
மெல்ல என்னை நோக்கி
நீண்டன விரல்கள்
சொல்லமுடியாத வலிகளை
வார்த்தைகளாக்க முயன்று
தோற்றன இதழ்கள்
எதற்கென்று அறியாமல்
விரல் பற்றுகையில்
என் கையோடு வந்தது
தீயின் நாவுகளுக்கு இரையான
அவளது விரல்கள்.
[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு!
மெல்ல என்னை நோக்கி
நீண்டன விரல்கள்
சொல்லமுடியாத வலிகளை
வார்த்தைகளாக்க முயன்று
தோற்றன இதழ்கள்
எதற்கென்று அறியாமல்
விரல் பற்றுகையில்
என் கையோடு வந்தது
தீயின் நாவுகளுக்கு இரையான
அவளது விரல்கள்.
பார்வை வைத்திருக்கிறாய்
நீ.
தவிப்பதற்கென்றே ஒரு
இதயம் வைத்திருக்கிறேன்
நான்"
அன்புத் தோழி....
சில நாட்களாய் ...என் இதயத்தின் கரைகளை அரித்துக் கொண்டிருக்கிறது சில பதில்தெரியாத கேள்வி அலைகள்.
விடைக்கு சொந்தக்காரி நீ என்பதால் உனக்கு இந்த மடல். சில நாட்களாக உன்னிடமிருந்து எனக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. நான் அழைத்தபோதும் எந்த பதிலும் இல்லை உன்னிடமிருந்து.
ஒவ்வொரு முறையும் செல்பேசி ஒலிக்கும் போதும் அதில் உன் பெயரைத் தேடி தேடி களைத்து போய் விட்டது விழிகள் இரண்டும். இனியும் நீ என்னை அழைப்பாய் என்கிற நம்பிக்கையும் நசிந்து போனது. எனக்கென்னவோ நீ என்னை தவிர்ப்பதாய் படுகிறது. ஆனால் காரணம் மட்டும் இப்போதும் புரியவில்லை. தவறாக எதுவும் நான் பேசிவிடவில்லையே. பின் ஏன் இப்படி?? தவறாக பேசினாலும் தவிர்ப்பது நட்பிற்கு அழகில்லையே. பல சமயங்களில், நண்பர்களுக்குள் கருத்துவேறுபாடு வரலாம் தோழி... ஆனால் நட்பில் வேறுபாடு வரலாமா? எண்ணங்கள் மாறுபடும்...உணர்வுகள் மாறுபடும்...ரசனைகள் மாறுபடும்...
என்றும் மாறாமல் இருப்பது அன்பும் நட்பும் மட்டும்தானே. உன் மெளனம் என்னைக் காயப்படுத்துகிறது தோழி. அதே சமயம் நிறைய யோசிக்கவும் வைக்கிறது. உன்னிடம் என் வலி,சோகம்,சந்தோசம்,நட்பு,என் முறிந்த காதல் எல்லாம் பகிர்ந்து கொண்டேனே...
எதற்காக எனக்கு இப்படி ஒரு தண்டனை???
உலகில் கொடுமையான விசயங்களில் முதல் மூன்று என்ன தெரியுமா?
1. நட்புக்குள் பொய்.
2.காதலுக்குள் பிரிவு.
3.எதற்காக தவிர்க்கப்படுகிறோம் எனத் தெரியாமல் தவிப்பது.
இப்போது இந்த மூன்றாவது துன்பத்தை அனுபவிக்கிறேன் உன்னால். அதுவும் மூன்றாவது முறை. முதல் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு நம் புரிதலில். இரண்டாம் முறை என்னை நீ தவிர்த்தாய் தவறு உன் புரிதலில். மூன்றாம் முறையும் என்னை நீ தவிர்க்கிறாய் தவறு நம் நட்பில்.... இதை சரியாக்க வழி நம் பிரிதலில்... அப்படி எதுவும் நடக்ககூடாது என்று வேண்டுதலில் கழிகிறது என் நிம்மதியில்லா நிமிடங்கள்...
