Saturday, November 24, 2012

நம்மிடையே மலர்ந்திருக்கும் மலர்




அதற்கு அத்தனை வாசமில்லை.
அவ்வளவு அழகுமில்லை.
கண்ணிமைச் சாமரங்களின்
மென்காற்றில் எப்பொழுதேனும்
உதிர்த்திடும் சில சொற்களை.
கைகளில் இருபது விரல்கள்
முளைத்தபோது அவ்வளவு
அழகாய் தோன்றி
பின்
அமைதியாக நடந்து போனது.
துயரங்களில் மொத்தக்கடலாகி
அதன் இதழ்கள் தொட்டபோது
சிறியதாய் மலர்ந்து
கணங்கள் சில கடந்து
மெளனித்து மொட்டாகியது.
அதற்கும்
அப்பால் ஓர் உலகமிருக்கிறது.
என்றுமே முழுவதும் மலர்ந்துவிடுவதில்லை
நம்மிடையே மலர்ந்திருக்கும்
இம்மலர்.
-நிலாரசிகன்.

Saturday, November 10, 2012

கல்கி தீபாவளி மலர் கவிதைகள்

மலை-வனம்-குளம்- மேலும் மூன்று முத்தங்கள்

1.

தரையெங்கும் விரவிக்கிடக்கும் சொற்களை
குனிந்தபடி மேய்கின்ற குறும்பாடுகள்
என் மலைவீட்டில் வளர்கின்றன.
மிகச்சிறிய முட்டைகளை இடுகின்ற
குருவிகளும் அவ்வீட்டில் வசிக்கின்றன.
அடிவாரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக
மலை உச்சிக்கு இழுத்துவரும் 
எறும்புகளை நாம் பின் தொடர்கிறோம்.
அவ்வளவு பேரன்புடன்
இறுகப்பற்றிய கைகளில் 
விழுந்து
தெறிக்கின்றன குளிர்மழைத்துளிகள்.
தோளில் கன்னம் சாய்த்தபடி 
மலை ஏறுகிறாய்.
சொற்கள் எதுவுமற்ற கணத்தில்
மென்மையானதொரு முத்தமிடுகிறாய்.
எறும்புகள் சேமித்த சொற்களை
மென்று விழுங்கும் குறும்பாடுகளின்
சப்தத்தில் அதிர்கிறது மலைவீடு.


2.
அடர்வனப்பாதையில் நடப்பது
உனக்குப் பிடிக்கும்.
உயர்ந்த விருட்சங்களிலிருந்து எழும்பும்
பறவைகளின் வினோத ஒலியை 
கூர்ந்து கவனித்தபடி நடக்கிறோம்.
ஒரு ஆண்பறவையை துரத்துகிறது
பெண்பறவையொன்று.
கற்கள் நிறைந்த பாதையில் வெகுதூரம்
வனத்தின் நடுவில் வந்துவிட்டோம்.
சற்றுத்தொலைவில் சலசலக்கிறது
காட்டாறு.
இப்பொழுது மழை வேண்டும் என்கிறாய்.
இழுத்தணைத்து முத்தமிட துவங்குகிறேன்
ஆண் உனது வெட்கம்
சிறுவிதைகளாய் சிதறிச் சிதறி
வனமெங்கும் புதைகிறது 
ஆழமாய்
மிக ஆழமாய்.

3.

குளம் வற்றி விட்டது.
அ முதல் ஃ வரையில் துவங்கும்
சொற்களனைத்தும் உதிர்ந்துபோன
இலைகளின் கீழே மெளனிக்கின்றன.
கடைசி மீனின் எலும்புகளை
இழுத்துச் செல்கின்றன சிற்றெறும்புகள்.
மெளனம் உடைத்த சொற்கள்
சிறு சிறு  புரவி வடிவமெடுத்து ஓடுகின்றன.
நீரற்ற குளத்தின் உயரே பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்திலிருந்து
சிற்றெறும்புகள் மீது விழுந்து தெறிக்கின்றன
எச்சங்கள்.
புரவிகளின் தடத்திலிருந்து எழும்
மஞ்சள் இலைகள் நிறைந்த பெருவிருட்சத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
நிறைவேறாக் காதலின் கடைசி முத்தம்.

-நிலாரசிகன்.

Thursday, November 01, 2012

ஏக்கப்பூனை திரியும் பெருவுடல்




உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத 
ஏக்கம் ஒரு பூனையாகி என்னருகே 
அமர்ந்திருக்கிறது.
மிருதுவான அதன் உடலும் 
மென்மையான ஈர மயிர்க்கற்றைகளும்
அதன் அழகை அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது.
மழை ஓய்ந்த முன்னிரவில் 
அதன் கண்களை 
உற்றுப் பார்க்கிறேன்.
ஏக்கப்பூனை காலத்தின் மறு உருவம்.
பிரித்தெறிய முடியாத அட்டையென 
என்னில் ஒட்டிக்கொண்ட கருநிற காலம் 
தன் பற்களிடையே மெதுவாய் எனை
மென்று தின்னத்துவங்குகிறது.
பூனையொன்றின் பசிக்கு உணவாகி
சரிந்து விழுகிறது என்னுடல்.
உன்னுடன் வாழ்ந்துவிட முடியாத
மாபெரும் இப்பெருவுடல்!
-நிலாரசிகன்.