Sunday, August 30, 2009

உபன்டு ஹோரி (1935 - 2009 ) - எதிர்ப்பின் குரல்



இந்த பிரபஞ்சம் எத்தனையோ சர்வாதிகாரிகளை கடந்துவந்திருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயவிருப்பங்களுக்காக
பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறது இந்த பூமி. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வெறியாட்டங்களுக்கு
இரையான அப்பாவி உயிர்களை சரித்திரம் வலியோடு பதிவு செய்திருக்கிறது. சர்வாதிகாரம் என்னும் சொல்

உச்சரிக்கப்பட்டவுடன் எப்படி ஹிட்லரும் முசோலினியும் மனதில் தோன்றுவார்களோ அதுபோலவே உகாண்டா எனும் தேசத்தின் பெயரை கேட்கும்போதெல்லாம் வெறுப்போடு மனதில் தோன்றி மறையும் பெயர் இடி அமீன்.

இடிஅமீனின் வெறித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இரையானவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம்.தன் தேச மக்களையே கொன்று குவித்த இடிஅமீனை தட்டிக்கேட்க மேலை நாடுகளே தயங்கியபோது உகாண்டா தேசத்தில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உகாண்டா மக்களால் பின்னாளில் அன்போடு "பெண்சிங்கம்" என்றழைக்கப்பட்ட கவிஞர்.உபன்டு ஹோரி. சர்வாதிகாரி இடிஅமீனின் கொடூர கண்கள் பயத்தில் நடுங்கியது ஹோரியின் கவிதைகளை படித்தபோதுதான்.

வடக்கு உகாண்டாவின் "டோகோலோ" மாநிலத்தில் ஒரு ஏழை விவசாயிக்கு மகளாக 1935ம் வருடம் ஆகஸ்டு 30ம் தேதி பிறந்தார் உபன்டு ஒடாயு ஹோரி. இளம் வயது முதலே ஹோரிக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்தது அவரது மாமாவின் நூலகம்(அவரது மாமா ஒடாயி மொபுட்டுவும் ஒரு கவிஞர்). வீட்டிற்கு அருகிலிருந்த
நூலகத்தில்தான் உலக இலக்கியங்களும் கவிதைகளும் ஹோரிக்கு அறிமுகமானது. தன்னுடைய பதிநான்காவது வயதில் கவிதை எழுத துவங்கியவர்
தன்னுடைய எழுபதாவது வயதுவரை எழுதிக்கொண்டே இருந்தார். இடிஅமீன் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட படுகொலைகளை பற்றி இவர் எழுதிய "A Man,who is a wolf' எனும் கவிதையை படித்தவுடன் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற்று இடிஅமீனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சற்றும் தாமதிக்காமல் ஹோரியை கொல்ல உத்தரவிட்டான் அந்த கறுப்பின சர்வாதிகாரி.ஹோரி கவிஞர்களுக்கே உரித்தான மென்மனம் கொண்டவர் எனினும் அடக்குமுறைகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் என்றும் தலைவணங்காதவர்.தன் வீட்டிற்குள் நுழைந்த இரு கூலி இராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு சூடானுக்கு தப்பிவிட்டார்.

அமெரிக்காவுக்கு பிடல்காஸ்ட்ரோவைபோல இடிஅமீனுக்கு ஹோரி சிம்மசொப்பனமாக விளங்கினார் எனலாம் சூடானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் இடிஅமீன் அவரை கொல்லும் முயற்சியை கைவிடவில்லை. இதுபற்றி பின்னாளில் இப்படி
விவரிக்கிறார் ஹோரி "கடவுளின் பிள்ளை என்றே என்னை எண்ணிக்கொள்வேன். ஒவ்வொரு முறை அமீன் என்னை கொல்ல ஆட்கள் அனுப்பும்போதும் ஏதாவது ஒருவகையில் தப்பிவிடுவேன். ஒருமுறை தப்பும்போது அருகிலிருந்த
ஆற்றிப்பாலத்திலிருந்து குதிக்க நேர்ந்தது. நீச்சல் அறியாதபோதும் நான் பிழைத்தது கடவுளின் செயலன்றி வேறென்ன?"

