Saturday, September 26, 2009

ப்ரியம்வதா!




சப்தங்களால் காயப்படாத இரவொன்றில் கடற்கரையில் கடல்பார்த்து அமர்ந்திருந்தபோதுதான் அந்த அலைபேசி அழைப்பு வந்தது. அலையுடன் பேசுவதை நிறுத்திவிட்டு அலைபேசியை எடுத்தேன்.அப்போதுதான் காவ்யா நீ என்னிடம்
முதன்முதலாய் பேசினாய். என் கவிதைகள் படித்திருப்பதாக சொன்னாய். கவிதையுலகிற்குள் கைகோர்த்து நடக்க ஆரம்பித்தோம்.

எழுதுகின்ற கவிதைக்கெல்லாம் முதல் வாசகியாய் முதல் விமர்சகியாய் மாறிப்போனாய். தொலைபேசியில் தொடர்ந்த நம் நட்பு சந்தித்துக்கொள்ளும் நாளுக்காக காத்திருந்தோம். மழை ஓய்ந்த மாலையொன்றில் பறக்கும் ரயிலேறி உன் அலுவலகம் வந்தேன்.
கவிதை பேசிக்கொண்டே கடற்கரை சென்றோம் நாம். ஐந்தடி சிகரம் நீயென்று புரியவைத்தது
உன் ஆழ்ந்த இலக்கியவாசம். டால்ஸ்டாயும்,நெருதாவும் வந்துபோனார்கள் நம் நட்புக்குள்.
உலக திரைப்படம் பற்றி பேசிக்கொண்டே இருந்தாய். உன் கனவுகளையும் என் கனவுகளையும்
நாம் பகிர்ந்துகொண்ட நவம்பர் மாத மழைநாள் உனக்கு நினைவிருக்கிறதா தோழி?

நட்பின் மற்றொரு பரிமாணத்தை உன்னில் கண்டேன்.என் வீடுதேடி வந்து என் அறையெங்கும்
சிதறிக்கிடக்கும் கவிதைபுத்தகங்களை ஒழுங்காய் அடுக்கி வைத்துவிட்டு தலையில் கொட்டிச் செல்லும் அற்புத தோழி நீ. உன் மடியில் முகம் புதைத்து என் கனவுகளை எல்லாம் உன்னில் கொட்டிவிட துடித்த மனதை கட்டுப்படுத்தி உன்னை ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு பிரிய மனமின்றி வீடு திரும்பினேன்.

வெயில் சுடுகின்ற மார்ச் மாத நாளொன்றில் ப்ரியம்வதாவிடம் நீ பேசிக்கொண்டிருக்கிறாய் எனத் தெரிந்து துடித்துப் போனேன். வதா என்னை நெருப்புக் குழியில் தள்ளிய துரோகி என்று தெரிந்தும் அதை நீ செய்தாய், எனக்கு பகை என்றால் உனக்கும் இருக்க வேண்டுமென்பதல்ல. ஆனால் அவளைப் பற்றி உனக்குத் தெரியாது அவள் அனல் காற்றைப் போன்றவள், நீயோ தென்றல். உன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்து பின்னொரு நாளில் தூக்கி எறிந்துவிடுவாள். நீ மென்மனதுக்காரி உன்னால் தாங்க முடியாது என்றுதான் உன்னை நான் தாங்கப் பார்க்கிறேன். ஆனால் இப்போது சில நாள்களாய் என்னை உன் கரங்கள் தள்ளி விடுகின்றன.

நானும் வதாவும் கடற்கரை காற்றின் ஈரமான சுவாசத்துடன் மென்மையாக கை கோர்த்து கதைத்த காலங்களைப் பற்றியெல்லாம் உன்னுடன் பகிர்ந்திருக்கிறேன். அவளுக்கு அப்போது நானும் என் அருகாமையும் காதலைப் போன்ற ஒன்றும் தேவையானதாக இருந்தது. அவளது வெறுமையான மாலைகளை என் கவிதைகள் இட்டு நிரப்பியது, தளும்பத் தளும்ப. அக்கறையான வார்த்தைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் வெறும் வேஷமாய் போனது காலம் எனக்களித்த துயரான பரிசு.

அவள் மாறிப்போவாள் என்று நான் நினைத்திருக்கவில்லை. மாற்றம் காணாதது ஏது சொல் காவ்யா? நீயும் தான் சில பொழுதுகளில் மாறிப்போகிறாய். விஷம் தீட்டிய வார்த்தைகளால் என்னை குத்தி கிழித்துப்போட்டு வடிந்த குருதியைப் பார்த்து புன்னகைத்திருக்கிறாய்.
அதன்பின் காயங்களுக்கு மருந்தாகவும் மாறியிருக்கிறாய்.
பெண் என்பவள் பெரும் மாயவலை. சிக்க வைத்து சிக்க வைத்து சிரிப்பவள். தானும் சிக்கிக் கொள்பவளாய் பாவனை செய்பவள். கடைசியில் அம்போவென்று விட்டுவிட்டு தன் வானில் தன் சிறகையே கதகதப்பாக்கிக் கொண்டு பறந்துவிடுபவள். வதாவும் அப்படித்தான் செய்தாள். காதலை சொல்லப் போகும் நாளிற்காக நான் காத்துக் கிடந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாக தேர்ந்தெடுத்தேன். அவளிடம் சொல்லியும் சொல்லாத என் காதலை பிரகடனப்படுத்த முற்றிலும் தயாரானேன்.

அன்று என்னை எக்மோர் மியூசத்திற்கு அழைத்திருந்தாள். கடைசியில் நானே அருங்காட்சியகத்தில் வைக்கப்படப்போகும் பொருள் போலாவேன் என்று நினைத்திருக்கவில்லை. அவள் புது உடை அணிந்திருந்தாள். தலையில் எனக்கு பிடித்த மல்லிகைச் சரம். உதட்டில் புன்னகையுடன் என்னை வரவேற்றாள். என் பையினுள் அவளுக்கான வாழ்த்து அட்டையில் இருக்கும் கவிதை துடித்துக் கொண்டிருந்தது.

என்னடா ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கிறாய் என்று தண்ணீர் பாட்டிலை தந்தாள். நான் பெருகி வழிந்தோடும் வேர்வையை துடைத்து ஒரு சிரிப்பு சிரித்து வைத்தேன். அது அவளின் தினம் போலும், விடாமல் பேசிக் கொண்டேயிருந்தாள். இடையில் ஏதேனும் சந்தர்ப்பத்தில் சொல்லிவிடலாம் என்று பொறுமை காத்தேன். அவளின் அத்தனை உளறல் பேச்சுக்களையும் உலகின் தலைசிறந்த கவிதைகளைப் போலெண்ணி கேட்டுக் கொண்டிருந்தேன்.

இறுதியில் அவளிடம் என் காதலை சொல்ல முனைந்த போது “சிவா,உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்” என்றாள்.
ஆர்வமும்,பதைபதைப்பும் என்னை தொற்றிக்கொண்டன.
அவள் எவ்வித உணர்வுகளையும் வெளிக்காட்டாமல் சொன்னாள்.
“உங்க ரூம்மேட் குமாரை நான்.. ” அதற்கு மேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சட்டென்று திரும்பி விறுவிறுவென்று வெளியேறி விட்டேன் காவ்யா. என் அறைத்தோழன் குமாரையா அவள் காதலிப்பது. என்னைக் காதலிப்பதாய் அல்லவா அவள் ஒவ்வொரு செயல்கள் இருந்தன, எப்படி எங்கே இவர்கள் காதலை வளர்த்தார்கள், அதென்ன செடியா வளர்ப்பதற்கு என்று இந்த நேரத்திலும் அபத்தமாய் என் புத்தி இடித்துரைத்தது.

காதலை பெரிதும் மதிக்கும் உணர்வினன் நானென்று தெரியும்தானே காவ்யா? என் காலின் கீழ் பூமி உருண்டு கொண்டிருந்தது. சொற்களற்ற சொல் என் தொண்டைக் குழிக்குள் அமர்ந்து கொண்டு என்னை திக்க வைத்தது. ஒருவழியாய் அவளிடமிருந்து தப்பி வந்தால் போதும் என்றாகிவிட்டது.
குமாரும் நானும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அவளுக்குக் காண்பித்திருந்தேன். அவனைப் பற்றி சில சமயம் சொல்லியிருக்கிறேன். எதேச்சையாக ஒரு நாள் அவள் என்னை சந்திக்க வந்திருந்த போது நான் அங்கிருந்திருக்கவில்லை. குமாரும் அவளும் பேசியிருக்கிறார்கள். அதன்பின் அவர்களின் பேச்சுக்கள் நிற்கவேயில்லை...இன்று என் தலையில் பேரிடியாய் இறங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட மித்ர துரோகிகளிடம் நான் எப்படி முன்பு போல் பழகுவது. அவளுக்கு என் மீது வெறும் அன்பும் அக்கறையும் மட்டுமிருந்திருந்தால் நான் இப்படியெல்லாம் புலம்பியிருக்கமாட்டேன். என்னைத்தான் முதலில் அவள் காதலித்தாள், என் வாழ்க்கையில் எப்போதும் எதையும் தள்ளிப்போடும் குணம் என்னை குழியில் தள்ளிவிட்டது.

ஆனால் என் காதலை நான் சொல்லியிருந்தாலும் இவர்களின் காதல் நடந்தேறியிருக்கும். என்னை ஒதுக்கித்தள்ளியிருப்பாள், தூக்கி எறிந்திருப்பாள் அந்த மாயக்காரி. ஒன்று மற்றொன்றை விட சிறந்தது என்று பொருளைப் போல காதலை நிலைப்படுத்திவிட்டாள். நல்ல வேளை நான் தேர்ந்தெடுக்கப்படாமலேயே புறக்கணிக்கப்பட்டேன். அது வரையிலும் காயம் அதிகமேற்படாமல் தப்பினேன். ஆனால் இது ஆறா வடுவாய் என்னிதயத்தில் ஊவா முள்ளாய் உறுத்திக் கொண்டிருக்கிறது.

நீ அவளிடம் அளவளாவிக் கொண்டிருப்பது எதன் பொருட்டு என்றெனக்குத் தெரியவில்லை. நேசம் கொண்ட நெஞ்சில் நீ நெருஞ்சி முள்ளை ஏன் சொருகுகிறாய். காதல் இருக்கும் திசையை விட்டு விலகி நட்பு தேசத்தில் வந்திறங்கினால் இங்கும் அதே கொடுமை. என் மீது குறைப்பாடா அல்லது பெண்கள் என்றாலே இப்படித்தானா? புரியவில்லை இனிய தோழி. உருகிக் கரைந்து மடிந்து கொண்டிருக்கும் நான் செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். காதல்தான் என்னை கசக்கி பிழிந்து ரத்தமும் சதையுமாய் கிழிந்தெறிந்துவிட்டது நட்பாவது என்னிடம் நிரந்தரமாய் இருக்கட்டுமென்று நினைத்துக்கொண்டு என் மனக்குமறலையெல்லாம் கொட்டி ஒரு மின்னஞ்சல் உனக்கு அனுப்பினேன்.

என் வாழ்வின் மொத்த அதிர்ச்சியும் உன் பதிலில் உறைந்திருந்தது.

டியர் சிவா,
மிகச்சுருக்கமாக உன்னிடம் ஓர் நிஜம் சொல்கிறேன்.
குமார் என் காதலன். ப்ரியம்வதா என் தோழி. எங்களை சேர்த்துவைக்க முயன்றவர்களில் மிக முக்கியமானவள்.
ப்ரியம்வதாவைத்தான் நீ நேசித்தாய் என்பது இவ்வளவு நாளாய் எனக்கு தெரியாது.
-காவ்யா.

என் தேவதையை இக்கணமே பார்த்து அவளிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். என் அன்பின் தோழியே உனக்கு என் திருமண வாழ்த்துக்கள்.இப்போது நிதானம் கலந்த அவசரத்துடன் நான் கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.அலைபேசி சிணுங்கியது."ஹலோ சிவா" ப்ரியம்வதாவின் குரலை கேட்ட ஆனந்த அதிர்ச்சியில் "வதா,நானே உன்னை பார்க்க வரலாம்னு" நான் முடிப்பதற்குள் இடைமறித்தவள் "சிவா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்" என்றாள்.

-நிலாரசிகன்.

Friday, September 25, 2009

கிகுஜிரோ - திரைவிமர்சனம்



----------------------------
இயக்குனர்: டகேசி கிட்டானோ
வெளியான ஆண்டு: 1999
நாடு : ஜப்பான்
----------------------------

யாருமற்ற நிசப்த இரவில் வாழ்க்கை நம்மீது சுமத்தியிருக்கும் சுமைகளை சற்றே களைந்துவிட்டு நிம்மதியாய் சில
மணித்துளிகளேனும் கழிக்க வேண்டுமா? கிகுஜிரோ திரைப்படம் பாருங்கள்.

பாட்டியின் பராமரிப்பில் வளரும் சிறுவன் மாசோ. பள்ளியில் கோடைவிடுமுறை ஆரம்பித்தவுடன் பொங்கிவழியும் சந்தோஷத்துடன்
வீட்டிற்கு ஓடிவருகிறான். தன்னுடைய கால்பந்தை எடுத்துக்கொண்டு உற்சாகத்துடன் மைதானம் நோக்கி விரைகிறான். மைதானம் காலியாக கிடக்கிறது. கோடை விடுமுறையில் கால்பந்து பயிற்சி கிடையாது என்கிறார் பயிற்சியாளர். தன்னையொத்த சிறுவர்களெல்லாம் அவர்களது சொந்தங்களை காண சென்றுவிட்டார்கள் என்பதை நினைத்தபடியே சோர்வுடன் வீடு திரும்புகிறான்.

பாட்டியிடம் எங்கே போகலாம் எனக் கேட்கிறான். உன் அப்பா விபத்தில் மரித்துவிட்டார்,அம்மா தூரத்திலுள்ள நகரத்தில் வேலை பார்க்கிறாள்.
உன்னை அழைத்து செல்ல யாருமில்லை என்கிறாள். தனி ஆளாக தன் அம்மாவைத் தேடி கிளம்புகிறான் சிறுவன் மாசோ.

அண்டை வீட்டுக்கார பெண்மணி மாசோ தனியே செல்வதை கண்டு கலங்கி தன் கணவனை இவனுடன் துணைக்கு அனுப்புகிறாள்.
கிறுக்குத்தனம் நிறைந்த அவளது கணவன் சிறுவனிடமுள்ள பணத்தை எல்லாம் சைக்கிள் ரேஸில் தொலைத்துவிடுகிறான்.
அதன் பிறகு இருவரும் கஷ்டப்பட்டு அவனது அம்மாவின் வீட்டை கண்டுபிடித்துவிடுகிறார்கள். அவளுக்கு ஒரு குடும்பம் இருப்பதை காணும்
மாசோ திரும்பி நின்று அழுகிறான்.

