
1.
அப்பாவுக்கு வலிக்கும். ரொம்பவே வலிக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை. சேலம் நோக்கி விரைந்துகொண்டிருந்த ரயில் ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி அமர்ந்திருந்தாள் நந்தினி.கண்களோரம் நிற்காமல் வழிந்துகொண்டே இருந்தது கண்ணீர்.
வீட்டில் மூத்தபிள்ளை என்பதால் அப்பாவுக்கு நந்தினி மேல் உயிர். அவள் கேட்டு எதையும் மறுத்ததில்லை - கண்ணன் உட்பட.
படிப்பைத்தவிர எதிலும் கவனம் செலுத்தாதவள் கண்ணனிடம் வீழ்ந்ததே ஒரு அழகான ஹைக்கூ கவிதை. நந்தினியின் முகத்தை பென்சிலால் அழகாக வரைந்து அந்த படத்தின் கீழ் புல்லாங்குழலொன்றையும் வரைந்து அவளது இடத்தில் வைத்திருந்தான். அந்த ஓவியத்தின் நேர்த்தியில் லயித்தவள் மெல்ல மெல்ல அவனது அன்பிலும் லயிக்க ஆரம்பித்தாள். கோபாலும்,சியும்,பாக்ஸ்பரோவும் படித்து கொண்டிருந்தவளுக்கு பாப்லோ நெருதாவும்,கல்யாண்ஜியும்,மீராவும் அறிமுகப்படுத்தியது கண்ணன்தான். அவளது காதலை அப்பாவிடம் சொன்னபோது கொஞ்சமும் கோபப்படாமல் மிக நிதானமாய் அவளை தன் பக்கத்தில் அமர்த்தி கண்ணன் பற்றி விசாரித்தார். படித்துமுடித்தவுடன் கண்ணன் தன் அப்பாவின் டெக்ஸ்டைல் தொழிற்சாலையை நிர்வகிக்க போகிறான் என்பதை பற்றி அவள் சொன்னதும் "இந்த காலத்து பசங்க எப்படியும் சம்பாதிச்சுடுவாங்கம்மா..பையன் நல்லவனா இருந்தா எனக்கு முழு சம்மதம்" என்ற அப்பாவை முத்திட்டு சந்தோஷத்தில் துள்ளினாள். அதன்பிறகு படிப்பு முடிந்து இரண்டு மாதத்தில் திருமணமும் ஆகி சென்னைக்கு வந்துவிட்டாள்.
கண்ணனின் அன்பிலும்,தாம்பத்யத்திலும் திளைத்தவள் இப்படி ஒரு சூழ்நிலை வருமென்றோ தன் வாழ்க்கை சூன்யமாகிப்போகும் என்றோ கொஞ்சமும் நினைத்துப்பார்க்கவில்லை. ஜன்னல் காற்று முகத்திலடித்தபோது நினைவுக்கு வந்தவள்,மடியில் உறங்கும் கெளரியின் முடியை கோதினாள். கண்ணிலிருந்து ஒருதுளி கெளரியின் நெற்றியில் விழுந்து தெறித்தது.
2.
கெளரியை எட்டாம் வகுப்பு படிக்க சென்னைக்கு அழைத்து வந்திருந்தார் அப்பா. ஹாஸ்டலில் சேர்த்துவிடலாம் என்று அவர் சொன்னபோது நந்தினிதான் தன் வீட்டில் தங்கி படிக்கட்டும் என்று உறுதியாக சொன்னாள். கண்ணனும் பெருந்தன்மையாக "கெளரி எங்களுக்கு குழந்தை மாதிரி மாமா,கவல படாம எங்ககிட்ட விட்டுட்டு போங்க" என்றபோது நெகிழ்ந்துபோய்விட்டார் அப்பா.
சமைத்துக்கொண்டிருந்த நந்தினியிடம் வந்து மாப்பிள்ளை தங்கம்மா நீ ரொம்ப குடுத்துவச்சவ,நீங்க நல்லா இருக்கணும் என்று வாழ்த்திவிட்டு ஊருக்கு கிளம்பிவிட்டார்.
கெளரிக்கும் அக்காவீடும் சென்னையின் பிரம்மாண்டங்களும் ரொம்பவும் பிடித்துப்போனது. கண்ணன் தினமும் அலுவலகம் செல்லும்போது கெளரியை பள்ளியில் விட்டுவருவதும் மாலை வீடு திரும்பும்போது அழைத்துவருவதும் பார்க்க பார்க்க கண்ணனின் மீது அன்பும் நேசமும் பெருகிக்கொண்டே இருந்தது நந்தினிக்கு. சந்தோஷங்கள் மட்டுமே இருந்தால் அது வாழ்க்கையல்ல.சோகங்களும்,அதிர்ச்சிகளும் கலந்திருப்பதே வாழ்க்கை என்பதை நந்தினி உணர்ந்து கொண்டது ஒரு பின்னிரவில்தான்.
தண்ணீர் குடிக்க எழுந்து சமையலறைக்கு சென்றவளை கெளரியின் அறைக்குள்ளிருந்து கேட்கும் விசும்பல் சப்தம் திடுக்கிட செய்தது. வேகமாக சென்று பார்த்தபோது தரையில் உட்கார்ந்து கண்ணீரில் கரைந்திருந்த கெளரி அக்காவை பார்த்ததும் கண்களை துடைத்துக்கொண்டு "ஒண்ணுமில்லக்கா நாளைக்கு பரிட்சை சரியா படிக்கல அதான்" என்றபோது உடனே நந்தினியால் நம்பிவிடமுடியவில்லை. அந்த நிமிடம் ஆறுதலாய் பேசிவிட்டு வந்து படுத்தவளுக்கு தூக்கம் அண்டவில்லை.