நான் உடைந்து போகும் போதெல்லாம் உன் நட்பான வார்த்தைகள்தான் என்னை ஒன்று
சேர்க்கும். தவறவிட்ட கண்ணாடியாய் இப்போது உடைந்து கிடக்கிறேன் நீயோ அதில் உன் முகம் கூட பார்க்காமல் திரும்பி நிற்கிறாய். என்னையே என்னால் நம்பமுடியவில்லையே.... உனக்குள் இப்படியும் ஒரு முகமா?? உன் கோபத்தைக்கூட ரசித்திருக்கிறேன் உனக்கே தெரியாமல் பல முறை. ஆனால் தெரிந்தே வெறுக்கிறேன் உனது தவிர்ப்பை. என் ஒவ்வொரு கவிதைக்கும் நீயே முதல் வாசகி. இனி யாரிடம் சென்று என் கவிதைகளைக் காண்பிப்பது? அப்படி காண்பித்தாலும்தான் என்னவாகிவிடப்போகிறது???
கவிதை என்று சொல்லிக் கொடுத்தாலும் அவர்களது வாசிப்பின் வலி தாங்காமலேயே
வாடிப்போகுமே என் கவிதையும். என் காதலியை விடவும் உயர்ந்தவள் நீதான் என்றேன் ஒரு நாள். அதெப்படி என்றாய் அழகாய் புருவங்கள் உயர்த்தி. என் காதலி காதலை மட்டும்தான் கற்றுத்தந்தாள். அது அவளது சுயநலத்திற்காக.... நானும் கற்றுக் கொண்டேன் அது என்
சுயநலத்திற்காக... அதுதவறில்லை... ஒவ்வொரு காதலுக்குள்ளும் சுயநலம் உண்டு. அது காதலின் சிறப்பு.
ஆனால் நீ எனக்கு நட்பின் முழு அர்த்தத்தையும் புரிய வைத்தவள்.... எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி... சுயநலமின்றி.... சொல்லப்போனால் நீ என் நட்பைக்கூட எதிர்பார்க்காமல்... என் மீது
நட்பு மழையை பொழிந்தவள். மழையை எப்படி சுயநலம் என்பது அது பொதுநலமல்லவா என்றேன். சாரல்களாய் சிரித்தாய் நட்புத்துளிகள் என்னை நனைத்தன அன்று. புரிந்து கொள்ளாமல் சிலர் புண்படுத்தும்போது மருந்தாய் இருந்தது உன் மயிலிறகு வார்த்தைகள் மட்டும்தான். இப்போது உன் மெளனம்தான் என் நட்பென்னும் பூவை கிள்ளி எறியப்பார்க்கிறது.
ஏதாவது பேசினால் தவறாகிவிடுமோ என்கிற பயம் இல்லாமல் நான் பேசுவது தோழி உன்னிடம்தான். உன் அம்மாவிடம் நீ என்னை அறிமுகப்படுத்தியது உனக்கு
நினைவிருக்கிறதா தோழி? வீட்டிற்கு வரமாட்டேன் என்று அடம்பிடித்தவனை அதட்டி
கூட்டிச் சென்றாய் உன் வீட்டிற்கு...
"அம்மா பாரும்மா என் பிரண்ட் வந்திருக்கான்" என்றதும் சமயலறையில் இருந்து வெளிப்பட்ட உன் அம்மா..
வாப்பா எப்படிப்பா இருக்க....வீட்டுக்கு வரமாட்டேன்னு சொன்னியாமே...
