Friday, February 26, 2010

அதீதத்தின் ருசி: இறைநிலையின் உச்சம்

 


உயிர்மை வெளியீடாக வெளிவந்திருக்கும் கவிதை நூல் கவிஞர்.மனுஷ்ய புத்திரனின் “அதீதத்தின் ருசி”. இதற்கு முந்தைய அவரது கவிதையுலகிலிருந்து வெகுவாக தனித்து நிற்கும் நூலாக இந்நூல் விளங்குகிறது.தொகுப்பில் உள்ள எந்தவொரு கவிதையிலும் வசீகரச் சொல்லோ அல்லது கவித்துவமிக்க வரிகளோ காணமுடியவில்லை மாறாக வெகு இயல்பான ஓர் உரையாடலை போலவும் மிகவும் யதார்த்தமான மொழிநடையாலும் கவிதைகள் நம்மை உள்ளிழுத்துக் கொள்கின்றன. ஒவ்வொரு கவிதையின் பாடுபொருளும் மிகவும் தனித்துவமானவை. ஒவ்வொரு கவிதையின் கடைசி வரியிலிருந்து அடுத்த கவிதைக்குள் நுழைவதற்கு சிறிதேனும் அவகாசம் தேவைப்படுகிறது. காரணம் கடைசி வரியில் அவர் உருவாக்கும் வெளியில் பயணப்பட்டு,ரணப்பட்டு,நெகிழ்ந்து,உருகி,அத்வைதம் அடைந்து,பிறழ்ந்து,பூவாகி,கொடும் தேளாக உருமாறி,பரவசநிலையின் உச்சம் தொட்டு மீண்டும் நம்மிடம் வரும்போது நம் மனதையே நாம் விசித்திரமானதொரு பறவையை பார்ப்பதுபோல் பார்க்கிறோம். 

கோடைகால இரவுகளில் எழுதப்பட்ட இக்கவிதைகளில் பகலின் வெம்மையும் இரவின் குளிர்மையும் ஒருசேர உணரமுடிகிறது.  தொகுப்பின் முதல் கவிதை ‘சிநேகிதிகளின் கணவர்கள்’ வெளியான சமயத்தில் பெரும் சிலாகிப்புக்கு உள்ளானது. குறிப்பாக,
“ஒரு சிநேகிதியை /“சிஸ்டர்” என்று அழைக்கும் / ஒரு ஆபாச கலாச்சாரத்திலிருந்து / எப்படித் தப்பிச் செல்வது என்று”
என்று முடிகிற இடத்தில் நம் கலாச்சாரத்தையும்,கலாச்சாரம் என்கிற முகமூடியில் நாம் மறைத்துவைத்திருக்கும் அபத்தங்களையும் அறைந்து செல்கிறார். திருமணமாவதற்கு முன்பு வரை “டி”யாக இருந்தவள் திருமணத்திற்கு பிறகு “ங்க”வாக மாறிப்போகும் முட்டாள்த்தனத்தை இந்த இருவரிகளை விட சிறப்பாக சொல்ல முடியுமா?
"பரிசுத்தத்தின் பயன்பாடு" என்ற கவிதையின் கடைசி வரி ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயான அந்நியத்தனத்தை,உறவின் இணக்கமின்மையை மிக அற்புதமாக வெளிப்படுத்துகிறது. பயன்படுத்தப்படாத பொருளாகிப்போன முத்தத்தால் என்ன பயன்? இதழ்களின் வழியே பகிரப்படும் மகத்துவமான நேசத்தை வேறெப்படி பகிர்ந்துகொள்வது? பல கேள்விகளை வாசகனுக்குள் வீசிப்போகிறது இந்தக் கவிதை.
“அமிர்தவல்லியின் குறிப்புகள்” என்றொரு கவிதையை வாசித்து முடித்தவுடன் எங்கள் கிராமத்தில் சிறுவயதில் நான் கண்டு வியந்த கனிப்பாட்டி என்பவர் ஞாபகத்திற்கு வந்தார்.அவரால் உணவருந்தாமல் இருந்துவிட முடியும். அவரால் உறங்காமல் பொழுதை கழித்துவிட முடியும். ஆனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. பேச்சு பேச்சு எப்பொழுதும் பேச்சு. எதைப்பற்றியாவது,யாருடனாவது,எதற்காகவாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும்.ஊரில் நடக்கும் விஷயங்களை பற்றிய பேச்சு முடிந்தவுடன் நடக்காத அல்லது இனி நடக்கக்கூடிய சாத்தியங்களுடைய பேச்சை ஆரம்பித்துவிடுவார். இப்பொழுது அவருக்கு 75 வயதுக்கு மேலாகிறது. இன்றும் பேச்சு ஒன்றே அவரது தனிமையை அவரது வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
இந்தக்கவிதையின் கடைசி பத்தி
“எல்லாவற்றையும் குறிப்புகளாக
மாற்றிவிடுவதல் மூலம்
எதையும் நினைவில் வைத்திருப்பதன்
துயரத்திலிருந்து
முற்றாக விடுதலை அடையலாம்
என அவள் எப்போதாவது கருதினாளா
என்பதும் தெரியவில்லை”
என்று முடிகிறது., குறிப்புகளுடன் வாழ்ந்த அமிர்தவல்லியும் பேச்சுடன் வாழும் கனிப்பாட்டியையும் பிரித்துப்பார்க்க முடியவில்லை. ஏதோவொரு செயலை நம் துயரத்திலிருந்து விடுதலை அடைவதற்காக நாம் மேற்கொள்கிறோம் சிலருக்கு அது குறிப்புகள்,சிலருக்கு கவிதைகள் சிலருக்கு பேச்சுகள்.
ஒரு தலைமுறை இடைவெளியை ஒரே வரியில் சொல்லிவிடமுடிகிற வித்தை இவருக்கு வாய்த்திருக்கிறது. வார்ப்பு கவிதை இந்தத் தொகுப்பில் என்னைக் கவர்ந்த கவிதைகளில் மிக முக்கியமானது. குழந்தைகளின் உலகில் நாம் பிரவேசிப்பதேயில்லை. பலூனைவிட பலூனை உடைப்பதில்தான் ஒரு குழந்தையின் குதூகலம் அதிகரிக்கிறதென்பதை நாம் உணர்ந்துகொள்வதேயில்லை. சோற்றை தரையில் கொட்டிவிட்டால் அடிக்கிறோம். தரையில் சிந்தாமல் ஒழுங்காக சாப்பிட்டால் அது குழந்தையே இல்லை என்பதை உணர மறுக்கிறோம். நம் கனவுகளை குழந்தைகளின் முதுகிலேற்றி நாம் நினைத்து நிறைவேறாமல் போனவற்றை குழந்தைகளின் வழியே நிறைவேற்றிக்கொள்ள துடிக்கிறோம். எவ்வளவு அற்பத்தனம் நிரம்பிய செயல் இது. இந்தக் கவிதையில் “நம்மைப்போல் அல்லாமல்” அவர்கள் துல்லியமாக நேர்த்தியாக வலிமையாக வளர்கிறார்கள் என்று முடித்திருக்கிறார்.அற்புதம் என்ற ஒற்றை சொல் இந்தக்கவிதையின் வெற்றிக்கு பொருத்தமானதாக இருக்கும்.


