Monday, October 12, 2009

அகநாழிகை முதல் இதழ் விமர்சனம்





சிற்றிதழ் நடத்துவது பற்றி ஒரு இதழாளர் சொன்ன வாக்கியம் "சொந்த காசுல சூனியம் வச்சுக்கறது". வேடிக்கையாக
தோன்றினாலும் இதன் பின்னாலிருக்கும் வலி சிற்றிதழ் நடத்துபவர்களாலும் அதை சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களாலும் மட்டுமே உணரப்படுவது. மிக முக்கிய காரணம் வெகுஜன இதழ்கள் போல் பல வகையான செய்திகளை சிற்றிதழ்கள் தாங்கி வருவதில்லை.
இதன் காரணமாகவே சிற்றிதழாளர்களின் வருமானம் அசலை விட எப்போதும் குறைவாகவே இருக்கிறது(ஒரே வார்த்தை "நஷ்டம்")
அதையும் மீறி பல சிற்றிதழ்கள் இன்று வெற்றிகரமாக தொடர்ந்து நடத்தப்படுவதற்கான மிக முக்கிய காரணம் இலக்கியம் மீதான
தீராத காதலும் தாகமும் எனலாம். நவீன விருட்சம் இதழ் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக வருவதற்கு காரணம் அதன் ஆசிரியர் அழகிய சிங்கர்
இலக்கியம் மீது கொண்ட தணியாத தேடல் மட்டுமே.

இம்மாதம் வெளியாகி இருக்கும் அகநாழிகை இதழின் உள்ளடக்கம் மிக நேர்த்தியானதாக இருப்பதை கண்ட போது இது முதல் இதழா அல்லது முப்பதாவது இதழா என்கிற சந்தேகமே என்னுள் எழுந்தது. இதழின் ஆசிரியர் பொன்.வாசுதேவன் மற்றும் அவரது ஆசிரியர் குழுவின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.

சிறுகதைகள்:

1.பூனைக்குட்டி - பாவண்ணனின் இந்த சிறுகதை ஏற்படுத்திய அதிர்வுகள் அடங்க இன்னும் இருநாளாகலாம். எங்கெல்லாம் பூனைக்குட்டியை
பார்க்கிறேனோ அங்கெல்லாம் "வைதேகி"யின் முகம் நிழலாடி மறைகிறது. அதீதமான ரோமங்கள் உடலெங்கும் வளர்ந்து,நோய் பீடிக்கப்பட்டு பூனைக்குட்டி பொம்மைகளுடன் மட்டுமே தன்னுலகை சிருஷ்டித்துக்கொள்ளும் அந்தச் சிறுமியின் உணர்வுகள் ஒவ்வொரு வரியிலும் நம்முடன் உரையாடி செல்கின்றன. (உமா மகேஷ்வரியின் மரப்பாச்சி சிறுகதையின் முடிவை ஒத்ததாக இக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது)

2.கிறக்கம் - யுவன் சந்திரசேகர். இம்மாதம் உயிர்மை,காலச்சுவடு,அகநாழிகை அனைத்திலும் யுவனின் சிறுகதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. ஒரு கதைக்கும் மறுகதைக்கும் சம்பந்தமே இல்லை (நடையில்). வழக்கம்போலவே அசத்தலான புனைவு.

3.ஒடுக்கப்பட்ட பாலியல் உணர்வுகளும் தொன்மக் கதைகளும் - ஜ்யோவ்ராம் சுந்தர்- வெகு சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர் சுந்தர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கும் படைப்பிது. உதாரணமாக இவ்வரிகளை குறிப்பிடலாம் "ஓங்கி ஒரு அறை விட்டான் (இலக்கணம் பார்ப்பவர்கள் ஓர் அறைவிட்டான் என்று வாசித்துக்கொள்ளவும்).
பின்நவீனத்துவ கதை என்பதற்கான எல்லா அறிகுறியும் இக்கதையை நிறைத்திருக்கின்றன. சிறுகதைக்கு "தொடரும்" போட்டு முடித்திருக்கிறார்.