இந்த அம்மாவை பார்க்க இஷ்டமில்லையாப்பா என்றார்கள். சட்டென்று விழியோரம் ஈரமாகிப்போனது எனக்கு. ஆண்-பெண் நட்பென்றாலே சந்தேகப் பார்வை பார்க்கும் சமுதாயத்தில் உன் அம்மா எனக்கு தெய்வமாய் தெரிந்தார்கள்.. அடுத்த நாள் நீ வந்ததும் என்னிடம் கேட்டாய். "ஏன்டா நேத்து எங்க வீட்ல உன் கண்ணுல கண்ணீர் வந்துச்சு?"
"அடிப்பாவி பாத்துட்டியா. அது வந்து... ஆனந்த கண்ணீர் என்றேன் நான்... சந்தோஷத்தில் கூட உன் கண்கள் அழக்கூடாது என்றாய். இப்போது கவலையில்கூட என் கண்கள் அழாமல்தான் இருக்கிறது. ஆனால் என் இதயம்தான் அழுது அழுது இதயம்சிவக்கிறது. என்னை விட அதிகம் உன்னிடம் நட்பாய் இருந்தது என் இதயம்தானே…
பூங்காவில் நாம் அமர்ந்திருக்கும் அந்த வேலியோர மூங்கில் மரம் உனக்கு நினைவிருக்கிறதா?
"நான் அதிகம் விரும்புவது இசைதரும் புல்லாங்குழலின் தாய் இந்த மூங்கில்
மரத்தைதான்" என்று அடிக்கடி சொல்வாய். இனி அதுவும் உன்னைப் போல் ஊமை புல்லாங்குழலைத்தான் தருமோ? வாழ்க்கை எவ்வளவு விசித்திரமாய் இருக்கிறது!
பிரிவின் வலியை உணர்த்துபவள் காதலி என்பது தெரியும். தவிர்ப்பின் வலியை உணர்த்துபவள் தோழியோ? எனக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்தினாய். மொழியுடன் நட்பானேன். எனக்கு கவிதைகளை அறிமுகப்படுத்தினாய். விருட்சமாக வளர ஆரம்பித்தேன்.
எனக்கு தூயநட்பினை அறிமுகப்படுத்தினாய். நண்பனாக தோள் தந்தேன். இப்போது தவிர்ப்பை அறிமுகப்படுத்துகிறாயே... நான் என்னவாக போகிறேன்? என்னதான் என்னிடம் நீ பேச மறுத்தாலும்... ஒருவகையில் உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது தோழி....
எனக்கு வைராக்கியத்தின் வைர வலிமையையும் அறிமுகப்படுத்திவிட்டாயே!
இனியும் நீ என்னிடம் பேசுவாய் என்கிற கடைசிச்சொட்டு நம்பிக்கையும் ஏழை வீட்டு சோற்றுப்பானையாய் காலியாகிப் போனது. ரிக்சா மிதிப்பவனின் இறுகிய கால்தசைகளாய் இறுகிப்போனது என் மெல்லிய இதயம். என்றாவது எங்காவது உன்னை நான் சந்திக்க நேர்ந்தால். ஊமையான என் புல்லாங்குழலிலும் இசை பிறக்கும்... அதுவும் எனக்குள் இருக்கும் உன்னைப் பற்றித்தான் பாடும். அந்த நட்பின் பாடலிலாவது உன் கல்நெஞ்சும் கரையுமா?
நீ முறித்த சிறகுகளுடன்....
நீ தவிர்த்தாலும் உன்
நட்பைத் தேடும்
உன் தோழன்,
வசீகரமாய் பூத்திருக்கும் பொய்கள்..!
- கவிஞர். க. அம்சப்ரியா
மரபுக்கவிதைக்குப் பின் கவிதையின் தளம் இன்றைக்குப் புதுக்கவிதை, நவீனக் கவிதை, பின்நவீனக்கவிதையென்று வேர் பரவி, குதிரைப்பாய்ச்சலாய்ப் போய்க் கொண்டிருக்கிற இத்தருணத்தில் வாசகர்களும் அதற்கேற்றாற் போல் தங்கள் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார்கள்.
