உடைந்த கனவுகளை பொறுக்கும் சிறுமி
உடைந்த கனவுகளை பொறுக்கும்
சிறுமியின் பாவாடையில் தீட்டப்பட்டிருக்கும்
ஓவியத்தில் இரண்டு மான்கள் வசித்தன.
தனிமையின் குரூரத்தை பாடும்பொழுதும்
குளிர் அடர்ந்த இரவில் தனித்தழும்பொழுதும்
அவளுடன் உரையாடுகின்றன
அந்த மான்கள்.
தெருவோரத்தில் உறங்கி எழும் அவள்
கனவுகள் பொறுக்கும்
அதிகாலையொன்றில் விபத்தில் மரணித்தாள்.
குழந்தை இழந்த துக்கத்தில்
கண்ணீர் விட்டன மான்கள்.
அநாதைப் பிணம் என்றபடி
முகம் திருப்பிக்கொண்டது இவ்வுலகம்.
ஏழாவது கோடை
இருண்ட இரவுகளில்
புணர்ந்து திரிந்த அப்பறவைகள்
ஆறு கோடைகள் பிரிந்திருந்தன.
ஏழாவது கோடையில் பெண்பறவை
தன் குஞ்சுகளுக்கு கதைகள் சொல்ல
ஆரம்பித்தது.
தனக்கொரு நண்பன் இருந்தானென்றும்
அவனது சிறகுகளின் கதகதப்பில்
மகிழ்ந்திருந்ததாகவும் நீண்டது அக்கதை.
காதலற்ற காமம் பற்றியும்
உணர்வுகளற்ற முத்தம் பற்றியும்
சொல்லாமல்
சொல்லாமல்
கதை முடிந்தபோது
புத்தனை சிலுவையில் அறைந்துவிட்ட
குரூரத்துடன் புன்னகையொன்றை
உதிர்க்கிறது பெண்பறவை.
-நிலாரசிகன்.