மேலும் நான்கு கதைகள்:

நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
மழை புயல் சின்னம் - விஜய் மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா(லக்கிலுக்)
ஓடும் குதிரைக்கு பத்து கால்கள் - ரா.கிரிதரன்
பாலை நில காதல் - எஸ்.செந்தில்குமார்

(இக்கதைகளுக்கான குறிப்பை அகநாழிகை இதழுக்கு சந்தா செலுத்தி படித்து விடுங்கள் :)

கவிதைகள்:


இணையத்தில் பரவலாக எழுதும் கவிஞர்களின் படைப்பும் சிற்றிதழ்களில் தீவிரமாக இயங்கும் கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன.

என்னை அதிகம் கவர்ந்த குறுங்கவிதை:

தன்னிரக்கம்:

வெயிலை மிதித்ததெண்ணி
வருந்தும் ஒரு கணத்தில்
என் தலை மீது
தன் ராட்சச கால் பதித்து
நடந்து போயிருந்தது
சூரியன்.

-சேரல்

கட்டுரைகள்:


1.தமிழ்சினிமாவும் தமிழனும் சில மசால் வடைகளும் - அஜயன்பாலா சித்தார்த்:

2.ஒடுக்கப்பட்டவர்களின் ஆதிக்குரல் - வே.அலெக்ஸ்

3.பரமார்த்த குருவும்
சீடர்களும் அல்லது கள்ளத் தீர்க்கதரிசியும் பரிசுத்த ஆவிகளும் - வளர்மதி

4.அலகிலா சாத்தியங்களினூடே... - வெ.சித்தார்த்

முதல் கட்டுரையில் தமிழ்சினிமா 80 முதல் 1990 வரை அலசி ஆச்சர்யமூட்டும் பல தகவல்களை தொகுத்திருக்கிறார் அஜயன்பாலா. To be honest மற்ற கட்டுரைகள் இன்னும் வாசிக்கவில்லை :)

பிற:

1.கேபிள் சங்கர் இயக்கிய 'விபத்து' குறும்பட அறிமுகம்
2.உரையாடல் சிறுகதை பட்டறை குறித்த தனதனுபவத்தை பதிவு செய்திருக்கிறார் ஆதிமூலக்கிருஷ்ணன்
3.டச்சு மொழி திரைப்பட விமர்சனம் - நதியலை

ஒரே குறை:

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். படைப்பாளிகளுக்கு
மட்டுமே முக்கியத்துவம் தரப்படும் இதழ் நடத்தும் நான் பார்வையாளனாக இருந்துகொள்கிறேன் என்று நினைத்திருப்பாரோ?
பொன்.வாசுதேவனின் கவிதைகளும் இடம் பெற்றிருக்கலாம்.

குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய +:

1.சிறுகதைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் தற்போதைய இலக்கிய இதழ்கள் இரண்டு
உயிரெழுத்து(ஐந்து அல்லது ஆறு கதைகள்), யுகமாயினி(நான்கு கதைகள்).
அகநாழிகை முதல் இதழிலேயே ஏழு சிறுகதைகளுக்கு இடமளித்திருப்பது சிறுகதை இலக்கியம் மீதான வாசக ஈர்ப்பை அதிகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.

2.சிறுகதைகளுக்கும்,கவிதைகளுக்கும் ஏற்ற புகைப்படங்கள்.

சந்தா மற்றும் மேலதிக விபரங்களுக்கு
இங்கே சுட்டுங்கள்

12 comments:

said...

ஆமாம் ஆமாம் ஆசிரியரும் ஒரு பங்களிப்பு (எழுத்து வழி) கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்

said...

அழகான நடையில் விமர்சனம்.வாஸ்த்தவம்,பொன்.வாசுதேவனின் எழத்து வழி பங்களிப்பு.

said...