சமூகப் பிரச்சனைகளை மையம் கொண்டிருந்த கவிதை நகர்ந்து வாழ்வியல் சிடுக்குகளையும், மனப் பிறழ்வுகளையும், அதீத கற்பனைச் சொற்களையும் ஏந்திக் கொண்டு பயணப்படத் துவங்கியது. துவக்க கால எழுத்தாளர்களின் முதல் தொகுப்புகளே கூட நவீனத்துவத்தின் கெட்டித்த தன்மையுடன் வரத் துவங்கிய பின் காதலின் மிக மென்மையான அனுபவங்களை பதிவு செய்கிற கவிதைகள் வாசகத்தளத்தில் விரும்பத்தகாத இறக்கத்திற்கு சென்று விட்டது என்றே கூறலாம், அல்லது அப்படியான கவிதைகளை இன்னும் வாசித்துக் கொண்டிருப்பது வாசிப்பு முதிர்ச்சியின் மீது சந்தேகப் பார்வையாக மாறிவிட்டது எனலாம்.
இந்தக் கவிதை விமர்சனக் களேபரங்களிடையில் காதல் கவிதைகளை சுமந்து கொண்டு புதிய தொகுப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அப்படிப்பட்ட தொகுப்புகள் மிக எளிதில் தோல்வியை அடைவதற்கான காரணம் பொய்யான கற்பனையைக் கொண்டு போலித்தனமாய் உருகி வழிவது தான் என்றால் மிகையாகாது.
இப்போதைய காதல்கள் உண்மையில் கவிதையை ரசித்துக் கொண்டோ, மென் அனுபவங்களின் மயிலிறகால் வருடிக் கொண்டோ இல்லை. வணிக ஊடகங்களின் அபத்தக் கற்பிதங்களால் உடல் சார்ந்த வேட்கைக்கு காதல் என்று பெயர் சூட்டி வீணாகிக் கொண்டிருக்கிற யுகம் இது. காதல் மிக அளிதில் கடந்து விடுகிற வாலிபக் கிளர்ச்சியாகி அவரவர் வேலையை இனி அவரவர் பார்க்கப் போகலாம் என்கிற ரீதியில் இளமையாளர்கள் தயாராகிவிட்ட பின் இந்தக் கவிதைகள் யாருக்குத்தான் எழுதப்படுகிறது?
எப்போதும் போல் தான் கவியுள்ளம் அதைப்பற்றியெல்லாமா யோசித்துக் கொண்டிருக்கிறது...?
இதோ அப்படியான ஒரு இளம் கவிஞனின் மயிலிறகால் எழுதிய வண்ணக் கவிதைகளின் தொகுப்பு காதலை துளிர்க்கச் செய்யும்படியாக வந்திருக்கிறது.
மீராவின் கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் தொகுப்பிற்குப் பின் சில ஹைக்கூ தொகுப்புகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பேசப்படுகிற அளவுக்கு வெளிவந்த தொகுப்புகள் ஒன்றிரண்டு தான் . பொன்.சுதாவின் "கவிதையல்ல காதல்". அதற்குப் பிறகு தபூ.சங்கரின் பல தொகுப்புகள். தபூ.சங்கரின் காதல் கவிதைகளின் விற்பனைக்குக் கூட வண்ண மயமான அட்டைப்படங்களும், உள்ளே அட்டைப்படங்களுக்கு நிகரான வளவளப்பான அழகிய பெண்களின் உருவங்கள் தேவைப்படுகிறது. காதலை வெளிப்படுத்துகிற வரிகள் மட்டுமே தொகுப்பிற்குப் போதுமானதாக இல்லை.
நிலாரசிகனின் "மயிலிறகாய் ஒரு காதல்" புதுவரவு. இத்தொகுப்பில் மொத்தம் ஐம்பத்தியொரு கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொன்றும் இலைகளை உதிர்த்து விட்டு பூக்களை மட்டும் ஏந்தி நிற்கிற 'மே பிளவர்' மரங்களைப் போல பொய்ம்மையை உதிர்த்து விட்டு காதலை மட்டுமே இவைகள் பூத்திருக்கின்றது.