அவனது அழுகையை நிறுத்த கிகுஜிரோ ஒரு சிறு தேவதை பொம்மையை(Angel bell) கொடுத்து "நீ வந்தால் உன் அம்மா இதை உனக்கு தரச்சொன்னாள்" என்றும் அங்கே கண்டது வேறோர் பெண் உன் அம்மா அல்ல என்றும் சமாதானப்படுத்த முயல்கிறான்.

இருவரும் மெல்ல நடக்கிறார்கள். வழியில் ஒரு எழுத்தாளனும் இரு நாடோடிகளும் இவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சிறுவன் மாவோவை சிரிக்க வைக்க,அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களும் வித்தைகளும் மனதை இலகுவாக்கிவிடுகிறது. அவனது சந்தோஷங்களை பகிர்ந்தபின்னர்
அனைவரும் விடைபெறுகிறார்கள். தன் வீட்டை நோக்கி உற்சாகமுடன் ஓடுகிறான் சிறுவன் மாவோ.

பெரிதாக கதையென்று ஒன்றுமில்லாதபோதும் அழகான காட்சிப்படுத்துதலால் மனதில் இடம்பெறுகிறது இத்திரைப்படம். சிறுவனுக்கும் வயதானவரும் இடையே நடக்கும் சிறு சிறு சம்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன. வழியில் லிப்ட் கேட்டு யாரும் தராததால் ரோட்டில் ஆணியை வைத்து காத்திருக்கின்றனர். விரைந்து வரும் கார் அந்த ஆணியின் மீதேறிய வேகத்தில் அருகிலிருக்கும் பள்ளத்தில் உருள்கிறது.
அதைக்கண்டவுடன் கிகுஜிரோவும்,மாவோவும் ஓட்டம் பிடிக்கின்றனர். இந்தக்காட்சியில் கால்களை விரித்துக்கொண்டு தலையை முன்னால் நீட்டியபடி ஓடும் கிகுஜிரோவைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

எதற்கெடுத்தாலும் வாய்கொடுத்து மாட்டிக்கொள்ளும் கிகுஜிரோ நடிப்பில் பின்னியிருக்கிறார். நான்கு பேரிடம் உதைவாங்கிவிட்டு படிக்கட்டில் தவறி விழுந்தேன் என்று சொல்லும் காட்சியும்,சிறுவனை பிரியும் கடைசி காட்சியிலும் மனதை உருக்கிவிடுகிறார். சிறுவன் மாவோவின் உடல்மொழி ஆச்சர்யமூட்டுகிறது. கவலைப்படும் தருணங்களிலெல்லாம் மெளனமாய் தலைகுனிவதும்,சந்தோஷத்தின் எல்லையில் குதித்தோடுவதும் சிறுவர் உலகிற்கே நம்மை இழுத்துச் செல்கிறது.

ஒவ்வொரு காட்சியிலும் துவங்குகின்ற நகைச்சுவை அக்காட்சி முடியும்போது மெல்லிய சோகமாய் மனதில் நிலைக்கிறது.
பெற்றோரின் அரவணைப்புக்காக ஏங்கும் சிறுவர்களின் மனநிலையை மிக நேர்த்தியான கவிதைபோல் சொல்லியிருக்கிறார் இயக்குனர்(இவர்தான் கிகுஜிரோவாக நடித்தவர்)

படம் முடியும் தருவாயில் எழும்புகின்ற இசை நம் இரவை அழகாக்குகிறது,

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி!

-நிலாரசிகன்.

Thursday, September 24, 2009

தொலைகடல்



விரல் பற்றும் தொலைவில்
எப்போதும் இருப்பதில்லை
உன் இருத்தல்.
கடிகார முள்ளில்
சிக்கித் துடிக்கும்
மீனாக
நம் ப்ரியங்கள்.
கனவுகளின் கறுப்புவெள்ளை
பிரதேசங்களெங்கும் பொழிகிறது
உன் குரல்மழை.
தூரத்திலிருந்தும்
அதே குறுநகையுடன்
எப்போதும் எனக்குள்
வசிக்கிறாய்
நீ.

Wednesday, September 23, 2009

கண்மணி குணசேகரனின் - அஞ்சலை - நூல்விமர்சனம்

------------------------------------------
புத்தகம்:அஞ்சலை
பகுப்பு: நாவல்
ஆசிரியர்:கண்மணி குணசேகரன்
வெளியீடு:தமிழினி பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு வெளியான ஆண்டு:2005
விலை:ரூ 160
--------------------------------------------
முதல் மரியாதை திரைப்படத்தின் முழுக்கதையை 'மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டிதேரு' என்கிற ஒற்றை வரியில் சொல்லியிருப்பார் வைரமுத்து.
அதேபோல் 'அஞ்சலை' எனும் இந்நாவலின் கதையை கண்மணி குணசேகரன் இப்படி சொல்கிறார்.
"வேண்டும் என வந்து, வேண்டாம் எனப் போய், திரும்பவும் வேண்டும் என நீளும் நடை"

ஏழைப்பெண் அஞ்சலையின் திருமண வயதிலிருந்து துவங்குகின்ற நாவல் அவளை சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை மிக அற்புதமாய் எடுத்துச்செல்கிறது.
கதையை இங்கே எழுதுவதில் அர்த்தமில்லை,அது வாசகனை முன்முடிவுகளுக்கு ஆழ்த்தி விடும்.
கதை நடக்கும் களம் தான் என்னை அதிகம் கவர்ந்தது.
கார்குடல்,மணக்கொல்லை,தொளார் இந்த மூன்று கிராமத்தில்தான் அஞ்சலையில் வாழ்வு அல்லல்படுகிறது.
நெல்வயல் நிறைந்த கார்குடல்,முந்திரி தோப்புகள் நிறைந்த மணக்கொல்லை,சிறுதொழில் ஊரான தொளார் நம் கண்முன்னே விரிகிறது குணசேகரனின் வரிகளால்.

வாழ்க்கையில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்கத் தவறிய/தெரியாத அபலையாக அஞ்சலையின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருப்பினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அலுக்காத உழைப்பை கொண்டிருக்கிறாள் அஞ்சலை என்பதை மிக அழகாக சிருஷ்டித்திருக்கிறார்.

அஞ்சலையின் சுகதுக்கங்களை புரிந்துகொண்டு பரிவாக உடனிருக்கும் தோழி வள்ளியும், தங்கச்சிக்காக ஓடோடிவரும் இளைய அக்காள் தங்கமணியும்,ஒருபுறம் மகளின் போக்கு பிடிக்காவிட்டாலும் "சனியன் எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரிதான்" எனும் மனோபாவத்தில் தள்ளாடும் தாய் பாக்கியமும்,ஊரே தவறாக சொன்னாலும் அம்மாவை தவறாக எப்போதும் நினைத்திடாத வெண்ணிலாவும் என்றும் மறக்கமுடியாத பாத்திர படைப்பு.

நாவல் முழுவதும் இழையோடும் வெயிலும் வெயில் சார்ந்த பகுதிகளும் வாசகனையும் வெக்கை நிறைந்த பூமிக்கு இழுத்துச்செல்கின்றன. அதிகம் வருணனைகள் இல்லாமல் எழுதப்பட்டுள்ள இந்நாவல் பெரும்பாலும்
உரையாடல்கள் மூலமாகவே நகர்கிறது. சேரி மக்களின் அன்றாட வாழ்வில் வெகு இயல்பாக கலந்திருக்கும் சண்டைகளும்,சிறு சச்சரவுகளும் நாவலெங்கும் விரவிக்கிடக்கிறது. சோற்றுப்பானையில் விழுந்த இடியாய் வாழ்க்கை தொலைத்து நிற்கும் அஞ்சலை மீது எப்போதும் கேலிகளும்,குத்தல் பேச்சுகளும் எவ்வித குற்றவுணர்வுமின்றி வீசப்படுகின்றன. அந்த குரூர சந்தோஷத்தில் கழிகிறது அவர்களது காலம்.

மூத்த அக்காள் கல்யாணியின் ஈவு இரக்கமற்ற வசவுகளும்,செயல்களும் எழுத்தில் காணும் வெற்றுச்சொற்களாக படவில்லை. அவை ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்திருக்கும்
வன்மத்தையும்,வக்கிரத்தையும் உணர்த்துபவையாக உள்ளன.

நாவலில் என்னை அதிகம் கவர்ந்தது வட்டார வழக்கு. நவீன புனைக்கதைகளில் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரங்களில் அஞ்சலையே வலுவான படைப்பு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

-நிலாரசிகன்.

Tuesday, September 22, 2009

இரண்டாம் கருவறை





வார்த்தைகளால் விவரிக்க முடியாத உனதன்பில் திளைத்திருக்கிறது என் மனச்செடி. போர் தொடுக்கும் என் சுடுசொற்களையும்
சிறு மெளனத்தால் அழகாய் கடந்துவிடும் உனது லாவகம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். வர்ணங்கள் நிறைந்த மழையை என்னில்
எப்போதும் பொழிந்துபோகும் வெண்மேகம் நீ.

கரம் பற்றிக்கொண்டு கால்கள் மணலில் புதைய கடற்கரையில் என்னோடு நீ நடந்து வருகையில் நினைவுகளில் முகிழ்கிறதென்
கால்சட்டை பருவ நாட்கள். நீண்டதொரு ரயில் பயணத்தில் என் தோள் சாய்ந்துகொண்டு ஜன்னல்வழியே தூரப்பச்சையை ரசித்த
உனது கருவிழிக்குள்தான் நான் துயிலும் இரண்டாம் கருவறை இருக்கிறது.

முத்தங்களால் என் கன்னம் நனைக்கும் உன் எச்சில்கள் - அமுதசுரப்பிகள். சத்தமின்றி எனக்குள் யுத்தமொன்று உருவாகி அடங்கிப்போய்விடும்
உன் கோபத்தருணங்களில். சூழ்நிலை சிறைக்குள் நான் தவிக்கின்றபோதெல்லாம் உன் சாந்தப்பார்வையின் ஞாபகநிலவுகள் என்னில் பொழிந்து என்னை உயிர்ப்போடு வைத்திருக்கும்.

என் நண்பர்கள் வியந்துபோகிறார்கள் எப்படி உனக்கு மட்டும் இரட்டை நிழலென்று. என் ஒற்றை உடலுக்குள்ளிருப்பது இரண்டு உயிர்கள் என்பதை எப்போது உணர்வார்கள்? நமக்கு மட்டுமே தெரிகின்ற சங்கேத வார்த்தையை நான் உச்சரிக்கும் போதெல்லாம் வெட்கத்தில் உன் முகத்தில் விதவிதமாய் பூக்கள் மலரும்.

நிறைந்த ப்ரியங்களுடன் உனக்கென நானெழுதும் கடிதங்களெல்லாம் கவிதைகளாகி விடுகின்றன. கவிதைகளெல்லாம் காதலாக மலர்கின்றன.
உன் உதட்டுச்சுழிப்பிலும் ஒற்றை மருவிலும் கால்சுற்றும் நாய்க்குட்டியாகி போனது என் ஆண்மை.

இவைபோன்ற கனவுகள் எப்போதும் அழகாய்த்தானிருக்கின்றன.

Saturday, September 19, 2009

இரண்டாம் தவறில் ஜனித்தவன்





கனவுகளில்
இறப்பை கொண்டாடுகிறான்
அவன்.
சிதை அல்லது கல்லறை
ஏதோவொன்றில் அவனது வாழ்க்கை
முற்றுப்புள்ளியென மாறுவதில்
பெருமகிழ்ச்சி கொள்கிறான்.
தன் காலடியில்
மருண்ட விழிகளுடன் வானமும்,
தலைமயிர் கற்றைக்குள்
கதறி அழுகின்ற
பச்சைக் கடலும் அவனுக்கு
மிகுந்த உவப்பளிக்கிறது.
ஆதாம் ஏவாள் இருவரும்
அவனது குற்றவாளிக்கூண்டில்
தலைகுனிந்து நிற்கின்றனர்.
முதல் மனிதனின் இரண்டாம் தவறில்
ஜனித்தவன் நான் என்கிறான்.
கன்னத்தில் வழிந்தோடும்
கர்த்தனின் கண்ணீர் பிசுபிசுத்தபோது
கனவு கலைந்தவன்
இப்போது
தன் பிறப்பை கொண்டாடுகிறான்.

Wednesday, September 16, 2009

வீதியெங்கும் உலவும் ப்ரியங்கள்




1.

ஓடிவந்து கால் சுற்றும் நாய்க்குட்டியின்

ப்ரியங்களை வெகு இயல்பாய்

மறுதலித்து செல்கிறாய்.

வலிகொண்ட அதன் ப்ரியங்கள்

உன்னை பின் தொடர்ந்து

அன்பை யாசிக்கிறது.

ஒரு குவளையில் பாலூற்றி

அதற்கு அளிக்கிறாய்.

கடமை முடிந்துவிட்ட

திருப்தியில் உறக்கத்தில் ஆழ்ந்துபோகிறாய்.

அன்றிலிருந்து மிருகமானது

ப்ரியங்கள் அறுந்த

நாய்க்குட்டி.

2.

மழைத்துளிகளை சுமந்து வந்த

நாய்க்குட்டி

கண்ணாடியில் லயித்திருக்கும்

உன்னருகில் உடலை சிலிர்த்துக்கொண்டது.

இடம்பெயர்ந்த மழைத்துளிகள்

உன்

கன்னத்தில் பருக்களாயின.

சிவந்த விழிகளுடன்

நாய்க்குட்டியை துரத்துகிறாய் நீ.

உன்னிலிருந்து உதிர்கின்றன

உலர்ந்த மழைத்துளிகள்.

-நிலாரசிகன்.
_______________

Monday, September 14, 2009

இரு கவிதைகள்




மின்னல் தாண்டவம்


இருளின் கற்பை மின்னலொன்று
இரு துண்டுகளாய் வெட்டி எறிய
முயன்று கொண்டிருக்கிறது.
உலகின் மிகப்பெரும் துளி
அலையின்றி மெளனித்துக் கிடக்கிறது.
சுவாசம் தொலைந்த காற்று
வீதியெங்கும் புலம்பித் திரிகிறது.
முறிந்து விழுகின்றன விருட்சங்கள்.
அங்குமிங்கும் பரிதவித்த
இருள்
யாருமற்ற மணல்வெளியில்
பொத்தென்று விழுந்தபிறகு
ஒளிக்கண்களை தீரத்துடன்
திறந்தேன்.

