Wednesday, February 13, 2008

அம்மாவுக்கும்,அப்பாவுக்கும்....



1.வேலை முடிந்து வந்தபின்
என் கேள்விகளுக்கு
பதில்பேசாத அம்மாவையும்
அப்பாவையும் போலவே
அமைதியாய் இருக்கின்றன
இந்தக் கம்பிகள்.

2.அம்மா,அப்பாவின்
கைகளை நினைத்துக்கொண்டு
இறுகப்பற்றுகிறேன்
ஜன்னல் கம்பிகளை.

3. வண்ண வண்ண
உடைகளை வாங்கித் தர
உழைக்கிறோம் என்றனர்
அம்மாவும் அப்பாவும்.
என் கனவுகள் மட்டும்
கறுப்புவெள்ளையாகி போனதை
உணராமல்.

4.மிருக காட்சி சாலைக்கு
மட்டும் என்னை அழைத்து
சென்றுவிடாதீர்கள் அப்பா
இரும்புக் கம்பிகளுக்கு பின்
அழுகின்ற மிருகங்களுக்கு
என் கண்ணீரின் மொழி
புரிந்துவிடும்!

5.பெற்றோரை வணங்க
வேண்டும் என்றார் ஆசிரியர்.
இப்பொழுது புரிகிறது
கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்
வணங்க சொல்கிறார் என்று.

6. அப்பா அடித்துவிட்டதற்காக
அழுகிறாள் எதிர்வீட்டு ஒவ்யா.
அடிப்பதற்குகூட அப்பா
அருகில் வருவதில்லையே
என்று அழுகிறேன் நான்.


படம் உதவி: இலக்குவண்.

5 comments:

said...

அருமையான கவிதை...அதற்கேற்றாற்ப் போல் புகைப்படம்,இக்காலப் பிள்ளைகளின் மனப்போரட்டத்தை இயல்பாய் விவரித்துள்ளீர்...அருமை, அருமை

said...

கொஞ்சம் மனதில் சின்னதாய் ஒரு கீறல். வாழ்வை இன்னும் செம்மைப்படுத்த சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள். நன்றி.

said...

தோழரே மிகமிக அருமை...

தினேஷ்

said...

//அம்மா,அப்பாவின்
கைகளை நினைத்துக்கொண்டு
இறுகப்பற்றுகிறேன்
ஜன்னல் கம்பிகளை//

குழந்தையின் ஏமாற்றம் தனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் .

said...

//பெற்றோரை வணங்க
வேண்டும் என்றார் ஆசிரியர்.
இப்பொழுது புரிகிறது
கடவுள் போல் கண்ணுக்குத் தெரியாததால்
வணங்க சொல்கிறார் என்று.//

படிக்கும்போது சிரிப்பு வந்தது அதன் பின் தான் உண்மை அதுவே என்று உறைத்தது