ஒரு பெண்ணை நேசிக்கிற போது தான் காதல் கவிதை வசப்படும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையில்லை. இந்த இயற்கையை, மக்களை, சுற்றுப்புறத்தை நேசிக்கத் தெரியாத ஒருவனால் ஒரு பெண்ணை போலித்தனமற்ற பிரியத்தால் ஒரு போதும் நேசிக்க இயலாது. அப்படியெல்லாம் கிடையாது என்றால் அவனுக்குள் ஒரு பொய் உட்கார்ந்து கண் சிமிட்டுகிறது என்று பொருள். இப்படிச் சொல்லக் காரணமிருக்கிறது. இந்தத் தொகுப்பு 'இன்னும் அறிமுகமாகாத என்னவளுக்கு..' என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் இப்படியொரு கவிதை வருகிறது.
கன்னம் சிவக்க
சிவக்க முத்தமிட்டுவிட்டு
போதுமாடா
என்பேன்..
அழகானதொரு வெட்கத்தினால்
முகம் திருப்பிக் கொள்வாய்.
ஆண் வெட்கம் அழகில்லை
என்று யார் சொன்னது..?
ஆண்களின் வெட்கத்தைப் பதிவு செய்திருக்கிற இந்தக் கவிதையின் பொருள் கவிஞரின் அரிய கற்பனை என்றுதான் சொல்ல வேண்டும்.
தொழில் மயமாகிவிட்ட உலகில் ஆண்களும் பெண்களும் இயல்பாக பழக வேண்டிய தருணத்தில், எதைத் தோழமை என்று அனுமதிப்பது? யாரை காதல் என்ற வட்டத்திற்குள் அனுமதிப்பது? என்கிற குழப்பத்தில் பொற்றோருக்குள் ஒரு தவிப்பு இருக்கத்தான் செய்கிறது. தன் மகன் வீட்டுக்குள் அனுமதித்திருப்பது காதலையா? நட்பையா? அதற்கு இப்படி பதில் சொல்கிறார்.
ஆரத்தி எடுக்காமல்
ஆச்சர்யப் பார்வை
பார்க்கிற உன்
அம்மாவிடம் சொல்லி வை
இவள் தோழி அல்ல என்
மனைவியாகப் போகிறவள் என்று..!
பெரும்பாலான கவிதைகள் பெண்ணின் குரலாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் விரசமற்ற அன்பின் ஏக்கமாக குழைந்து, நெக்குருகி இக்கவிதைகள் பூத்துள்ளன.
இத்தொகுப்பில் முழுக்க முழுக்க காதல் கவிதை தான் எனினும் அலங்காரத்திற்காகவும் அழகுக்காகவும் அகலமான மண் பாத்திரத்தில் பூக்கள் தூவி தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கும். தண்ணீர் அழகாகி, பூக்களை அழகுபடுத்துகிறதா? பூக்கள் அழகாக இருப்பதால் தண்ணீர் அழகாகிவிட்டதா? இரண்டையும் தன்னகத்தே வைத்திருப்பதால் மண்பாத்திரம் அழகாகிவிட்டதா? என்று ரசனைக்குறியவர்களுக்குத் தோன்றும். மிதக்கும் பூக்களைப் போல அ முதல் ஃ வரை என்று பதிவு செய்யப்பட்டுள்ள இக்கவிதைகள் மிளிர்கின்றன.
நல்லதோர் வீணை
செய்தே அதை
நலங்கெட புழுதியில்
எறிவதுண்டோ..?
செருப்பில்லாமல்
நான் நடப்பதை
இப்படி நீ சொன்னால்
செல்லமாய் உன்னை
அடிக்காமல் வேறு
என்ன செய்வேனடா
நான்..?