நட்சத்திராவின் பொம்மைகள்


கருமை நிற சிறகும்
அடர்வன இருளும்
தன்னுடலில் கொண்டிருந்த
பறவைபொம்மையிடம் அதன்
பெயரை கேட்டுக்கொண்டிருந்தாள்
நட்சத்திரா.
பதிலேதும் பேசாத பொம்மை
கண்களை மட்டும் சிமிட்டியது.
பதிலுக்கு இவளும்
கண்களை சிமிட்டினாள்.
அலகு திறந்து காகா என்றது
பொம்மை.
அதன் ஒரு காலை
உடைத்தவள் இப்போ உன்
பெயர் "கா" தானே என்கிறாள்.

Friday, September 11, 2009

பெண்களுக்கான தளம்:

சமையல் முதல் சமகால அரசியல் வரை மிகச்சிறந்த கருத்தாடல் தளமாக விளங்குகிறது
Indusladies.com

பெண்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் அடங்கிய தளம் என்பதால் பல வித உரையாடல்களை
காண முடிகிறது. சிறந்த உபயோகமான தளம்.

Thursday, September 10, 2009

நட்சத்திரா பற்றி இரு கவிதைகள்:



1.
சடசடவென்று மழை பெய்தாலோ
அல்லது
பலத்த வேகத்தில் காற்று வீசும்போதோ
நட்சத்திரா தன் தலையை சாய்த்துக்கொண்டும்
உதடுகளை குவித்துக்கொண்டும்
ஏதேதோ செய்தபடியே இருக்கிறாள்.
மூளை வளர்ச்சியற்ற குழந்தைக்கான
எவ்வித அறிகுறியும் இல்லாமலிருந்தும்
அவளை சுற்றிய உலகம்
அருகில் வர எத்தனிக்கவில்லை.
இன்று,
வகுப்பு முடிந்தவுடன் ஓடிச்சென்று
ஜன்னலோரம் விழுந்திருந்த
அணில்குட்டியை எடுத்துக்கொண்டு
கொஞ்ச ஆரம்பிக்கிறாள்.
மெதுவாய் மிக மெதுவாய்
அவளுக்கு தேவதையின் சிறகுகள்
முளைக்கத்துவங்கியதை
அணில் தவிர
வேறெவரும் கவனிக்கவேயில்லை.

2.

மின்னல்கள் நர்த்தனமிடும் கண்களை
பெற்றிருக்கிறாள் நட்சத்திரா.
அம்மா என்றழைக்கும் போதும்
உறக்கத்திலிருந்து விழிக்கும்
அதிகாலையிலும் அவளது
கண்களில் மின்னல்களின் நர்த்தனம்
நடந்தேறும்.
பட்டுப்பாவாடையுடன் கோவில்
திருவிழாவிற்கு செல்லும் வழியில்
கால்தடுக்கி கீழே விழுந்தபோது
மின்னல்களை தொலைத்துவிட்டாள்.
அழுதுகொண்டே எழுந்து
நடந்தவள்,
மிட்டாய் கிடைத்து
அழுகை நின்றவுடன்
தொலைந்த மின்னல்கள்
ஓடோடி வந்து,
கண்சிமிட்டும் நட்சத்திரங்களை
பரிசளித்து அவளுடன் சிரித்தன.

-நிலாரசிகன்

Wednesday, September 09, 2009

சமீபத்தில் ரசித்தவைகளின் தொகுப்பு:



குறும்படம்:

நானும் என் விக்கியும்:-

சுட்டி
: http://www.cultureunplugged.com/play/1127/Naanum-En-Vickyum---/TUE9PStP

நம் அனைவருக்கும் பால்யகால நண்பர்கள் பட்டியலில் முதலிடம் பிடிப்பது சைக்கிளாகத்தான் இருக்கும். புது சைக்கிள் வாங்கிய புதிதில் நாற்பது முறை விழுந்திருக்கிறேன்.கையிலும் முட்டியிலும் அடிபடாத நாட்களே கிடையாது. ஆனாலும் சைக்கிள் மீதான என் காதல் என்றும் குறைந்ததே இல்லை.பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிக்குள் காலடி எடுத்துவைத்தபோது மோட்டார் சைக்கிளுக்கு மனம் தாவியபோதும் என் பழைய சைக்கிளை பத்திரமாகவே வெகுகாலம் வைத்திருந்தேன்.

நானும் என் விக்கியும் ஒரு சைக்கிளின் பார்வையில் எடுக்கப்பட்ட குறும்படம்.இதற்கு விமர்சனம் எழுதும் மனநிலை இப்போதில்லை.காரணம் என் சைக்கிளின் ஞாபகங்களோடு மனம் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.இப்படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.

*********************************************************************************


புத்தகம்:

காவலன் காவான் எனின்:நாஞ்சில் நாடன்
(கட்டுரை தொகுப்பு/தமிழினி வெளியீடு/விலை ரூ.90)


கட்டுரை எழுதும் எண்ணம் உங்களுக்கு இருக்கிறதா? கண்ணை மூடிக்கொண்டு நாஞ்சில் நாடனின் கட்டுரைகளை வாசிக்க ஆரம்பியுங்கள்(கண்ணை மூடிகிட்டா எப்படி வாசிக்கறதுன்னு கேள்வி கேட்க தோணுதா? அடடே நீங்களும் கட்டுரையாளர்தான்!!:)

நாஞ்சில் நாடன் சமீபத்தில் எழுதிய 22 கட்டுரைகள் இடம்பெற்றுள்ள நூல் இது.
இருபத்தி இரண்டு முத்துகள் எனலாம்.அதில் இரண்டை வைரம் என்றும் விளிக்கலாம்.
(குடியும் குடி சார்ந்த எண்ணங்களும்/கற்பனெப் படுவது)
நாஞ்சில் நாடனுக்கே உரித்தான எள்ளலும், ஆழ்ந்த இலக்கியச்செறிவும்,கற்றுத்தேர்ந்த மரபும் ஒவ்வொரு வரியிலும் உணரமுடிகிறது.

என் புத்தக சேமிப்பில் யாருக்கும் தர விரும்பாத/பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய மிக முக்கிய நூல்களில் இதுவுமொன்று :)

*********************************************************************************

புத்தகம்:
மரம் பூக்கும் ஒளி
(நவீன கவிதைகள்/கோகுலக்கண்ணன்/காலச்சுவடு பதிப்பகம்/விலை:ரூ.75)


புத்தக கடையினுள் ஒவ்வொரு புத்தகமாக கடந்து வந்துகொண்டே இருந்தபோது எதுவுமே "என்னை வாங்கிக்கொள்,உன்னோடு வாழவிரும்புகிறேன்" என்றுரைக்கவில்லை. எந்த புத்தகத்திற்கும் என்னை பிடிக்கவில்லையா அல்லது எனக்கு எந்த புத்தகத்தையும் பிடிக்கவில்லையா என்கிற குழப்பத்தோடு புத்தகமுகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.
அப்போது கண்ணில் பட்டது "மரம் பூக்கும் ஒளி" தலைப்பின் வசீகரத்தில் கையிலெடுத்து
ஏதோவொரு பக்கத்தை பிரித்தேன்.கீழுள்ள கவிதை இருந்தது

"ஒரு அணில்
உடைந்த முட்டை ஓட்டுக்குள்
முகத்தைப் புதைத்து அழுகிறது"


சட்டென்று ஓர் உலகம் என் முன் தோன்றி அதில் அழகிய தோட்டமொன்று உருவாகி அங்கே தேன் சிந்தும் பூக்களும்,இசைபாடும் குயில்களும் நிறைந்திருக்க,சாய்வான நாற்காலியில் வானம் பார்த்து நான் கிடக்க,அங்கே வந்த ஒரு அணில் தன்னை யாரும் கவனிக்க வில்லையே என்கிற ஏக்கத்தில் அருகிலிருந்த உடைந்த முட்டை ஓட்டுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டு தேம்பி தேம்பி அழுவதாக கற்பனை விரிந்தது.

உடனே புத்தகத்தை வாங்கிவிட்டேன். மற்ற கவிதைகளும் மிக அற்புதமாகவே இருக்கிறது.
நல்லதொரு வாசிப்பனுவம் கிடைக்கும்.

*********************************************************************************

விளையாட்டு:

இலங்கை Vs நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியில் வெகுகாலம் கழித்து
ஷேன் பாண்ட் விளையாடினார்.முன்புபோல் வேகமாக பந்துவீசவில்லை. ஆனாலும் துல்லியமான பந்துவீச்சால் சில விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நியுசிலாந்து வெற்றி பெறும் என்கிற எண்ணத்தை மலிங்காவும்,துஷாராவும் மாற்றினர்.இந்தியா இந்த கோப்பையை வென்றால் தரவரிசையில் முதலிடம் பிடிக்கலாம். மலிங்காவிடம் வீழ்வார்கள் என்றே எண்ணுகிறேன்.(அதெப்படி மலிங்கா மட்டும் "மாங்கா" எறிவதுபோல் பவுலிங் செய்கிறார்??)

"தல" சச்சின் விளையாட்டை காணும் ஆவலில் காத்திருக்கும் ரசிககோடிகளில்
நானுமொருவன் :)

-நிலாரசிகன்

Tuesday, September 08, 2009

நிலா உதிரும் இரவு

Monday, September 07, 2009

பூக்கள் தேடியலைதல்



நேற்று சந்தித்த வினோத்
தன் மரத்தில் பூக்கள் பூத்திருப்பதாக
சொன்னதிலிருந்து உறங்கவில்லை
கண்கள்.
எனக்குள் வளர்ந்திருக்கும் மரங்களில்
இலைகள் மட்டுமே இருந்தன.
இன்று காலை செளமியாவை
சந்தித்தேன்,
அவளது மரத்தில்
பூத்த ஒவ்வொரு பூவும்
சிறுகுழந்தையின் முகத்தை கொண்டிருப்பதாக
சொன்னபோது கண்கள் பனித்தது.
என் மரத்தில் எதனால் பூக்களில்லை
என்று யாருக்கும் தெரியவில்லை.
அழுது ஓய்ந்துவிட்ட விழிகளுடன்
திரிந்துகொண்டிருந்தேன்.
அழுதால் பூக்கள் மலர்வதில்லை
என்பது கடைசிவரை
சொல்லப்படவேயில்லை என்னிடம்.

Sunday, September 06, 2009

படித்ததில் பிடித்தது:

கிழிந்துபோன பழைய புத்தகம் அது..
அட்டையின் வசீகரத்தால்
வாசிக்கும் வெறியில் நீ..
விடைத்தாள் திருத்தும்
ஆசிரியரின் வேகத்தோடு
புரட்டுகிறாய் அதன் பக்கங்களை..
வேகத்தின் உக்கிரத்தில்
சாயம் இழந்து கொண்டிருந்தது
அதன் வண்ணங்கள்.
இறுதியாய்..
முடித்துவிட்டாய் நீ.
உன் கையோடு வந்துவிட்டது
முடிவை சுமந்திருந்த தாள்கள்.
இனி ஒருவரும்
வாசிக்க முடியாது
அவள் புத்தகத்தை.

[மின்னஞ்சலில் வந்த கவிதை,அனுப்பியவர் தன் பெயரை வெளியிடவிரும்பவில்லை]

Friday, September 04, 2009

இவை போலவே..



போதிமரத்தடியில்
நாய்கள் கூடலாம்.
மகாத்மாவின் கல்லறைமேல்
பறவைகள் எச்சமிடலாம்.
மயிலிறகு விற்பவனிடம்
மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம்.
..................
..................
..................

இவை போலவே,

புனித மலர்கள் நிறைந்த
நமது நேசத்தை
வெறும் காகிதப்பூக்கள் எனலாம்
நீ.

Wednesday, September 02, 2009

மனுஷ்யபுத்திரன் கவிதை

இம்மாத உயிர்மை இதழில் வெளியான கவிஞர்.மனுஷ்யபுத்திரன் கவிதையொன்று வெகுவாய் என்னை கவர்ந்தது. குறிப்பாக கவிதையின் கடைசி வரி.சொல்ல முடியாத துக்கம் கண்களுக்கு புலப்படாமல் மெல்லிய நீரோடையாய் இக்கவிதையின் பின் ஓடுவதாய் தோன்றுகிறது.இதோ அக்கவிதை...

பரிசுத்தத்தின் பயன்பாடு

அவளைப்போல் யாரும்
எல்லாவற்றையும்
அவ்வளவு
சுத்தமாக வைத்திருக்க முடியாது

அவ்வளவு நேர்த்தி
அவ்வளவு ஒழுங்கு
அவ்வளவு கவனம்
அவ்வளவு அழகுணர்ச்சி
அவ்வளவு திட்டமிடல்
அவ்வளவு பரிசுத்தம்

நாம் யாருக்கும்
ஒருபோதும்
ஒன்றையும் பயன்படுத்தவே
தோன்றாது

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவோ
ஒரு சோபா நுனியில் அமரவோ
ஒரு முத்தமிடவோ.


நன்றி: உயிர்மை.

Tuesday, September 01, 2009

பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான்




பற்றி எரியும் காட்டில் திரியும் ஒற்றைமான் : சிறுகதை


1.
புல்லாங்குழல் விற்றுக்கொண்டிருந்தவனின் தோள்களில் சாய்ந்திருக்கும்
நீண்ட குச்சியில் ஏராளமான குழல்கள் சொருகி
வைக்கப்பட்டிருந்தன.வானம் நோக்கி கைகள் விரித்து மழையே வா என்று அவை
அழைப்பது போலிருந்தது அவளுக்கு.
ரயில் நிலையத்தில் ஆதவனுக்காக காத்திருக்கும் அவளை சுற்றிய இந்த
நிமிடங்கள் யாவும் ஒருவித கவித்துவ நிகழ்வுகளாக
தோன்றியது. எறும்பு ஊர்கின்ற தண்டவாளம்,யாருமற்ற தண்ணீர்க்குழாயில் நீர்
அருந்தும் காகம்,கடந்து செல்லும் மின்சார
இரயிலின் சப்தம்,இந்த மஞ்சள் மாலைவெயில் கூடவே அவனது வருகையை
எதிர்நோக்கும் மனம். அவனுக்கு பிடித்த கறுப்பு
நிற புடவையில் வந்திருந்தாள். எப்படி இவனுக்குள் தொலைந்தேன்? என்கிற
கேள்வி மனதுள் எழுந்தபோது ஆதவன் அவள்
முன் வந்து நின்றான். சாம்பல் நிற சிமெண்ட் பெஞ்சில் அவளுக்கு அருகில்
அமர்ந்தவன் ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தான்.
அரைமணி நேரம் கழித்து இருவரும் பிரியும் தருவாயில் அவள் காதோரம் ஏதோ
சொன்னான். வெட்கத்தில் சிலிர்த்துப்போனாள் அவள்.
வேகமாய் கடந்து போனது ஓர் இரயில்.

