
அவர் ஒரு அமெரிக்க மூதாட்டி. அவருக்கு எப்படி கிரிக்கெட் தெரிந்தது? விசாரித்தவுடன் அவர் சொன்னவிஷயம் கேட்டு எங்ளுடன் விளையாடிய மற்ற இரு அமெரிக்கர்களே வியந்துபோனார்கள். அந்த மூதாட்டியின் பேரன் இங்கிலாந்தில் படித்துக்கொண்டிருக்கும் மாணவன். அவனுக்கு கிரிக்கெட் அறிமுகமானது அங்கேதான். அது மட்டுமின்றி சச்சினின் தீவிர ரசிகன் அவன். விடுமுறைக்கு அமெரிக்கா வந்தபோது சச்சின் விளையாடிய போட்டி ஒன்றின் டிவிடியை கொண்டு வந்திருக்கிறான். தன் பாட்டிக்கு கிரிக்கெட் பற்றியும் சச்சின் பற்றியும் சொல்லி இருக்கிறான். அந்த மூதாட்டி விடைபெறும் போது சொன்னார் "இந்தியாவுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறேன் - சச்சினின் ஆட்டத்தை மைதானத்தில் பார்க்க".
கிரிக்கெட் வாசமே இல்லாத அமெரிக்காவில் சச்சின் பற்றி தெரிந்திருக்கிறதென்றால்,இதற்கு மேல் சச்சின் பற்றி என்ன சொல்ல? 30,000 சர்வதேச ரன்கள். டபிள்யூ.ஜி.கிரேஸ்,ஜேக் ஹாப்ஸ்,பிராட்மேன்,பாய்க்காட்,க்ரகாம் கூச் இவர்களெல்லாம் முதல்தர போட்டிகளில் பல ஆயிரம் ரன்களை கடந்தது நூற்றிற்கும் மேற்பட்ட சதங்களை அடித்தவர்கள். 16 வயதில் சர்வதேச போட்டிகளில் விளையாட வந்துவிட்டதால் அதிக முதல்தர போட்டிகளில் சச்சின் விளையாடியதில்லை. ஆனால் முப்பதாயிரம் ரன்கள் சர்வதேச அணிகளுக்கு எதிராக எடுத்திருக்கிறார் எனில் சந்தேகமின்றி பிராட்மேனுக்கு அடுத்த மிகச்சிறந்த வீரர் சச்சின் தான்.சச்சினுக்கு வாழ்த்துகள்.
-------------------------------------------------------------------------
இந்த வார ஆனந்த விகடனில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் சிறுகதை "புதுப் பெண் சாதி" வெளியாகி இருக்கிறது. ஒரு நாவலை சிறுகதையாக எழுதி இருப்பதாகவே தோன்றுகிறது. இலங்கையில் ஒரு மளிகை கடை வைத்திருப்பவனின் மனைவியை பற்றிய கதை. கதையினூடாக இலங்கையின் அன்றைய நிலவரத்தை(1989) சுட்டிக்காட்டிய விதம் அருமை. கதையின் முடிவும் ரசிக்கும்படி இருந்தது. கச்சிதமாக சிறுகதை எழுத இந்தக்கதையை உதாரணமாக சொல்லலாம்.
ஆனந்த விகடனுக்கு ஒரு கேள்வி. நட்சத்திர எழுத்தாளர்கள் ஏற்கனவே பெயர் பெற்றவர்கள். அவர்களது படைப்புகளை கேட்டு வாங்கி வெளியிடுவதில் என்ன பயன்? இளம் எழுத்தாளர்களுக்கு ஆ.வி ஒரு களமாக செயல்படலாமே?
---------------------------------------------------------------------------
பா.திருச்செந்தாழையின் "வெயில் நண்பன்,பிராத்தனை ஒரு பிரதேசம்" சிறுகதை தொகுப்பை வாசித்தேன். இவரது மொழி வசீகரிக்கிறது. ஒவ்வொரு வரியும் கவனமாக செதுக்கப்பட்ட சிற்பமாகவே தோன்றுகிறது.உமா மகேஷ்வரியின் சிறுகதைகளுக்கு பின் தனக்கென தனிமொழியை கையாளும் சிறுகதையாளராக பா.திருச்செந்தாழையை சொல்ல முடியும். பதிவர் மண்குதிரை இந்த நூலை பற்றி விரிவாக எழுதி இருக்கிறார்.பிடித்த வரிகள் சில:
"நினைவுகளின் குப்பைக்கூடையாய் நான் இருப்பதாக உணர்வதற்குச் சில காரணங்களிருக்கின்றன. எந்த வேலையையும் ஆயுளுடன் பிணைத்துக் கனவு காணாமல் அனுபவங்களின் வெவ்வேறு பக்கமாய் மாற்ற முயன்று ஊடுநரைகள் எழத்துவங்கிய இந்த வயதிலும் நிலையற்ற வாழ்வுடனும், திருப்தியுறா மனநிலையுடனும் நகரின் வெவ்வேறு சந்திப்புகளில் சாலையைக் கடப்பதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். சில நிகழ்வுகளின் மெளனசாட்சியாகவும், இன்னும் சிலவற்றின் மையப்புள்ளியாகவும் ஆனவிதம் நிறைகின்றது நாட்களின் பல கணங்கள். "
"""காலம் ஒரு திருடனைப் போல அவளது வனப்புகளைக் களவாடிச் சென்றுவிட்டிருந்தது"
இன்று திருச்செந்தாழையின் திருமணம். வாழ்த்துகள் பல :) --------------------------------------------------------------------------------
வேலை இழந்தவனின் நாட்குறிப்பில் தகிக்கும் கோடை என்றொரு பதிவு இரு மாதங்களுக்கு முன்பு எழுதி இருந்தேன். தகிக்கும் கோடை பாலையாக உருப்பெற்றிருக்கிறது.
உடல்
மனம்
இருத்தல்
இயல்பு
எதுவுமற்று
நான்...
-நிலாரசிகன்.
4 comments:
நன்றாக எழுதி இருக்கின்றீர்கள். பா.திருச்செந்தாழையின் வாசிக்க ஆவலாக உள்ளது. மண்குதிரை பதிவின் போதே இந்த எண்ணம் வந்தது. இப்போது அது மிக வலுவடைந்து விட்டது.
நன்றி லாவண்யா.
திருச்செந்தாழையின் நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
அருமை நிலா. பகிர்விற்கு நன்றி..
//தகிக்கும் கோடை பாலையாக உருப்பெற்றிருக்கிறது//
:(
Post a Comment