அதன் பிறகு இருதினங்கள் கழித்து,கெளரி காய்ச்சலில் விழுந்தபோது கண்ணன் வேலைவிஷயமாக பெங்களூர் சென்றிருந்தான்.
அதனால் கெளரியை கவனித்துக்கொண்டே அதே அறையில் உறங்கியபோது காய்ச்சலின் மிகுதியில் உளறத்துவங்கிய கெளரியின் வரிகள் நந்தினியை கொன்று போட்டன. "மாமா வேணாம் மாமா வலிக்குது மாமா பயமா இருக்கு மாமா" என்று அரற்றத்துவங்கியது கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் நந்தினி. கண்ணனின் புன்சிரிப்பில் கலந்த முகம் மறைந்து குரூரமானதொரு அரக்கமுகம் அவள் முன் நிழலாடியது. அழுது துடித்து,வதங்கிய மல்லிச்சரமாய் இருநாட்களாய் உணவேதுமின்றி வீழுந்து கிடந்தாள்.
கெளரிக்கு காய்ச்சல் சரியான பின் அருகில் அழைத்து மெல்ல விசாரித்தபோதுதான் கண்ணனின் கொடூரப்பசிக்கு கெளரி பலியான விஷயம் புரிந்தது. அப்பாவுக்கு எப்படி இதைச்சொல்வது? இனி எப்படி கண்ணனுடன் வாழ்வது? கெளரிக்கு நடந்த கொடூரம் வேறு யாருக்கும் நடக்கவிடக்கூடாது அந்த விஷச்செடியை வேரோடு அழிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.காமவெறியுடன் திரியும் கண்ணனுக்கு தன் வாழ்க்கையை அடகு வைத்தாவது தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று முடிவெடுத்து கெளரியை அழைத்துக்கொண்டு சேலம் புறப்பட்டாள்.
3.
பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியவனைக் கண்டு கேலியாய் சிரித்தது நந்தினி விட்டுச்சென்ற மடல். பிரித்துப்படித்தவன்
தன்னுடைய சுயரூபம் தெரிந்துவிட்ட கோபத்தில் நாற்காலியை தூக்கி எறிந்தான். கெளரியிடம் தவறாக நடந்துகொண்டாலும் நந்தினியை நிஜமாக காதலித்தவன்.நந்தினியை தவிர வேறு யாரையும் நினைத்துக்கூட பார்க்காதவன் தான். ஆனால் தன் பதின்ம வயதில் ஒரு மிருகத்தின் தீராக்காமத்தால் உடலும் மனமும் பாழானதால் தானும்
இப்படி ஒரு மிருகமாக மாறிவிட்டதை எண்ணி துடித்தான். ஆனாலும் கட்டுக்கடங்கா மோகம் தன்னை ஆட்கொள்வதை அவனால் தடுக்க முடியவில்லை. இனி நந்தினி வரமாட்டாள் என்று உணர்ந்ததும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அதேசமயம் தன்னைவிட்டு போய்விட்டாளே என்பதால் கோபம் தலைக்கேறியது. உடனே செல்போனை எடுத்து பூஜாவின் எண்ணைத்தேடினான்.
இரண்டாக வெட்டிய ஸ்ட்ராபெர்ரி பழங்கள் போலிருந்தன பூஜாவின் சிவந்த லிப்ஸ்டிக் உதடுகள். நந்தினிக்கு தான் தரப்போகும் தண்டனை இதுதான் என்று நினைத்துக்கொண்டு பூஜாவை நெருங்கினான். ஏதோவொன்று அவனை தடுத்தது.
தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தவனை "உன்னை மாதிரி ஆள பார்த்ததே இல்ல" சொல்லிவிட்டு போய்விட்டாள். அவள் போனவுடன்
யாரோ காலிங்பெல்லை அழுத்துவது தெரிந்தது. பக்கத்துவீட்டு சிறுவன் நின்றுகொண்டிருந்தான். "பால் உங்க தோட்டத்துல விழுந்துருச்சு அண்ணா எடுத்துக்கலாமா" என்றவனை பார்த்து சிரித்தான் கண்ணன்.
4.
ரயில் சேலம் வந்துவிட்டிருந்தது. அப்பாவுக்கு கெளரியை பற்றி எதுவும் சொல்லாமல் கண்ணனுக்கு வேறொரு பெண்ணிடம் தொடர்பு இருப்பதால் வீட்டைவிட்டு வருகிறேன் என்று மட்டும் சொல்லி இருந்தாள். ரயில் நிலையத்தில் அப்பாவை பார்த்ததும்
ஓடிச்சென்று கட்டிக்கொண்டு அழுதாள். அப்பொழுதும் பதற்றம் அடையாமல் "விடும்மா எது நடக்கணும்னு இருக்கோ அதுதான் நடக்கும்,நீ மேலபடி,லெக்சரரா ஏதாவது ஒரு காலேஜ்ல ஜாயின் பண்ணு,மாப்பிள்ளை திருந்திடுவாருங்கற நம்பிக்கை எனக்கு இருக்கும்மா நாம காத்திருப்போம்" என்றவாறு அவளை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தார்."கெளரிய இனி ஹாஸ்டல்ல சேர்த்துடலாம்,என்னப்பா உனக்கு ஹாஸ்டல்ல தங்கறதுல்ல பிரச்சினை ஒண்ணும் இல்லையே" என்று கேட்கும் அப்பாவை விரக்தியுடன் பார்த்தனர் நந்தினியும் தம்பி கெளரிசங்கரும்.
[உயிரோடை சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது]
-நிலாரசிகன்.