2.

குழந்தைக்கு சின்னதாய் ஒரு கரடிபொம்மை வாங்கி வந்திருந்தான். அம்மு அதை
வாங்கிக்கொண்டு புரியாத ஒலியை எழுப்பியபடி பக்கத்து அறைக்குள் ஓடிப்போனது. எனக்கென்ன வாங்கி வந்திருக்கிறாய் என்பதுபோல் அவனை பார்த்தாள் அவள்.
அருகில் வா தருகிறேன் என்றவனிடம் இவள் நெருங்கியபோது சட்டென்று
இழுத்தணைத்து இதழோடு இதழ் சேர்த்து ஒரு
நீண்ட முத்தமிட்டான். முதலில் மறுத்தவள் அவனது கரங்களின்
இரும்புப்பிடியில் மழையில் நனைந்த கிளிக்குஞ்சுபோல்
மருகி நின்றாள். கண்களை இறுக மூடிக்கொண்டவளின் உடல் வெப்பமேற துவங்கி
இருந்தது. இதழ் பிரித்தவன் ஒன்றுமே நடவாத பாவனையில் அருகிலிருந்த சோபாவில் அமர்ந்துகொண்டு சிரித்தான். சிறிது நேரம்
அசைவற்று நின்றவளின் கண்கள் சிவந்திருந்தது.
அவன் அருகில் வந்து அமர்ந்தவள் நொடிப்பொழுதில் அவன் மடிக்கு தாவி அவனது
முகத்தை இழுத்து தீராப்பசியுடன்
இதழ்களை சுவைக்க ஆரம்பித்தாள். இருபத்தி நான்கு மாத அவளது தவம் கலைந்து
சிதறிய தருணம் அவன் போய்விட்டிருந்தான்.

3.

வழிந்தோடிய கண்ணீரின் தடம் சன்னலோர வெயிலில் மினுமினுத்தது. சன்னல்
கம்பிகளை இறுக பற்றியபடி தூரத்தில்
விரைகின்ற வாகனங்களை பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். எரிந்து
தணிந்திருந்த வனமாக தன்னை நினைத்துக்கொண்டாள்.
ஓவென்று அழத்தோன்றியது.உதடுகளை கடித்து அழுகையை தடுத்துக்கொண்டாள். தன்
இருவயது பெண்குழந்தையின் முகம்
மனதின் அடியாழத்திலிருந்து மெல்ல மேலெழுந்து மிதந்து வருவது போலிருந்தது.
ஓடிச்சென்று அடுத்த அறையினுள்
எட்டிப்பார்த்தாள். படுக்கையில் உறங்கும் அம்முகுட்டி தூக்கத்தில் லேசாக
சிரித்தது. தன்னை பார்த்து அம்மு சிரிப்பது
போலொரு எண்ணம் மனதை அறுத்தது. பூஜை அறைக்குள் சென்று கண்கள் மூடி ஒரு
நிமிடம் தியானித்து திருநீறு
பூசிக்கொண்டாள். மனதெங்கும் நிறைந்திருந்த பதற்றம் சற்றே
குறைந்திருப்பதாய் பட்டது. இனியொரு முறை இது
நிகழ்ந்துவிடக்கூடாதென்றும்,நிகழ்கின்ற சூழ்நிலைக்குள் தான்
தள்ளப்பட்டுவிடக்கூடாதென்றும் நினைத்துக்கொண்டாள்.
பால்கனி கதவை திறந்து மனதின் வலியை பார்வை வழியே தூரத்து பச்சை
மரங்களிடம் கடத்திக்கொண்டிருந்தபோது
வாசல் திறந்து வீட்டிற்குள் நுழைந்துகொண்டிருந்தான் அவன். அவனைக்
கண்டவுடன் தன்னிலை மறந்து வேகமாய்
படிக்கட்டில் இறங்கி வாசல் நோக்கி சென்றாள்.இப்போது அவனை இறுக
கட்டிக்கொண்டு முத்தமிடவேண்டும் போலிருந்தது.

-நிலாரசிகன்.

Sunday, August 30, 2009

உபன்டு ஹோரி (1935 - 2009 ) - எதிர்ப்பின் குரல்



இந்த பிரபஞ்சம் எத்தனையோ சர்வாதிகாரிகளை கடந்துவந்திருக்கிறது. ஒரு தனி மனிதனின் சுயவிருப்பங்களுக்காக
பல லட்சம் உயிர்களை இழந்திருக்கிறது இந்த பூமி. மனிதனுக்குள் ஒளிந்திருக்கும் மிருகத்தின் வெறியாட்டங்களுக்கு
இரையான அப்பாவி உயிர்களை சரித்திரம் வலியோடு பதிவு செய்திருக்கிறது. சர்வாதிகாரம் என்னும் சொல்

உச்சரிக்கப்பட்டவுடன் எப்படி ஹிட்லரும் முசோலினியும் மனதில் தோன்றுவார்களோ அதுபோலவே உகாண்டா எனும் தேசத்தின் பெயரை கேட்கும்போதெல்லாம் வெறுப்போடு மனதில் தோன்றி மறையும் பெயர் இடி அமீன்.

இடிஅமீனின் வெறித்தனத்திற்கும் முட்டாள்தனத்திற்கும் இரையானவர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை மட்டும் ஐந்து லட்சம்.தன் தேச மக்களையே கொன்று குவித்த இடிஅமீனை தட்டிக்கேட்க மேலை நாடுகளே தயங்கியபோது உகாண்டா தேசத்தில் இருந்து முதல் எதிர்ப்புக்குரல் கிளம்பியது. அந்தக் குரலுக்கு சொந்தக்காரர் உகாண்டா மக்களால் பின்னாளில் அன்போடு "பெண்சிங்கம்" என்றழைக்கப்பட்ட கவிஞர்.உபன்டு ஹோரி. சர்வாதிகாரி இடிஅமீனின் கொடூர கண்கள் பயத்தில் நடுங்கியது ஹோரியின் கவிதைகளை படித்தபோதுதான்.

வடக்கு உகாண்டாவின் "டோகோலோ" மாநிலத்தில் ஒரு ஏழை விவசாயிக்கு மகளாக 1935ம் வருடம் ஆகஸ்டு 30ம் தேதி பிறந்தார் உபன்டு ஒடாயு ஹோரி. இளம் வயது முதலே ஹோரிக்கு வாசிக்கும் பழக்கம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்தது அவரது மாமாவின் நூலகம்(அவரது மாமா ஒடாயி மொபுட்டுவும் ஒரு கவிஞர்). வீட்டிற்கு அருகிலிருந்த
நூலகத்தில்தான் உலக இலக்கியங்களும் கவிதைகளும் ஹோரிக்கு அறிமுகமானது. தன்னுடைய பதிநான்காவது வயதில் கவிதை எழுத துவங்கியவர்
தன்னுடைய எழுபதாவது வயதுவரை எழுதிக்கொண்டே இருந்தார். இடிஅமீன் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டில் ஏற்பட்ட படுகொலைகளை பற்றி இவர் எழுதிய "A Man,who is a wolf' எனும் கவிதையை படித்தவுடன் இளைஞர்கள் புத்துணர்ச்சி பெற்று இடிஅமீனுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சற்றும் தாமதிக்காமல் ஹோரியை கொல்ல உத்தரவிட்டான் அந்த கறுப்பின சர்வாதிகாரி.ஹோரி கவிஞர்களுக்கே உரித்தான மென்மனம் கொண்டவர் எனினும் அடக்குமுறைகளுக்கும் சர்வாதிகாரத்திற்கும் என்றும் தலைவணங்காதவர்.தன் வீட்டிற்குள் நுழைந்த இரு கூலி இராணுவத்தினரை சுட்டுக்கொன்றுவிட்டு சூடானுக்கு தப்பிவிட்டார்.

அமெரிக்காவுக்கு பிடல்காஸ்ட்ரோவைபோல இடிஅமீனுக்கு ஹோரி சிம்மசொப்பனமாக விளங்கினார் எனலாம் சூடானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதும் இடிஅமீன் அவரை கொல்லும் முயற்சியை கைவிடவில்லை. இதுபற்றி பின்னாளில் இப்படி
விவரிக்கிறார் ஹோரி "கடவுளின் பிள்ளை என்றே என்னை எண்ணிக்கொள்வேன். ஒவ்வொரு முறை அமீன் என்னை கொல்ல ஆட்கள் அனுப்பும்போதும் ஏதாவது ஒருவகையில் தப்பிவிடுவேன். ஒருமுறை தப்பும்போது அருகிலிருந்த
ஆற்றிப்பாலத்திலிருந்து குதிக்க நேர்ந்தது. நீச்சல் அறியாதபோதும் நான் பிழைத்தது கடவுளின் செயலன்றி வேறென்ன?"

உகாண்டாவில் புரட்சி ஏற்பட்டு சவுதி அரேபியாக்கு இடிஅமீன் தஞ்சம் புகுந்த பின்னரே நாடு திரும்பினார் ஹோரி. கடந்த மாதம் இயற்கை எய்திய இந்த புரட்சிக்கவிஞரின் பெயர் இப்பூமி உள்ளவரை சரித்திர ஏடுகளில் நிமிர்ந்து நிற்கும் என உறுதியாய் சொல்லலாம்.

ஹோரியின் கவிதை "A Man,who is a wolf" ன் தமிழாக்கம்:

"கவுச்சி நாற்றமெடுக்கும்
நீ
ஓநாயை போன்றவன்.
ஓநாயை கண்டவுடன்
கதறி அழும் குழந்தை போன்றவர்கள்
என் தேச மக்கள்.
நான்
பயமென்பதை சற்றும் அறியாதவள்
உன் பிணத்தை கழுகுகள்
குதறும் நாளில்
பூக்கள் நிறைந்த தடாகமொன்றில்
ஆனந்த நீராடுவேன்.
பரிசுகளால் என் நண்பர்களை
வியப்பட செய்திடுவேன்.
மான்கள் நிறைந்திருக்கும் இக்காடுகளில்
சத்தமிட்டு ஓடி மகிழ்வேன்.
இரத்தம் குடிக்கும்
கறுப்பு ஓநாயே!
என் தேச இளைஞர்களின்
கைகளால் நிகழப்போகும்
உன் மரணத்தின்
திருநாளுக்காக காத்திரு"


"சார் நீங்க சொன்னமாதிரியே கற்பனையா ஒரு கவிஞரை பற்றி கட்டுரை எழுதி இருக்கேன் இந்தாங்க"
அந்த பிரபல வார இதழின் ஆசிரியரின் கைகளில் தான் எழுதிய கட்டுரைத்தாளை கொடுத்துவிட்டு எப்படியாவது இந்த
பத்திரிகையில் வேலைகிடைக்கவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டான் சக்தி.

-நிலாரசிகன்

Friday, August 28, 2009

பசுமை புரட்சி:

[மின்னஞ்சலில் வந்தது]

Thursday, August 27, 2009

வெயில் தின்ற மழை




1.

அனல் நிறைந்த கோடையில்
ஜனித்தவனுக்கு மழை
என்று பெயரிடுகிறீர்கள்.
அவனது மென் உணர்வுகளை
உங்களது அகோரச்சிரிப்பில்
மரிக்கச் செய்கிறீர்கள்.
அவனறியா பொழுதில்
வன்மத்தை அவனுள்
விதைத்து மறைகிறீர்கள்.
அரவம் தொலைந்த
நிசியில்
உணர்ச்சிகளின் வெளியில்
நடனமாடிச் சரிகிறானவன்.
இப்போது அவனுக்கு
வெயில் தின்ற மழை
என்று பெயரிடுகிறீர்கள்.

2.

எப்போதும் பிரிதலை பற்றிய
கனவுகளுடனே அவனிடம்
நீள்கிறது உங்களது உரையாடல்கள்.
அவனது வெள்ளை ப்ரியங்கள்
அனைத்திலும் இருளை
பூசுகின்றன உங்களது சொற்கள்.
கரம் பற்றி
உடல் தழுவி
இதழ் மலர்த்திய தருணங்களின்
தகிப்பில் அமிழ்ந்திருக்கும் அவனை
தேகம் தேடுபவன் என்கிறீர்கள்.
பழுப்பேறிய உங்கள் வார்த்தைகளில்
தன் சுயமழித்து திரிய
துவங்கிவிடுகிறான் அவன்.
சில்லென்ற மழைவீட்டினுள்
நிகழ்ந்தேறுகிறது அந்நியனொருவனுடனான
உங்களது பேரானந்த புணர்ச்சி.

3.

பூக்கள் ஒவ்வொன்றாய்
உதிர்வதை கனத்த மெளனத்துடன்
பார்த்துக்கொண்டிருந்தன அவனது
சிவந்த விழிகள்.
வீழ்கின்ற பூக்களுக்காய் சிறியதாய்
அழுதான்.
விழுந்த மலரொன்றை
கைகளுக்குள் மறைத்துக்கொண்டு
வனத்தில் புகுந்து மறைந்தான்.
அவனது உருவம்
புள்ளியென சிறுத்தபோது
உங்களது புருவம் விரிந்து மலர்ந்தது.
சிறு சிறு பிணத்துளியாய்
விழுந்து தெறிக்கிறது
மழை.

-நிலாரசிகன்.

Monday, August 24, 2009

என் தேசமெங்கும் வழிந்தோடும் நின் ஞாபகங்கள்





1.

நெருங்கி வா
அல்லது
ஒதுங்கி செல்
வெறும்காற்று நிரம்பிய
இடைவெளிக்குள்
நம் காதலை நிரப்பாதே!

2.

சப்தங்கள் தொலைந்த
ஓர் இரவில்
முத்தங்களால் என்னுயிர்
நிரப்பினாய்.
இப்போது,
அனல் நிரம்பிய அதிகாலைகள்
உயிர்வாங்குகின்றன
உன்
ஞாபக முத்தங்களால்!

3.

கடற்கரை மணலெங்கும்
விரவிக்கிடக்கும்
கால்தட கிறுக்கல்களில்
இன்னமும்
ஓடிப்பிடித்து விளையாடுகின்றன
சில்லுகளாய் உடைந்த
நம் காதலின் மிச்சங்கள்.

4.
மனதெங்கும் நுழைந்துவிட்டபின்
புணர்வது ஒன்றும்
பாவமில்லை என்றவள்
நீ.
வெந்நீர்பொழுதொன்றில்
என் நிழலையும்
நிராகரித்துச் சென்றவளும்
நீ.
உயிருள்ள பொம்மைகளானோம்
நானும் என் காதலும்.

5.
நடைபாதை செடியில்
எவ்வித குற்றவுணர்வுமின்றி
இலைகளை கிள்ளி எறியும்
மனிதர்கள் நிறைந்த
இப்புவியில்
தவறுதலாய் பிறந்துவிட்டோம்
நீ
நான்
நம் காதல்.