‘கடைசிக்கோப்பை’,’மழைமிருகம்’,’அதீதத்தின் ருசி’,’அழும்போது அழகாக இருக்கும் பெண்’,’வரலாறு எனும் பைத்தியக்கார விடுதி’,’இளமையில் தேவதையாக இருந்தவர்களுக்கு’ என பல கவிதைகள் மனதைத் தொடுவதாக, மனதிற்கெட்டாத பாடுபொருளை கொண்டவையாக, சமகால அழிவைப் பற்றியதாக எழுதப்பட்டிருக்கின்றன. ஏழு மாதங்களில் 250 பக்கங்களுக்கு கவிதைமழையை பொழிய வைத்தக் காரணி எதுவாக இருக்கும்? வெவ்வேறு மனிதர்களை,வலிகளை,கொண்டாட்டங்களை எழுதியிருப்பதாகக் கவிஞர் முன்னுரையில் சொல்லியிருந்தாலும் இதற்கப்பால் இவைகளை எழுத ஏதோ ஓர் உந்துசக்தி அல்லது இறை இவருக்குத் துணைபுரிந்திருக்க வேண்டும்.
 
அதீதத்தின் ருசி – இறைநிலையின் உச்சம் என்றே சொல்லத் தோன்றுகிறது.
நூலின் பெயர்: அதீதத்தின் ருசி
ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.150
பக்கம்: 246 
- நிலாரசிகன்


6 comments:

said...

இறைநிலையே ஒரு மோசடித்தனம் இதுல இறைநிலையின் உச்சம் வேறயா..
வெலங்கன மாதிரிதான்..

பரமு

said...

ஓ அப்படியா!

said...

வாங்கிவைத்து புத்தகத்தைக் கொஞ்சம் திறந்துபாரடா என நினைக்கவைக்கும் பகிர்வு. நன்றி நிலா.

said...

சமீபத்தில் படித்த கவிதைத் தொகுதிகளில் நிரம்பவும் பிடித்த ஒன்றைப் பற்றிய உங்கள்
விமர்சனமும் நன்று.

said...

நல்ல விமர்சனம் நிலாரசிகன்

said...

அப்படியே அவங்கவங்க மனசுக்குள்ள கையவிட்டு, எடுத்து எடுத்துப்போட்டு வார்த்தைகளாக்கி, கோர்வையாக்கி தரும் சூட்சுமம் கொண்டவை மனுஷ் கவிதைகள்.மைதானத்தைக் கடக்கும் அணில்,சிறிய புகழுள்ள .., போன்ற இன்னும் நிறைய சிறந்த கவிதைகள் கொண்ட தொகுப்புதான் இது.

ஆக்கப்பூர்வமாக படித்துமுடித்துவிட்டு, விமர்சனம் செய்திருக்கிறீர்கள்.

இம்மாத கவிதைகளைப் படித்துவிட்டீர்களா?