உங்கள் விமர்சனத்திற்கு நன்றி நிலாரசிகன். சிறுபத்திரிகை சிரமங்களை தெரிவித்திருந்தீர்கள், உண்மைதான். இலக்கிய ஆர்வலர்களின் தொடர் உதவியின்றி இது சாத்தியமில்லாத சூழல் உள்ளது. இதழில் சில குறைகள் உள்ளன. அதையும் வரும் இதழில் சரி செய்து விடலாம். அகநாழிகையில் இப்போதைக்கு நான் எழுதுவதாக உத்தேசம் இல்லை. கடைசிப் பக்கம் தலையங்கம் எழுதுவதற்காக வைத்த இடம்தான். திடீரென தலையங்கமாக எழுதுவதற்கு ஒன்றுமில்லையென தோன்றியது. அதனால்தான் அந்தப்பக்கம் வெற்றிடமாகவே அச்சாகியுள்ளது. இனி வாசகர்கள்தான் எழுத வேண்டும். பகிர்தலுக்கும், அன்பிற்கும் நன்றி.

- பொன்.வாசுதேவன்

said...

பகிர்வுக்கு நன்றி நிலா...சுருக்கமான அறிமுகம் !! நச் !!

said...

இதழுக்கு தேவையான படைப்புகள் வாங்குவதிலிருந்து, வடிவமைப்பு, புத்தக அச்சீடு மற்றை அனைத்து சிரமங்களையும் அகநாழிகை ஆசிரியர் திரு.பொன்.வாசுதேவன் மட்டுமே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஆழ்ந்த வாசிப்பாலும் தீவிர உழைப்புமே இந்த இதழின் நேர்த்தியும் அடர்வும் சாத்தியமானது.

இதழின் ஆசிரியர் குழுவில் எனது பெயர் வந்திருப்பதற்கு ஆசிரியரின் பெருந்தன்மை மட்டுமே காரணம்.

said...

தலையங்கம் எங்கே? சரி வேண்டாம் முதல் இதழ் பற்றிய குறிப்பாவது ஆசிரியர் கொடுத்திருக்கலாம். //

இதழினைப் படித்தபின் எனக்கும் இது தோன்றியது.

வாழ்த்துக்கள் அகநாழிகை வாசுதேவனுக்கும், ஆசிரியர் குழுவிற்கும்.

said...

niraya vaasikkireenga....

maththavangalum vaasikkanumnum ninaikkirenga.......

nalla vishayam..!!

said...

நல்ல அறிமுகம் நிலாரசிகன். என் கவிதை உங்கள் விருப்பமாக இருத்தல் குறித்து மிக்க மகிழ்ச்சி ;) அகநாழிகை, எல்லோரையும் சென்றடைந்து சிறக்க என் வாழ்த்துகள்.

-ப்ரியமுடன்
சேரல்

said...

அட அதுக்குள்ள விமர்சனமா! நல்லா எழுதியிருக்கீங்க நிலாரசிகன்.

said...

நன்றி நண்பர்களே.:)

said...

\\இதழுக்கு தேவையான படைப்புகள் வாங்குவதிலிருந்து, வடிவமைப்பு, புத்தக அச்சீடு மற்றை அனைத்து சிரமங்களையும் அகநாழிகை ஆசிரியர் திரு.பொன்.வாசுதேவன் மட்டுமே செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் ஆழ்ந்த வாசிப்பாலும் தீவிர உழைப்புமே இந்த இதழின் நேர்த்தியும் அடர்வும் சாத்தியமானது.

இதழின் ஆசிரியர் குழுவில் எனது பெயர் வந்திருப்பதற்கு ஆசிரியரின் பெருந்தன்மை மட்டுமே காரணம்.\\

நானும் இதையேத் தான் சொல்ல நினைத்தேன்

இதழின் நேர்த்தியான விமர்ச்னத்திற்கு மிக்க நன்றி நிலா.

said...

நல்லதொரு அறிமுகம்.!