-நிலாரசிகன்.

Tuesday, August 18, 2009

Platinum Package கடவுள்!




1.
நேற்று:


நெல்லிக்காய்களும் கொல்லாம் பழங்களும் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் தினசரியில்.
ஐந்து பைசா,பத்து பைசா "சீட்டு" கிழிக்க சிறுவர் கூட்டம் அலைமோதும்.
சர்பத்,பழரச கடைகளில் பாதி கழுவப்பட்ட கண்ணாடி தம்ளரில் சர்பத்தை உறிந்துகொண்டே கடைக்கண் பரிமாற்றங்கள்
நடந்தேறும்.
சுற்றிலும் மினுக்கும் சீரியல் பல்புகளின் பிரகாசத்தில் சாமி படங்களும், எம்.ஜீ.ஆர்,காந்தி,காமராசர் படங்களும் அணிவகுத்திருக்கும்.
சைடுவாக்கில் பலூனை இழுத்துபிடித்து சட்டென்று ஊதி சிரிக்கும் பலூன் விற்பவன் குழந்தைகளின் கணகளுக்கு ஹீரோவாக
தெரிவான்.
வார்த்தை பரிமாற்றங்களுக்கு வழியில்லாத தாவணிகள் அம்மனை கும்பிட்டுக்கொண்டே "அவுகளை" ஓரக்கண்ணால் பார்த்து/பேசி
பரவசமடையும்.
முழுக்கை சட்டையும் புதுச்செருப்பும் வெடிச்சிரிப்புமாய் தூள் கிளப்பும் இளைஞர்படை.
மேலத்தெரு,கீழத்தெரு,வடக்குத்தெரு,தெக்குத்தெரு எங்கும் நிறைந்திருக்கும் "குழாய்" ஸ்பீக்கர்.
தென்னந் தட்டியால் அடைக்கப்பட்டிருக்கும் கொட்டகையினுள் அம்மன் பவனி வருவதற்காக தயார் செய்யப்படும் "சப்பரம்".
கரகாட்டத்தை சுற்றிலும் கூட்டம் குவிந்திருக்கும். கும்பக்காரியின் கால்களில் மையல் கொண்டிருக்கும் ஊர் கண்கள்.
பாயும் போர்வையும் விரித்து வில்லுப்பாட்டு கேட்பதற்கு மக்கள் திரண்டிருப்பார்கள்.

2.
இன்று:


"அம்மன்கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கிறோம் - Fighter Team"
ப்ளக்ஸ் போர்டில் செல்போன் பேசியபடி நான்கு முகங்கள் கோவில் வாசலை மறைத்துக்கொண்டு இருந்தன.
நெல்லிக்காய் விற்ற இடத்தில் இப்போது கோர்நட்டா ஐஸ்கீரிம் விற்கிறார்கள்.
பட்டுத்தாவணிகளை காண மீண்டும் எண்பதுக்கு பயணிக்க வேண்டும். சுடிதார்புரியாகி இருந்தது கோவில்.
பலூனை ஊதுவதற்கு பதில் சிலிண்டரில் கேஸ் பிடித்து தருகிறார்கள்.சிறுவர்கள் பலூனை துறந்துவிட்டு வீடியோ கேம்ஸ் சிடி கடைகளில்
மொய்க்கிறார்கள்.
வில்லுப்பாட்டு பாட்டையும், "சிங்சாங்"கும் ரசிப்பதற்கு பூசாரியும் கடவுளும் மட்டுமே மிஞ்சி இருக்கிறார்கள்.
ஒன்பதிலிருந்து பத்து கோவிலில் கூட்டம் குறைவாக இருப்பதற்கு "கோலங்களும்,செல்வியும்" காரணம் என்கிறார்கள்!!


3.
நாளை:


Platinum package பக்தர்களுக்கு வீடுதேடி வந்து கடவுள் தரிசனம் தருகிறார் எனலாம்.

Sunday, August 16, 2009

வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை





நவம்பர்:

அவளது கண்களை எனக்கு பிடிக்கவேயில்லை. இரையை கண்டவுடன் பதுங்கும் பூனையொன்றின் குரூர பார்வையை அவளது கண்கள் கொண்டிருந்தன.ஜீவனற்ற அந்த விழிகளுக்கு சொந்தக்காரிதான் என்னிடம் அந்த தகவலை பகிர்ந்தவள். எதிர்பார்த்து சென்றவன் என்றபோதிலும் அந்த தகவலுக்கு அவள் சொன்ன காரணங்கள் மிகுந்த எரிச்சலையும்,கோபத்தையும் கடைசியாக இயலாமையையும் என்னுள் திணித்து சென்றன.

கழுத்தில் தொங்குகின்ற ஐ.டி கார்டை எடுத்து மேசையில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். இப்போது அவளது
இதழோரம் ஜனித்த புன்னகை சிறுவர் கதைகளில் சூனியம் சுமந்தலையும் கிழவியின் புன்னகையை ஒத்திருந்தது. இன்றே கடைசி நாள் என்பதை புத்திக்குள் அந்த புன்னகை உணர்த்தியபோதும் இதயம் மட்டும் இடைவெளி விடாமல் துடிப்பது செவிகளில் ஒலித்தது.

குளிர்ந்த அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். லேசான தூறலுக்கிடையே வெயிலடித்தது. அலைபேசி சிணுங்கியது. அம்மா. "என்னய்யா ஆச்சு?" ஒரு நிமிட மெளனத்தை பதிலாக்க முயன்று தோற்று
மெல்லிய குரலில் சொன்னேன் "வேலை போயிடுச்சும்மா". மழை வலுக்க துவங்கியிருந்தது.

டிசம்பர்:

இறுக மூடிய அறைக்குள் என் உடலை சுமப்பது சற்று சிரமத்தை தந்திருக்கிறது. நவம்பர் மாதத்தின் இறுதியில் "அய்யோ பாவம்" என்று ஒயாமல் அலறிய நண்பர்கூட்டத்தை தவிர்க்க ஆரம்பித்திருக்கிறேன்.
கூட்டைவிட்டு முதல் முறையாக வெளியேறும் சிறுபறவையென என்னறை விட்டு வெளியேறிய தினத்தில்
வீட்டுக்கார அம்மா வந்தார்கள். சவரம் செய்யப்படாத தாடியும்,இஸ்திரி செய்யப்படாத சட்டையும் அவருக்கு கலக்கத்தை தந்திருக்கவேண்டும். ஏதேதோ பேசிக்கொண்டிருந்துவிட்டு கடைசியாக இம்மாத வாடகை என்று இழுத்தவரிடம் இரு நாட்களை கடனாக பெற்றுவிட்டு திருவான்மியூர் கடற்கரை நோக்கி பைக்கில் விரைந்தேன்.

வாழ்க்கையில் சில தருணங்கள் மிக அழகானவை. மழையில் நனையும் காதலி, ரயில்நிலையங்களில் பாசம் ததும்ப அம்மாவை பிரியும் திருமணமான மகள்,எதிர்பாரா நேரத்தில் மடியில் அமர்ந்துகொண்டு "எங்க அப்பாதான் சூப்பர் அப்பா" என்றபடி கன்னத்தில் முத்தமிடும் குழந்தைகள்,மாலை மிதவெயிலில் கடற்கரைக்காற்றை சுவாசித்துக்கொண்டே மெதுவாய் செல்லும் இந்த பைக் பயணம்.

கடற்கரையில் அமர்ந்தவுடன் அலைபேசி அலையடித்தது. வினோத். "என்னடா ஏதாவது இன் டர்வியூ?"
"....................." "சரி விடு, உன் அக்கவுண்ட்க்கு மூவாயிரம் அனுப்பி இருக்கேன் செலவுக்கு வச்சுக்க"
முதல் முறையாக கண்கள் நிரம்பி வழிந்தது அன்றுதான். "இல்ல நான் சமாளிச்சுக்கறேன் வினோத்"
"அசிங்கமா திட்டிபுடுவேன் பேசாம இரு அப்புறம் சம்பாதிச்சு கொடுபோதும்,மீட்டிங் இருக்கு இராத்திரி கூப்பிடுறேன்" வைத்துவிட்டான்.

என் சிறிது நேர மெளனத்தை அழித்தபடி உள்நுழைந்தது மற்றொரு அழைப்பு. ***** அழைத்திருந்தான்.
"என்னடா வேலை போயிடுச்சாமே?" என்றவன் "உன்னால தாங்க முடியாதேன்னுதான் இவ்ளோ நாளா கால் பண்ணல ஒண்ணும் கவல படாத மச்சி வாழ்க்கைன்னா" தொடர்பை துண்டித்தேன். வேலைதானே போயிருக்கிறது. உயிரா போனது? போடா ம..

ஜனவரி:

நீண்ட பகலை கெளவிப்பிடித்திருக்கிறது
இருளின் பற்கள்.
பின்னிரவில் ஊளையிடும்
நாய்களின் சப்தம் பகலின்
கீற்றுகளாய் அறையெங்கும்
நிறைந்திருக்கிறது.
சன்னல் கம்பிகள் உயிர்பெற்று
தாண்டவமாடி வீழ்ந்து மரிக்கின்றன.
மிகுதியாகும் வெப்பத்தில்
நீங்கள் ஒன்றை மறந்துவிட்டீர்கள்.
நான்..நான்..நான்..

பிப்ரவரி:

அமெரிக்காவிற்கு செல்வது இது இரண்டாம் முறை என்பதால் எவ்வித எதிர்பார்ப்பும் ஆச்சர்யங்களும் என்னை சூழ்ந்துகொள்ளவில்லை. வழியனுப்ப வந்த நண்பன் காதோரம் கிசுகிசுத்தான். "ஆல் த பெஸ்ட் டா,நல்ல வேலைக்கும் பக்கத்துசீட்டுக்கு பாவனா மாதிரி ஒருத்தி வருவதற்கும்"

கத்தார் ஏர்லைன்ஸின் பணிப்பெண் போல செயற்கையாக சிரித்துவிட்டு உள்நுழைந்தேன். 27D சீட்டை தேடி அமர்ந்த ஐந்தாவது நிமிடத்தில் பக்கத்து சீட்டை பார்த்தேன். மனசுக்குள் அந்த பாடல் திரும்ப திரும்ப ஒலித்தது. விமானம் மேலேழும்பி மேகத்திற்குள் நுழைந்தபின்பு பக்கத்துசீட்டும் நானும் பேச ஆரம்பித்தோம்.
வாஷிங்டன் விமானநிலைய அதிகாரி தன் முதல் முத்தம் பற்றி நினைத்திருக்கலாம் அல்லது முதல் மனைவி பற்றி நினைத்திருக்கலாம். வழமையாக மூன்று மாதம் மட்டுமே வழங்கப்படும் விசாவை ஆறுமாதம் தந்துவிட்டு Have a pleasant trip என்றார். ட்ராலியை தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன்.

மனசுக்குள் ஒலித்த அந்த பாடல்: பக்கத்து சீட்டுல பாட்டி உட்கார்ந்தா டேக் இட் ஈஸி பாலிசி.

பின்குறிப்பு: நீங்க சொன்னது புரியல பாட்டி * 3 [நான் அமெரிக்காவில் வசிக்கிறேன் என்று அவர் சொன்னதை புரிந்துகொள்ள இப்படித்தான் மூன்று முறை கேட்கவேண்டியதாயிற்று.அவர் ஒரு சீனக்கிழவி]

மார்ச்,ஏப்ரல்,மே:

* வாசிங்டன்னிலிருந்து மூன்று மணிநேர பயணத்தொலைவில் இருக்கிறது பிலடெல்பியா.
* அலைபேசியில் இன்கம்மிங் காலுக்கும் காசு - எந்த காலத்துலடா இருக்கீங்க - Come to our beloved India!
* அன்பை நீங்கள் பகிர்வதே இல்லை - என் மீது அக்கறையே இல்லை - கிளிப்பிள்ளை மாதிரி இதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாள் - பகிரப்படும் அன்பென்பது வார்த்தைகளில் இல்லை புரிதலில் இருக்கிறது என்பதை என்று புரியவைப்பது?
* அறைத்தோழன் ஜே.பி தீவிர அஜித் ரசிகர். மிகச்சிறந்த நண்பனாகி இருக்கிறான். அவனுக்கு கடன்பட்டிருக்கிறேன்.
* Dance Club செல்வதாக இருந்தால் ஏதேனும் ஐ.டி கார்டுடன் செல்ல வேண்டும். வாரநாட்களின் களைப்பு தீர
வார இறுதியில் வெள்ளைக்காரன் ஆடிப்பாடும் இடமிது.[கண்கள் நிறைந்த போதையில் ஒரு சிகப்பு நிற கூந்தல்காரி என்னிடம் ஏதோ சொன்னாள் அது என்னவெனில்...]
* சிறுகதை போட்டிக்கு முதல்சிறுகதையை எழுதி இருக்கிறேன். அறிவித்தவுடன் எழுதிவிட்டேன். வந்து குவிகின்ற சிறுகதைகளை பார்க்கும்போது மற்றொரு கதை எழுதியாகவேண்டும் என்றே தோன்றுகிறது.
* பிட்ஸ்பர்க் பெருமாள் கோவிலில் அவரை சந்தித்தேன். கோவிலில் அரை மணிநேரமும்,மாலில் அரை மணிநேரமும் கதைத்தோம். என்னை சந்திக்க ஐந்து மணிநேரம் காரோட்டி வந்திருந்தார் அந்த அறுபது வயது இளைஞர்.அமெரிக்காவில் மழை பெய்யும் காரணங்களில் இதுவும் ஒன்று.
* இன்னைக்கு வந்திடும் நாளைக்கு வந்திடும் என்றார்கள் இன்றுவரை வரவேயில்லை - Project.
* சில ஆயிரம் டாலர்களை தொட்டு நிற்கிறது கடன். நாளைக்காவது வருமா அந்த புராஜக்ட்?
* என் சுயத்தில் கல்லெறிந்து விளையாடுவது ஒருவரின் பொழுதுபோக்காகி இருக்கிறது.கற்களை சேகரித்துக்கொண்டே வருகிறேன். சிலைவடிக்கலாம் அல்லது......

பின்குறிப்பு: சிகப்புநிற கூந்தல்காரி என்னிடம் சொன்னது பற்றி எழுத ஒன்றுமில்லை.