உகாண்டாவில் புரட்சி ஏற்பட்டு சவுதி அரேபியாக்கு இடிஅமீன் தஞ்சம் புகுந்த பின்னரே நாடு திரும்பினார் ஹோரி. கடந்த மாதம் இயற்கை எய்திய இந்த புரட்சிக்கவிஞரின் பெயர் இப்பூமி உள்ளவரை சரித்திர ஏடுகளில் நிமிர்ந்து நிற்கும் என உறுதியாய் சொல்லலாம்.

ஹோரியின் கவிதை "A Man,who is a wolf" ன் தமிழாக்கம்:

"கவுச்சி நாற்றமெடுக்கும்
நீ
ஓநாயை போன்றவன்.
ஓநாயை கண்டவுடன்
கதறி அழும் குழந்தை போன்றவர்கள்
என் தேச மக்கள்.
நான்
பயமென்பதை சற்றும் அறியாதவள்
உன் பிணத்தை கழுகுகள்
குதறும் நாளில்
பூக்கள் நிறைந்த தடாகமொன்றில்
ஆனந்த நீராடுவேன்.
பரிசுகளால் என் நண்பர்களை
வியப்பட செய்திடுவேன்.
மான்கள் நிறைந்திருக்கும் இக்காடுகளில்
சத்தமிட்டு ஓடி மகிழ்வேன்.
இரத்தம் குடிக்கும்
கறுப்பு ஓநாயே!
என் தேச இளைஞர்களின்
கைகளால் நிகழப்போகும்
உன் மரணத்தின்
திருநாளுக்காக காத்திரு"


"சார் நீங்க சொன்னமாதிரியே கற்பனையா ஒரு கவிஞரை பற்றி கட்டுரை எழுதி இருக்கேன் இந்தாங்க"
அந்த பிரபல வார இதழின் ஆசிரியரின் கைகளில் தான் எழுதிய கட்டுரைத்தாளை கொடுத்துவிட்டு எப்படியாவது இந்த
பத்திரிகையில் வேலைகிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான் சக்தி.

-நிலாரசிகன்

11 comments:

said...

ந‌ல்லா எழுதியிருக்கீங்க‌!

Anonymous said...

அட போட வைத்துவிடுகிறது உங்களது ஒவ்வொரு கதைகளும் நிலாரசிகன்!

உயிர்மை அல்லது காலச்சுவடில் சிறுகதை தொகுப்பு கொண்டுவாருங்கள்.

இவை பலருக்கும் சென்றடைய வேண்டும்.

மனுஷ்யபுத்திரனிடம் பேசிப்பாருங்கள்.

வாழ்த்துக்கள்.
குமார்,
வடகொரியா.

said...

அட ஏன் இப்படி? இறுதியில் தலை சுற்ற வைத்துவிட்டீர்கள்?

-ப்ரியமுடன்
சேரல்

said...

நன்றி கயல்,குமார்,சேரல்.

Kalaivani said...

unga kathaigal ovvondrum vithyasama irukku....
padikkirathukkum romba nalla irukku....
ethirpaarkatha mudivavum irukku...
nice nilaraseegan...

nandri.

said...

true a? or real a?

said...

//Gayatri said...
true a? or real a?//

True = நிஜம்
real = உண்மை/நிஜம்

"வழக்கம்போலவே" உங்கள் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது!!! :)

said...

Really Good one !!!

said...

nice

said...

appppaaaa..........

kadaisil ithu nijam alla kathainnu therinthum santhosap pada mudiyala..

thalai suththeettu ponga:)

said...

உங்களுடைய எழுத்துகள் நன்றாக உள்ளது நிலாரசிகன்....