Saturday, November 10, 2012

கல்கி தீபாவளி மலர் கவிதைகள்

மலை-வனம்-குளம்- மேலும் மூன்று முத்தங்கள்

1.

தரையெங்கும் விரவிக்கிடக்கும் சொற்களை
குனிந்தபடி மேய்கின்ற குறும்பாடுகள்
என் மலைவீட்டில் வளர்கின்றன.
மிகச்சிறிய முட்டைகளை இடுகின்ற
குருவிகளும் அவ்வீட்டில் வசிக்கின்றன.
அடிவாரத்திலிருந்து ஒவ்வொரு சொல்லாக
மலை உச்சிக்கு இழுத்துவரும் 
எறும்புகளை நாம் பின் தொடர்கிறோம்.
அவ்வளவு பேரன்புடன்
இறுகப்பற்றிய கைகளில் 
விழுந்து
தெறிக்கின்றன குளிர்மழைத்துளிகள்.
தோளில் கன்னம் சாய்த்தபடி 
மலை ஏறுகிறாய்.
சொற்கள் எதுவுமற்ற கணத்தில்
மென்மையானதொரு முத்தமிடுகிறாய்.
எறும்புகள் சேமித்த சொற்களை
மென்று விழுங்கும் குறும்பாடுகளின்
சப்தத்தில் அதிர்கிறது மலைவீடு.


2.
அடர்வனப்பாதையில் நடப்பது
உனக்குப் பிடிக்கும்.
உயர்ந்த விருட்சங்களிலிருந்து எழும்பும்
பறவைகளின் வினோத ஒலியை 
கூர்ந்து கவனித்தபடி நடக்கிறோம்.
ஒரு ஆண்பறவையை துரத்துகிறது
பெண்பறவையொன்று.
கற்கள் நிறைந்த பாதையில் வெகுதூரம்
வனத்தின் நடுவில் வந்துவிட்டோம்.
சற்றுத்தொலைவில் சலசலக்கிறது
காட்டாறு.
இப்பொழுது மழை வேண்டும் என்கிறாய்.
இழுத்தணைத்து முத்தமிட துவங்குகிறேன்
ஆண் உனது வெட்கம்
சிறுவிதைகளாய் சிதறிச் சிதறி
வனமெங்கும் புதைகிறது 
ஆழமாய்
மிக ஆழமாய்.

3.

குளம் வற்றி விட்டது.
அ முதல் ஃ வரையில் துவங்கும்
சொற்களனைத்தும் உதிர்ந்துபோன
இலைகளின் கீழே மெளனிக்கின்றன.
கடைசி மீனின் எலும்புகளை
இழுத்துச் செல்கின்றன சிற்றெறும்புகள்.
மெளனம் உடைத்த சொற்கள்
சிறு சிறு  புரவி வடிவமெடுத்து ஓடுகின்றன.
நீரற்ற குளத்தின் உயரே பறந்து செல்லும்
பறவைக்கூட்டத்திலிருந்து
சிற்றெறும்புகள் மீது விழுந்து தெறிக்கின்றன
எச்சங்கள்.
புரவிகளின் தடத்திலிருந்து எழும்
மஞ்சள் இலைகள் நிறைந்த பெருவிருட்சத்தில்
தலைகீழாய் தொங்குகிறது
நிறைவேறாக் காதலின் கடைசி முத்தம்.

-நிலாரசிகன்.

1 comments:

said...

மூன்றும் அருமையான முத்துக்கள்... முத்தங்கள்....

வாழ்த்துக்கள்...
tm1