ஜூன்:

1.புளோரிடாவில் புராஜக்ட் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியை எல்லோரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறேன்.
2.சொல்லிக்கொண்டு வருவதில்லை இடியும்,மழையும். Recession என்பதால் எட்டு வார புளோரிடா பயணம்
இரு நாட்களில் முடிவடைந்துவிட்டது. கொஞ்சம் வலித்தது. Its okay!
3.கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் சிறுகதை புளோரிடாவுக்கும் பிலடெல்பியாவுக்கும் இடையேயான விமான பயணத்தில் தோன்றியது. மடிக்கணினியை திறந்து எழுத ஆரம்பித்தேன். தோள்சாய எழுத்து மட்டுமே எப்போதும் உடனிருக்கிறது.
4.அமெரிக்க நண்பர் ஸ்டீவ் டின்னருக்கு அழைத்து சென்றிருந்தார்.அவர் மனைவி பார்பராவிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று கேட்டேன். எனக்கு ஒரு மகன், ஸ்டீவுக்கு இரு மகள்கள் என்றார். முதலில் புரியவில்லை. புரிந்தபோது புரியாமல் இருந்து தொலைத்திருக்கலாம் என்று தோன்றியது.
5.பழையயார்க் என்று பெயர் வைத்திருக்கவேண்டும். ஏன் நியூயார்க் என்றார்கள் இன்னும் புரியவே இல்லை.
அமெரிக்காவில் குப்பைகளும் தொப்பைகளும் அதிகம் தென்படுவது நியூயார்காகத்தான் இருக்கவேண்டும்.
6.வாழ்வில் மிக முக்கியமானதொரு நபரை சந்தித்தேன் - ரிஷி - வாழ்க்கையின் ரகசியங்களை எனக்குள் ஏற்றி
எப்போதும் புன்னகைக்கும் வரத்தை தந்தவர்.He is a Gem.
7.ஐந்து வருட கனடிய தோழியை இம்முறையும் சந்திப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. ஈழத்தின் வலி வார்த்தைகளிலும்,வாழ்க்கையிலும் தெரிகிறது அவளுக்கு. அவள் நலம் பெறல் வேண்டும்.
8.நட்பை பிரவாகமென சினேகத்துடன் பகிர்ந்தளிக்கும் மற்றோர் தோழியை சந்தித்து திரும்பினேன்.

ஜூலை:

பாப் மன்னனின் மரணத்தை மெக்டொனால்ட்ஸ் தொலைக்காட்சியில் கண்டபடி "Iam shocked" என சொல்லிச் சென்றாள் ஆப்ரிக்க-அமெரிக்க குண்டுப்பெண்ணொருத்தி.

பிலடெல்பியா - வாசிங்டன் - தோகா - சென்னை - தூத்துக்குடி
அமெரிக்க பயணம் = Disaster
குற்றாலம் - மணிமுத்தாறு - பெங்களூர் - நெல்லை - மதுரை --> நண்பர்கள், நண்பர்கள்
2500 ரூபாய் - மீண்டும் வினோத்
அலறும் அலைபேசி - வேலை இல்லையா மச்சான்.வாழ்க்கைன்னா... - புன்னகை பதிலால் எதிர்முனை மெளனிக்கிறது இப்போது.
ஜீவன் முக்தி வாசிக்கிறேன்.
இரு புதிய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். ஒருவரின் தவமாக ,மற்றொருவரின் வரமாக உருமாறியிருக்கிறேன்.

ஆகஸ்ட்:

#அன்பை பகிராதவன் என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்துகொண்டே இருக்கிறது அவ்வப்போது வேலை கிடைத்துவிடும் சீக்கிரம் என்கிற வாழ்த்துக்கு நடுவே. கல்லை நம்புகிறவர்கள் மனதை நம்புவதில்லை.
ஒன்றை துறந்தால்தான் மற்றொன்று நிலைபெறும். எல்லோரும் வேண்டுமெனில், சுயத்தில் கல்லெறிந்தவரை துறக்க வேண்டும்.

# "அம்மா நான் ஜெயிச்சுட்டேன்மா"

# வெயில் குறைய ஆரம்பித்திருக்கிறது. நேற்றும் இன்றும் பெய்யாத மழை நாளை பொழியும்.

-நிலாரசிகன்.

Thursday, August 13, 2009

அமிலம் நிறைந்திருக்கும் ஓடை




1.
கண்ணாடியை உடைப்பதற்கு
முந்தைய கணம் எனலாம்
நீர் வற்றிய குளத்தில்
எறியப்பட்ட கல் எனலாம்
கவனிப்பாரற்று மிதிபடும்
ரோஜா இதழ்கள் எனலாம்
மலநாற்றமெடுக்கும்
படுக்கை கிழவி எனலாம்
முரண்களால் நிறைந்த
நம் ப்ரியங்களை
சாக்கடைநிலவு என்றும்
வர்ணிக்கலாம்.
எதுவாயினும் புணர்ச்சிக்கு
பின்பு சொல்.

2.
திசைக்கொன்றாய் சிதறிக்கிடக்கும்
தலையணைகளின் நடுவில்
அல்லது
வியர்வைவாசத்தின் நீட்சியில்
உனக்கொரு
கதை சொல்ல துவங்குகிறேன்
அரவமற்ற கடற்கரையில்
கருப்புக் குதிரை மீது
காற்றின் வேகத்தில் பயணிக்கும்
அரசகுமாரனை பற்றிய கதையது.
அவனது நீண்ட பயணம்
முடியும் முன்னர்
துவங்கிவிட்டது......

3.
கரம் பற்றி
கவிதை கேட்டு
கனவின் மீதேறி பயணிக்கிறது
முத்தங்களால் நிறைந்திருக்கும்
நம் அறை.
களைத்து வீழ்ந்த பின்பொழுதிலும்
தலைகோதியபடியே இருக்கின்றன
நம் ப்ரியங்கள்.
காதோர கெட்ட வார்த்தைகளிலும்
சன்னல் கம்பிகளில் ஊர்ந்துசெல்லும்
எறும்பு வரிசையிலும்
நிலைக்கிறது
நம் மனம்.
வா மீண்டுமொரு முறை
குளிக்கலாம் என்கிறாய்
நீ.

இதயம் காக்க உதவிடுங்கள்..




சக வலைப்பதிவர் திரு.சிங்கை நாதன் அவர்களுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக 33 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.
மேலும் தகவலுக்கு இங்கே செல்லுங்கள்.


பண உதவி செய்ய வேண்டிய முகவரி:

ICICI Account Details

Account Number: 612801076559
Name: M.KARUNANITHI
Branch: Tanjore

Singapore Account Details

Account Number: 130-42549-6
Name: Muthaiyan Karunanithi
Bank: DBS - POSB Savings

Tuesday, August 11, 2009

ஓர் இலை உதிரும் தருணத்தில் மழை பெய்துகொண்டிருக்கிறது



1.
பாசிகள் படர்ந்த குளக்கரையில்
மீனுடலை ருசித்துக்கொண்டிருக்கும்
காகங்களை வெறிக்கிறதுன் கண்கள்.
தளர்ந்த உனது கால் வழியே
ஊர்ந்துசெல்கின்றன எறும்புகள்.
நாய்கள் நிறைந்திருக்கும் அந்திம‌
காலத்தில் நீரூற்றிய
தொட்டிச்செடியில் வண்ணம்
உதிர்த்து பறக்கிறது பட்டாம்பூச்சி.
குழந்தையாதலின் சாத்தியங்கள் ஏதுமற்ற
இரவொன்றில் உனக்கொரு
உடைந்த பொம்மையை பரிசளித்து
சிரிக்கிறது காலம்.
மென்காற்றில் சிதறும் சாரலில்
நனைந்தபடி தனித்தழுகிறாய்
நீ.

2.
உலர்ந்த உன் இதழ்களின்
வெடிப்பில் நெடுங்கோடையின்
சாயல் ஒளிர்கிறது.
நீரில் மிதக்கும் கசங்கிய
காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது
உன் சரித்திரம்.
செவிக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே
இருக்கின்றன மரணவண்டுகள்.
முற்றும் எழுதப்பட்டுவிட்டது
உன் வாழ்க்கை.
யாருமற்று/எதுவுமற்று விடிகின்ற
அதிகாலைகளிலும்
மழைப்பாடலுடன் துவங்குகிறது
உனது நாட்கள்.

3.
யாரோ ஒளிந்துகொண்டு உன்னையே
பார்ப்பதாக அடிக்கடி தோன்றுகிறது.
அதிர்வுகளால் நிரம்பி வழிகிறது
உன் தேநீர் கோப்பை.
இருளுக்குள்ளிருந்து எப்போதும்
கேட்கிறது ஏதோவொரு சப்தம்.
நீ நகர்ந்த பின்னும்
பிம்பங்களை காண்பிக்கிறது
கண்ணாடி.
மின்விசிறி அல்லது கூரை
இரண்டிலொன்று உன் சிரத்தை
விரட்டுகிறது.
கொக்குகளும் குருவிகளும்
உன் தலைமீதே எச்சமிட்டு
பறக்கின்றன
மழை கண்டால் மட்டும்
சிலிர்க்கிறது உன்னுடல்.
இனி,
நிம்மதியாய் சாகலாம்
நீ.

-நிலாரசிகன்.

Saturday, August 08, 2009

உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உரையாடல் சிறுகதை போட்டி முடிவுகள்
இன்று வெளியாகி இருக்கிறது.

சுட்டி:

http://naayakan.blogspot.com/2009/08/blog-post_08.html

என்னுடைய "கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம்" சிறுகதை
தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகளில் ஒன்றாக வந்திருப்பது மிகுந்த‌ ம‌கிழ்ச்சியை
தருகிறது.

இந்த போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி சிறுகதை எழுத தூண்டிய‌
சிவராம்/ஜ்வோவ்ராம் சுந்தர் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

போட்டியில் வென்ற/கலந்துகொண்ட அனைத்து சிறுகதையாளர்களுக்கும்
வாழ்த்துகள்.

Monday, August 03, 2009

அவளது கடவுளர்கள்



மனதை வெல்வதான
அவளது வேஷத்தில்
இறந்துகிடக்கின்றன சில
ரோஜாக்கள்..
வேரில் மலர்ந்த மோகத்தீயில்
பிணக்குவியலானது
நிசப்தம் நிறைந்த பழைய
சொற்கள்..
பகிரத்தெரியாத நேசத்தின்
எல்லையில்
அவனது இருத்தல்
புள்ளியென மறைந்தழிந்தபோது
பழிவாங்குதலில் வென்றுவிட்டதாய்
இழிபுன்னகையில் ஒளிர்கின்றனர்
அவளது
கடவுளர்களும் கந்தர்வர்களும்.

Sunday, August 02, 2009

நண்பர்கள்....நண்பர்கள்...நண்பர்கள்...



1
2
3
4
5
ஆறாப்பு வரையில்
ஒன்றாய் ஒண்ணுக்கு போய்
சிலேட்டு குச்சி விழுங்கி
ஓணான் அடித்து
பொன்வண்டு சேகரித்து
மூக்கொழுகி திரிந்த
நண்பர்களுக்கும்
7,8,9,10 வரை
"போப் நினைவு மேல்நிலைப்பள்ளியில்"
நகசதையாய் திரிந்து
மாங்காயும்,நெல்லிக்காயும் திருடி
"சில்க்" நூலில் பட்டம்விட்டு
ஸைன்ஸில் முட்டை எடுத்து
வாத்தியார் நாற்காலியில் முள்வைத்து
முட்டி கிழிய கபடி விளையாடிய
நண்பர்களுக்கும்

11 12ல்
முளைக்காத மீசையை முறுக்கி
பெண்கள் பள்ளி பேரழகிகளின்
கடைக்கண்ணில் கெமிஸ்ட்ரி
தேடியலைந்து
பிஸிக்ஸில் பெயிலாகி
திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்
என் பால்ய
நண்பர்களுக்கு...


நண்பர்கள் தின வாழ்த்துகள்.

Saturday, August 01, 2009

உலகின் மிக மோசமான பெண்கள்




உலகின் மிக மோசமான பெண் - 1

உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை,
அவளது தேவை,
ஓர் ஓநாயை ஒத்திருந்தது.
அவளது கறுத்த இதழ்களில்
வழிந்தபடி இருந்தது முந்தைய தினத்தின்
எச்சில்கள்.
குழந்தையொன்றின் விரல்களை
கொறித்துக்கொண்டிருந்தன
அவளது கூரிய பற்கள்.
துடிதுடித்த குழந்தையின்
கதறலை அலைபேசிக்குள்
முகம் மறைத்து கடந்தனர்
சிலர்.
கவிதைக்குள் மறைந்துகொண்டேன்
நான்.
உலகின் மிக மோசமான
பெண்ணை நேற்று சந்தித்தேன்.
அவளது பார்வை...

உலகின் மிக மோசமான பெண் - 2

நவீனத்தின் நீட்சியே நான்கு
காதல் என்றிடுவாள்.
புணர்ச்சியே பின்நவீனத்தின்
கோட்பாடு என்பாள்.
புரியாக்கவிதை எழுதும் ஐவரின்
கலியுக திரெளபதி
நான் என்றும் சொல்வாள்.
புரட்சிப்பெண் அவளின்
கண்களில் வழிகின்ற நஞ்சில்
நான்கு துர்மரணங்கள் நிகழ்ந்திருக்கும்.
அவள் உலகம்
அவள் வாழ்வு
அவள் அவள் அவள்
அவள் உலகில் தான்
அமைதியாக இருக்கிறான் அவன்.


உலகின் மிக மோசமான பெண்/ஆண் - 3

உலகின் மோசமான பெண்ணும்
மிக மோசமான பெண்ணும்
உலகின் மிக அற்புதமான
பெண்ணை சந்தித்தார்கள்.
ஆண்களில்லா உலகம்
உருவாக்குவது பற்றிய
தீர்மானம் நிறைவேறியது.
பிழைத்துக்கொண்டேன் என்றான்
உலகின் மிகச்சிறந்த
ஆண்.
பிழைகண்டேன் என்றான்
உலகின் மிக மோசமான
ஆண்.
சுற்றித்தொலைக்கிறது வெட்கம்தீரா
உலகம்.

Tuesday, July 28, 2009

ஒரு மெளனம் ஒரு மரணம்



பெயரிடப்படாத மெளனத்தின்
எல்லையில் அந்தக்
கண்கள் நிலைத்திருந்தன.
அடர்குளிரில் நடுங்கும்
ஊமைக்குருவிகளின் மொழி
அந்த விழிகளுக்கு மட்டுமே
புரிவதாய் இருந்தது.
யாருமற்ற
மூன்றாம் ஜாமத்தில்
அவ்விழிகள் சடலமாக மாறியிருந்தபோது
நிறமிழந்த
ஓராயிரம் சொற்கள்
நீண்ட வரிசையில் அதனை
மொய்க்கத்துவங்கின.
மெளனத்தின் மரணமும்
அநாதையாய் வீதியில் கிடந்தது.