அரிய உவமைகள், உருவகங்கள் தொகுப்பெங்கும் குவிந்து கிடக்கின்றன.
காய்ந்த பிறகு வாசம்
வீசும் மகிழம்பூவைப் போல்
நீ பிரிந்த பிறகும்
நேசம் வீசும் உன்
நினைவைத் தவிர..!
இந்தக் கவிதை கற்பனை ஓட்டத்தில் ஒரு மென் சிலிர்ப்பு.
நவீன கவிதையில் காதல் பதிவுகள் அரிதாகிக் கொண்டு வருகையில் இம்மாதிரியான காதல் கொகுப்புகள், காதல் கவிதைகளை விரும்பி நேசிக்கிறவர்களுக்கும், காதலின் பரிசாக அளிக்கவும் ஆக மிகச் சிறந்த தொகுப்பாக வெளிவந்துள்ளது, "மயிலிறகாய் ஒரு காதல்".
கணினித்துறையில் இயங்கிக் கொண்டிருக்கும் இளைஞரால் இவ்வளவு மென்மையாய் ஒரு காதல் தொகுப்பு ஆச்சர்யம் தான்.
பொய்களில் காதல் பொய்கள் சுவாரஸ்யமானவை. எளிய வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கவிதைகள் காதலையும் காதலிப்பவர்களையும் சிகரத்திற்கு உயர்த்துகிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
நேர்த்தியான அச்சமைப்பு இந்தக் காதலை மேலும் உயர்த்துகிறது.
தொகுப்பு: மயிலிறகாய் ஒரு காதல் (கவிதை நூல்)
நூலாசிரியர் : நிலாரசிகன்
இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/
1.மெல்லிதழில் மென்மையாய்
முத்தமிட்டு வெட்கப்புன்னகையுடன்
நெஞ்சில் நீ புதைகின்ற
செளந்தர்யத்தில்,
தூவல் கொண்டெழுதிடும்
கவிதைகள் தோற்றுப்போகின்றன
2. முத்தம் பெற முரண்டுபிடித்து
முடியாமல் உறங்கச்செல்கின்ற
எனக்குத் தெரியும்
உறக்கத்தில் இதழ்களை ஈரமாக்கும்
உன் முத்தவித்தை.
3. இறுக பற்றியிருந்த
விரல்கள் தளர்த்தி
நெற்றிமீது ஒற்றைமுத்தமிட்டு
எனை பிரிந்து செல்கிறாய்.
உன் ப்ரியங்களுடன்
வீடுவருகிறேன்
உயிரின்றி.
ஒவ்வொரு சுவடுகளாக
அழித்தபடி
நகர்கின்ற வெப்பக்காற்றின்
வேகம் குறைந்த கணத்தில்
ஆர்ப்பரிக்கும் அலைகள்
அடங்கியிருந்தன.
சிறியதொரு இடைவெளியில்
மீண்டும் கரைகளை அரிக்கத்துவங்கின
அவ்வலைகள்.
அழித்தொழிந்த சுவடுகள் உயிர்ப்பெற்று
நர்த்தனமாடுகின்ற காட்சியை
கண்டுகளிக்க
யன்னலின் வழியே உள்நுழைந்தது
வெண்பிறை.
அரை வட்ட நிலையில்
உயரப்பறந்தது
பறவைக்கூட்டம்…
நீண்டு விரிந்திருக்கும்
விசும்பினை தன் சிறிய
இறக்கையினால் அடித்துக்கொண்டே
கூட்டம் தவிர்த்து தனியே
பறந்தது வெள்ளை நிற
பறவையொன்று.
மஞ்சள் வெயில்
படர்ந்த மரத்தின் கிளையிலமர்ந்து
மேலெழும்பிய அதன்
நீண்ட அலகில்
நெளிந்து கொண்டிருந்த
அரவத்தின் செங்குருதி காற்றில்
கலக்கையில் பிற பறவைகளுடன்
சேர்ந்து மறைந்தது அப்பறவை.