இதை சொல்ல நினைத்தேன். பின்னூட்டமிட்டதற்கு நன்றிகள்.

said...

சின்ன சின்ன கவிதைகள், ஆனால் பெரிய பெரிய அர்த்தங்கள்...

வாழ்த்துக்களுடன்,
தினேஷ்

Anonymous said...

தொடர்ந்து குட்டிக் குழந்தைகள் ( கவிதைகள் ) பிறக்கட்டும்

நட்புடன் ,
இனியவன்

said...

நன்றி தினேஷ்,இனியவன்.