Friday, July 24, 2009

இரண்டாம் இயேசு



சிலுவைகள் சுமந்து திரிந்தவன்
தன்னை இரண்டாம் இயேசு என்றபோது
நீங்கள் கைதட்டி வரவேற்றீர்கள்.
நீண்ட தாடியும் காவி நிற பற்களுமாய்
அவன் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான்.
அவனது பலவர்ண சிலுவைகளில் கவரப்பட்ட
குழந்தைகள் பலூன்விற்பவனை தொடர்வதுபோல்
பின் தொடர்ந்து சென்றனர்.
பசும்பாலும் நெய்யும் அவனுக்களித்து
மகிழ்ந்தார்கள் உங்கள் இல்லத்தரசிகள்.
எல்லோருக்கும் சொர்க்கத்தில் இடமிருக்கிறது
என்றபடி சிரித்தான் அவன்.
உடன்சேர்ந்து கோணல் உதடுகளுடன்
அப்போதும் கைதட்டி சிரித்தீர்கள் நீங்கள்.

Wednesday, July 22, 2009

குற்றாலம் போயிருந்தேன்

15 வருடங்கள் கழித்து இன்றுதான் குற்றாலம் போக வாய்ப்பு கிடைத்தது.
அங்கே க்ளிக்கிய படங்கள்:

ஐந்தருவி(கூட்டத்தில் நானும் ஒருவன் :)



மெயின் அருவி:-



மசாஜ் மன்னர்கள்:-



காவலர்!!!



படகுக்குழாம்:-



குரங்கார் :)

Monday, July 20, 2009

நாடோடிகள் - சில பகிர்வுகள்



வெகு நாட்களுக்கு பிறகு தூத்துக்குடியில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க சென்றிருந்தேன். கூட்டம்
நிரம்பி வழிந்தது. படம் ஆரம்பித்து ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறந்தது. இவ்வளவு ஆரவாரமும்
உற்சாகமும் படம்பார்ப்பவர்களிடம் தொற்றிக்கொண்ட காரணம் என்ன என்று எண்ணியபோது கிடைத்த விடைகள் இரண்டு.
ஒன்று நட்பு. மற்றொன்று சுப்பிரமணியபுரத்தின் வெற்றிநாயகன் சசிக்குமார். சசிக்குமார் தோன்றும் காட்சிகளிலும் நட்பை
பற்றி அவர் பேசும் வசனங்களின்போதும் தியேட்டர் அதிர்கிறது.

காதலால் நட்பிற்கு ஏற்படும் வலியையும்,இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத பக்கங்களையும் திரையில்
செதுக்கியதற்காகவே இயக்குனரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

வெயில்,பருத்திவீரன்,சுப்பிரமணியபுரம்,பூ,பசங்க வரிசையில் நாடோடிகளும் தனித்து நிற்கும் ஒரு திரைப்படம்.
வெகு இயல்பான யதார்த்த நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள் ஒவ்வொரு நடிகர்களும்.
எப்பொழுதும் எதையாவது தின்று கொண்டே இருக்கும் கதாநாயகி,டிசர்ட்டும் தாவணியும் அணிந்தலையும்
கதாநாயகனின் தங்கை,மகனின் காதலுக்கு உதவும் அப்பா,நான்கைந்து கைத்தடிகளுடன் சுற்றித்திரியும் உள்ளூர்
மைனர்,அரசாங்க வேலை மேல் உயிரையே வைத்திருக்கும் கதாநாயகியின் அப்பா,உள்ளாடையை அசால்டாக
தலையில் கவிழ்த்துக்கொண்டு பிச்சு உதறி இருக்கும் 'பாண்டி', சித்தி முன்பு அடித்துவிட்டு அவர் சென்ற பின் கலங்கி துடிக்கும் பாண்டியின் அப்பா, காதலுக்கு மிக முக்கிய உதவி செய்யும் "பைக்" நண்பனின் மெளனம்(ஒரு வார்த்தைகூட பேசாமல் எப்போதும் சுயீங்கம் மென்று கொண்டிருப்பார்),கதாநாயகனின் பாட்டி,படத்தின் முக்கிய காட்சிகளில் ஒலிக்கும் 'சிவசம்போ' இப்படி படம் முழுவதும் நிறைகளையே தாங்கி நகர்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ஏதேனும் ஒருவகையில் மனதோடு நெருக்கமாகிவிடுகிறார்கள்.

முதல் பாதியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நாடோடிகள் இடைவேளைக்கு பிறகு மனதை பிழிந்துவிடுகிறார்கள். கதாநாயகியை பிரியும் தருணத்தில் அவர் அப்பாவிடம் "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு மாமா" என்று சொல்லும்போதும்
"நீ வலிச்சாலும் வலிக்கலன்னுதாண்டா சொல்வ" என்று பாண்டி சொல்லும் காட்சியிலும் கலங்க வைத்துவிடுகிறார் சசி.

கிளைமாக்ஸில் "தமிழ்சினிமா"வாகி விடுவார்களோ என்கிற பயத்தை அடித்து நொறுக்கி ஒரு புன்முறுவலோடு நம்மை
வழி அனுப்புகிறார்கள்.

நாடோடிகள் - ஒவ்வொரு நண்பனும் பார்க்கவேண்டிய திரைக்காவியம் - சமுத்திரக்கனிக்கும் அவர் குழுவிற்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும்,நன்றிகளும்.

Tuesday, July 14, 2009

சாத்தான் குழந்தையின் ஊமைக்குரல்



என் நோக்கி எப்போதும் நீண்டிருக்கிறது
குற்றங்களை சுமத்தும்
உன் விரல்.
நீயோ
தியாகம் செய்ய மட்டுமே
பிறப்பெடுத்த ஜீவன்.
நான் அன்பை நிராகரிக்க
மட்டுமே ஜனித்தவன்.
பகிரத்தெரியாத அன்பை
சுயநலத்திமிருடன் சுமந்தலைபவன்.
சாத்தானின் கூடாரத்தில்
கடவுளை தேடி நுழைந்த
தேவதை நீ.
கடவுளின் கூடாரத்தில்
சாத்தானின் மடியில்
துயிலும் உன்னை
வலி மிகுந்த புன்னகையுடன்
கடந்து செல்கிறேன்
நானல்லாத நான்.

Sunday, July 12, 2009

ஆந்தைகள் அலறும் யாமம்




வரைந்து முடித்த ஓவியத்தின்
உள்ளிருந்து சிறகுகள் படபடக்க
வெளியேறியது முதல் ஆந்தை.

உலகின் மிகச்சிறந்த கவிதையின்
கடைசி வரிக்குள்ளிருந்து வினோத
ஒலியெழுப்பியது இரண்டாவது

பதின்ம வயது சிறுவனின்
கனவுக்குள் உக்கிர
தாண்டவமாடிக்கொண்டிருந்தது
மூன்றாவது.

நான்காவது,ஐந்தாவது
ஆறாவது
ஆந்....
என் அலறலில் விழித்துக்கொண்டது
இரவு.

-நிலாரசிகன்.

Saturday, July 11, 2009

7 ½



புல்லாங்குழலுடன் வந்தவனை
புரிந்துகொள்ள இயலவில்லை
உன்னால்.
கர்வத்தின் வெளியில்
புன்னகை தொலைத்து
பறந்துகொண்டிருக்கிறாய்.
மயிலிறகு வாங்க
உன்னிடம் வந்தேன்
நீயோ
என்னை எரிக்க விறகுகள்
விற்றுத் திரிகிறாய்.
யாருமற்ற வனத்தில்
வெகு இயல்பாய் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
நாம் வளர்த்த
விருட்சத்தின் இலைகள்.
அரவமற்ற இரவில்
இயல்பு தொலைந்து கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறேன்
நான்.

Thursday, July 09, 2009

எனக்கான தீர்ப்புகள்



நிறைய எழுதவேண்டியதிருக்கிறது
என்னைப் பற்றி.
எதையும் பற்றாமல்
எதைப்பற்றியும் இல்லாமல்
என்னைப் பற்றிக்கொண்டு எழுதியாகவேண்டும்.
எனக்கு மட்டும் தெரிந்த
வலி
கனவு
வாழ்க்கை
கண்ணீர்
கவிதை
நீ
நான்
நாம்
அவர்கள்
அனைத்திற்குமான தீர்ப்புகள்
எழுதியே தீர வேண்டும்.
உச்சரிக்கும் முன்பே
ஊமையாகிப் போன
பேனாவை வைத்துக்கொண்டு
எதை எழுதுவது?

Friday, July 03, 2009

பிரஞ்சுக்காரி,ஓரினச்சேர்க்கை,கடிதங்கள் மற்றும் விகடன்




வாரம் ஒருநாள் கிரிக்கெட் விளையாட இரண்டு மைல் தொலைவில் இருக்கும் மைதானத்திற்கு செல்வது வழக்கம்.அமெரிக்கர்கள் விளையாடும்
பேஸ்பால் மைதானம் அது. இந்திய,பாகிஸ்தானிய நண்பர்கள் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவோம். சில அமெரிக்கர்கள் ஆர்வமுடன் வந்து என்ன விளையாட்டு
இது என்று விசாரிப்பதுண்டு. சிலர் தெரிந்துகொண்டவுடன் எங்களுடன் சேர்ந்து விளையாடவும் செய்வர்.(ஆனால் பவுலிங் மட்டும் பேஸ்பால் பந்தை எறிவதை போல்
எறிவார்வார்கள்)

கடந்த வாரம் விளையாட சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.விளையாட வரும் நண்பர்களில் ஒருவர் அவரது அலுவலகத் தோழியையும் அழைத்து வந்திருந்தார். ஆர்வமுடன் அவரும் கிரிக்கெட் விளையாடினார்.காட்ச் பிடிக்க அவர் ஓடும்போது 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வால் ஓடுவது போலிருந்தது.
ஒரு பெண் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்தவுடன் என் கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்தது. கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளை காண கல்லூரி மாணவிகள் வருவார்கள். அவர்கள் முன் ஹீரோவாக ஆசைப்பட்டு ஒவ்வொருவரும் தன்னை டெண்டுல்கராக நினைத்து வீரமுடனும் வெறியுடனும் விளையாடுவோம். அம்புரோஸ் மாதிரி வேகமாக பவுலிங் போடும் ஆர்வத்தில் கீழே விழுந்து அசடு வழிந்தவர்கள் பலர். ஆனால் ஒருபோதும் பெண்களும் ஆண்களும் கலந்து கிரிக்கெட் விளையாடியதை
பார்த்ததேயில்லை.

விளையாட்டு முடியும் தருணத்தில் " Iam thirsty I need a beer" என்றாள். சிரித்துக்கொண்டோம். விளையாடி முடிந்தபின் புல்வெளியில் ஓய்வாக அமர்ந்து சிறிதுநேரம்
அரட்டை அடிப்பது வழக்கம். அன்றும் அப்படி அமர்ந்தபோது அவளை பற்றி கேட்டோம். தன் பெற்றோர் பிரான்ஸ் தேசத்தை சேர்ந்தவர்களென்றும் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டதாகவும் சொன்னாள். அதன் பிறகு ஒவ்வொருவரிடமும் நீங்கள் திருமணமானவரா என்று கேட்டாள். எல்லோரும் பதிலிட்டபின் நீ திருமணமானவளா என்று அவளிடம் கேட்டோம். "No,But I committed with a woman" என்றாள். இது நடந்தது/நடப்பது இருநூறு வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டு கலாச்சாரம்,பண்பாடு என்று எந்தவொரு கட்டுப்பாடும்,ஒழுங்கான வாழ்க்கைமுறையும் இல்லாத அமெரிக்காவில்.

2000 வருட கலாச்சாரமும்,பண்பாடும் நிறைந்த இந்தியாவில்....தில்லி உயர்நீதி மன்றம் வாழ்க.

******************************************************************




மனதை உலுக்கிய கடிதம் பதிவில் வெளியிடப்பட்ட கடிதத்திற்கு சொந்தமான சகோதரியின் நன்றிக் கடிதம் இது.

//நன்றிகள்
கோடி நிலா..
என்
வாழ்க்கை நன்றாக அமைய என்னை வாழ்த்திய, எனக்காய் பிராத்தித்த அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி. அவர்களுடன் சேர்ந்து நேற்றுவானமும் என்னை வாழ்த்தியது -தன் பூந்தூரல்களால்.
இருபத்திரண்டு
வருடங்களாக என்னுள்ளே மருங்கிக்கொண்டிருந்த சுமையை முதன்முறையாய் உங்களிடம் இறக்கி வைத்தேன். உங்களுக்கு எழுதியகடிதத்தை நான் தாளில் எழுதி இருந்தால் அது சத்தியமாய் அழிந்துபோயிருக்கும் - என் கண்ணீராலே. அடிக்கடி அதை நினைத்துஅழுதிருந்தாலும் அன்று என் இருபத்திரண்டு வருட சோகத்திர்க்கும் சேர்த்து ஒரே நாளில் அழுது தீர்த்தேன். ஆனாலும் என் மனதில் உள்ளவடு மறையாது.
சிறுவயதில்
நான் யாரிடமும் அதிகம் பேசாததால் எனக்குள்ளே பேசிக்கொள்ள ஆரம்பித்தேன். நான் தனிமையில் இருக்கும்போது எனக்கு துனையாய்இருக்க, நான் சிரித்தால் என்னுடன் சிரிக்க, நான் அழுதால் என்னுடன் அழுக எனக்கென்று நானாகக் கண்ட துனை. அவனை/அவளை என்நண்பன், என் காதலன், என் தெய்வம் எப்படியும் சொல்லலாம். அவன் எனக்குள்ளே இருக்கும் என்னவன். என்னைப்பற்றி முழுதாய்அரிந்தவன் அவன் மட்டுமே. (நான் என்னவன் என்று உங்களிடம் சொன்னது இவனைத்தான்). ஏனோ எனக்கு இதுவரை எவரிடமும்சொல்லத் தோன்றவில்லை. அனைவரும் என்னுடன் சிறுபிராயத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களிடம் சொல்ல எனது மனதுஒப்பவில்லை. என் பாரம் உங்களால்தான் தீரவேண்டும் என்று விதித்திருந்தது போல. என்னை பகிர்ந்துக்கொள்ள செய்ததற்கே உங்களுக்குஎத்தனை நன்றிகள் சொன்னாலும் தகும்.
நெஞ்சார்ந்த
நன்றிகளுடன்,//

*******************************************************************************************

இதே பதிவை படித்துவிட்டு மற்றொரு பெண் எழுதி இருக்கும் கடிதம் இது:


//Hi ,

I read the latest post "Manathai Ulukkiya Kaditham"...It was so good..It doesn't happen only to her...It happens to most of the girls..I am one among them.May b atleast she had this torture only with 1 person..but in my life it was 3...that too when i was 5 or 6 years old..i still can't come out it..Even now am not ready for any sort of relationship..alteast she was able to say some1 and get her pblm resolved..but am not lucky enuf to tell my problems to any1....I thought am the only person..but there are many girls affected this way...This is the first time even am sharing it with u....

I feel so bad that y all guys are behaving like this...I hate all guys..very slowly am trying to come out of it...Hope i'l succeed one day..they say time heals everything its almost 18-19 years that happened..still time doesn't heal my problem..i am trying to deviate my mind and concentrate on my work..

Hope everything goes fine..i need all ur prayers and ur wishes..


Regards,//

********************************************************************************************


இதுபோன்ற அப்பாவி குழந்தைகளை பாழ்செய்யும் ஆண்களின் குறிகளை வெட்டி எறியும் சட்டம் ஏனில்லை நம் நாட்டில்? மேலை நாடுகளில் குழந்தைகள் மீதான
பாலியல் குற்றம் பற்றி பள்ளியிலேயே பாடங்கள் உண்டு. ஒரு ஆண்/பெண் எந்த நோக்கத்தில் குழந்தையை அணுகுகிறான்/ள் என்று சிறுகுழந்தைகளுக்கு புரியும் வகையில்
பாடங்கள் நடத்தப்படுகின்றன. நம்நாட்டில் இது எப்போது நடைமுறைக்கு வரும்?



[மனதை உலுக்கிய கடிதம் பதிவை இளமை விகடன் 'குட் பிளாக்'ல் வெளியிட்டிருக்கிறார்கள். விகடனுக்கு நன்றிகள்]

மழை வளர்த்தல்



கடுங்கோடையில் நானொரு
மழை வளர்த்தேன்.
கனவுகள் பிசைந்தூட்டி
பொம்மைகள்
பல வாங்கி குழந்தையென
வளர்த்து வந்தேன்.
கருமை சூழ்ந்த
ஓர் ஊமைப்பொழுதில்
என்னிலிருந்து நீங்கியது
பிள்ளைமழை.
அறையெங்கும் நிரம்பி
வழிந்தது
அனல்மணம்.

Thursday, July 02, 2009

மனதை உலுக்கிய கடிதம்..





என்னுடைய உறுபசி கதை வலைப்பூவில் வெளியிட்ட பின்னர் ஒரு பெண்ணிடமிருந்து கடிதமொன்று வந்தது. அந்த கடிதத்தை அவருடைய ஒப்புதல் பெற்ற பின்னரே இங்கே வெளியிடுகிறேன்.மனித இனத்தில் பிறந்தாலும் மிருகமாகவே வலம் வரும் சில "ஜந்து"க்களுக்கு இந்தக் கடிதம் சமர்ப்பணம். அந்த முகம்தெரியாத சகோதரி தற்சமயம் நலமாக வாழ்கிறார் என்பது மட்டுமே ஒரே ஆறுதல்.

*********************************************

Hi..
I don mind sayin u my story as i hope it may help some gal somewhere.
இந்த அழகான பூமிக்கு நான் வந்த நாள் October 20,1986. அம்மாக்கும் அவ்வாக்கும்( பாட்டி) இருந்த ஏதோ ப்ரச்சனைல என்ன 'வா' ன்னுகூப்பிடகூட யாரும் இல்லாம வீட்டுக்கு வந்தேன். 3 yrs வரைக்கும் என் Life எப்படி போச்சுனு தெரியாது. எங்க ஊர்ல நல்ல Schoolஇல்லன்னு என்ன அவ்வா வீட்லயே அண்ணன்கூட படிக்கட்டும்னு(He was studying 5th) அங்க கொண்டு போய் விட்டாங்க.அண்ணன்கூட இருந்த அந்த இரண்டு வருஷமும்(L.K.G & U.K.G) வாழ்க்கை அவ்வளவு அழகா இருந்துச்சி. அப்போல்லாம் எனக்கு'அம்மா' ன்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. அம்மாகூட நான் இருந்தா எப்படி பார்த்துப்பாங்களோ அதைவிட அதிகமாவே எங்கஅண்ணன் என்ன பார்துக்கிட்டாங்க. அண்ணன தவிர என்னுடைய குதிரைவண்டி ஓட்டுநரின் பாட்டை தவிர வேற எதுவுமே எனக்குபெருசா தெரில. அதனால நான் அதிகமா யார்கிட்டயும் பேசினதில்ல. அண்ணனுடைய school ல 6th வரைக்கும்தான் இருந்தது.அதனால அண்ணன வேற schoolக்கு மாத்தனாங்க. அண்ணன் daily busல போய்ட்டு வரனும். ஒரு வருஷம்தான் அங்க இருந்தாங்க.தினமும் அவ்ளோ தூரம் போக கஷ்டமா இருக்கும்னு வேற ஊர்ல hostelல சேர்த்துட்டாங்க. அப்புறம் நான் மட்டும் எதுக்கு அங்கஇருக்கனும்னு என்னையும் ஏதோ தூரத்து சொந்தமான ஒரு அக்கா வீட்டுக்கு போய் அவங்க பையன்கூட(என்னைவிட ஒரு வயதுஇளையவன்) படிக்கட்டும்னு அனுப்பிட்டாங்க.
அம்மாகூட நான் இல்லாததால அம்மாவ விட்டுட்டு போற வலி தெரியல. ஆனா அண்ணன இதுக்கு அப்புறம் எப்போ பார்ப்போம்னுநினைச்சிகிட்டு அழுதுடே போனன். அந்த அக்காவும் அண்ணன மாதிரியே என்ன நல்லா பார்த்துப்பாங்கன்னு நம்பிக்கையா இருந்தன். ஆனாஅங்க எல்லாமே தலகீழா நடந்துச்சி. ஏதோ நான் சம்பளம் இல்லாத வேளைக்காரி மாதிரி இருந்தன். அக்கா சொல்ற எல்லா வேளையும்செய்யனும். ஏதாவது தப்பா செஞ்சா அடி பயங்கரமா விழும். அவங்க எல்லாரும்(அக்கா, மாமா, அவங்க பையன்) ஒன்னா இருப்பாங்க.அவங்க சாப்பிட்டு முடிச்ச அப்புறம்தான் நான் சாப்பிடனும். அவங்க இருக்கற இடத்துக்கு நான் போனா எதாவது வேளை குடுத்து என்னவெளிய அனுப்பிடுவாங்க. அதனாலயே நான் தோட்டத்துலயோ இல்ல வராண்டாலயோ தான் இருப்பன். மதியம் lunchகு வீட்டுக்குவரும்போது என் friends கொஞ்சம் பேரு அவங்க அம்மாகூட அக்கா வீட்டுக்கு தான் சாப்பாடு எடுத்துட்டு வருவாங்க. (As it s near to school).எல்லாரும் ஒன்னா hallல சாபிடுவாங்க. நான் மட்டும் தனியா kitchenல சாபிடுவன். எல்லார்கிட்டயும் நான் அவங்களோட சாபிட்டா lateஆசாப்பிடுவன்னு சொல்லுவாங்க. அதனாலயே எனக்கு அங்க யாரையும் பிடிக்காம போய்டுச்சி. நான் leaveக்கு ஊருக்கு வரும்போதும்யார்கிட்டயும் அவ்வளவா பேசமாட்டன். (though i had a dozen of friends thr) யார பார்த்தாலும் பயப்படுவன். அம்மாவும் அக்காமாதிரிதான் இருப்பாங்கன்னு அம்மாகிட்டகூட போகமாட்டன்.
1st std leave முடிஞ்சு மறுப்படியும் அங்க போனன். Then it was even worse than my 1st std. நான் ஏன் இலைச்சுட்டன்னு அம்மாஅக்காகிட்ட கேட்டிருக்காங்க. அதுக்கு எனக்குதான் அடி விழுந்துது. நீ அம்மாக்கிட்ட என்ன சொன்ன. அதனாலதான் அவங்க அப்படிகேட்டாங்கன்னு என் உசுர வாங்கிட்டாங்க. மணல வச்சு தொடைல கில்லுறதுல இருந்து dress இல்லாம வெளியில (அதுவும் school busபோகற நேரத்துல) நிக்கவைக்கற வரைக்கும் எவ்வளவோ கொடுமை.
இப்படியே போய்ட்டு இருந்த lifeல நான் எதிர்பார்க்காத அந்த நாள் வந்துச்சி. எப்பவும் நான் தனியாதான் தூங்குவேன். Sofa காலடி தான்என்னுடைய துணை. Night தூங்கினா அதோட காலைல மாமா கதவு திறக்கற சத்தம் கேட்டுதான் எந்திரிப்பன். அப்படிதூங்கும்போதுதான் ஒரு நாள் என் மேல ஏதோ ஊர்ர மாதிரி இருந்துது. கருப்பாம்பூச்சின்னு நினைச்சு ரொம்ப பயந்தன். கண்ண இருக்கமாமூடிக்கிட்டு பயந்துகிட்டே படுத்துட்டிருந்தன். அது கைவிரல் மாதிரி இருந்துச்சி. அப்புரம் பேயோன்னு நினைச்சன். கண்ண திறக்கவும் பயம்.அக்காவ கூப்பிட அதுக்குமேல பயம். எனக்கு இருந்த தூக்கத்துல ஒன்னும் பன்னாம அப்படியே தூங்கிடலாம்னு கூட நினைச்சன். கொஞ்சநேரத்துல அது பேய் இல்லன்னு confirm பன்னிகிட்டன். ஒரு கட்டத்துல என்னால வலி தாங்கமுடியாம லேசா கண்ண திரந்து பார்த்தன்.இருட்டுல ஒரு ஒருவம்தான் தெரிஞ்சுது. ஆனா யாருன்னு தெரியல. நான் பயத்துல அழுவ ஆரம்பிச்சுட்டன். என் அழுக சத்தம் கேட்டு"ஒன்னும் இல்ல அழுவாத. நான் தான்" னு சொல்லிட்டு போய்ட்டான். என்ன நடந்ததுன்னும் தெரியாம யார் அதுன்னும் தெரியாம nightஎல்லாம் அழுதுகிட்டே இருந்தன். அடுத்த நாள் காலைல யாரோ புதுசா ஒருத்தர் இருந்தார். அக்காதான் அது அவங்களோட தம்பினுசொன்னங்க. அப்போ இந்த கழுதைக்கு(அங்க என்ன அப்படிதான் கூப்பிடுவாங்க) முறை எல்லாம் தெரியாது. Night நான் பார்த்தது இவங்களதானா இல்ல வேற யாராவதான்னு ஆயிரம் குழப்பம். அழுது அழுது யோசிச்சி யோசிச்சி எனக்கு காய்ச்சல் வந்ததுதான் மிச்சம். அதுவே இரண்டுநாள்ல மஞ்சள் காமாலைன்னு தெரிஞ்சுது.
அப்போ
அவன் மறுபடியும் வந்து அன்னைக்கு night நடந்தது எதையும் யார்கிட்டயும் சொல்லக்கூடாதுனு மிரட்டிடு போய்ட்டான். அதையெல்லாம்சொன்னா அக்கா அடிப்பாங்களோன்னு நானும் சொல்லல. Jaundice வந்ததால என்ன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. கொஞ்ச நாள்லQuarterly leave வந்துச்சி. அப்போ எங்க தெருவுல எல்லா பிரண்ட்ஸ்ம் ஒன்னா விளையாடுவோம்(விளையாடுவாங்க). அப்போ அங்க என்பக்கத்து வீட்டு அண்ணன் என்மேல ரொம்ப பாசமா இருந்தாங்க. I really got terrified on every guys i see. Little by little he made me understand his affection. I felt as my brother is back. நாங்க எல்லாரும் ஒன்னா இருக்கும் போது எல்லாம் அவங்க எங்கூட தான் இருப்பாங்க. அவங்களுக்கு என்மனசுல ஏதோ பிரச்ச்னை இருக்குன்னு தெரிஞ்சி எஙகிட்ட நோண்டி நோண்டி கேட்க ஆரம்பிச்சாங்க. எனக்கு அங்க இருக்க பிடிக்கல. அக்காரொம்ப அடிக்கராங்க, எனக்கு அம்மாக்கிட்ட சொல்லவும் பயமா இருக்குன்னு சொன்னன். நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கறன். நீ பயப்படாமஇருன்னு சொன்னாங்க.
அப்புறம் மறுபடியும் அந்த நரகத்துக்கு வந்தன். அப்படியே போய்ட்டு இருந்துச்சி. திக்கு தெரியாத நேரத்துல எப்பவாச்சும் சனி ஞாயிறு (He was a engg student then) அவன் வந்து என்ன கசக்கி பிழிஞ்சுசுட்டு போவான். எங்க ஊர்ல அந்த அண்ணன் தாத்தாகிட்ட (அவங்களும்தாத்தாவும் நல்ல நண்பர்கள்) ஏதேதோ சொல்லி தாத்தா அம்மாக்கிட்ட சொல்லி அம்மா அப்பாக்கிட்ட சொல்லி ஒருவழியா அடுத்த வருஷம்விழுப்புரத்துல(My native s near Villupuram) சேர்த்துக்கலாம்னு சொன்னாங்க.
Then life was good thr from my 3rd std. It was the first time that am staying with my parents & my sweet brother. Bt still i couldn't find comfortable with them. Thr was something within my heart that was a barrier between us. It took almost 2 or 3 yrs to get back my life.
Long after when i came to know from my friends abt the relationship b/w a men n women i was terribly shocked knowing wat was happened to me. I became like a mad. I started hating every men i look. Even my brother & father. Life was very worse. I won't talk wit any1. I dono the way to show my anger. Then it turned towards sports. I started participating in every event as i've to win everything. As i hated humans i started loving games since i'll be fighting with humans.
Soon after i became a football player representing my school team. It was my football coach(Although he's a men) who changed my thought and every wrong thinkings i had. Also two of my friends Sahul & Karunagaran changed me a lot and made me to concentrate in my studies. Karunagaran was the first guy i was talkin in school. Only b'cos of him i changed my thought of guys. Now my life s jus the reverse. Living happily with my family & friends(Also ur poems). Jus NJoying every minute.

Regards,
XXXXX

P.S: நண்பர்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, July 01, 2009

நின்னைச் சில வரங்கள் கேட்பேன்




தேடிச் சோறுநிதந் தின்று -
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி -
மனம் வாடித் துன்பமிக உழன்று -
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து -
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி -
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் -
பல வேடிக்கை மனிதரைப் போலே -
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?
நின்னைச் சில வரங்கள் கேட்பேன் -
அவைநேரே இன்றெனக்குத் தருவாய் -
என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் -
இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் -
இனி என்னைப் புதிய உயிராக்கி -
எனக்கேதுங் கவலையறச் செய்து -
மதிதன்னை மிகத் தெளிவு செய்து -
என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!

-மகாகவிஞன்.